ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மேக்கேதாட்டுவில் மார்ச் 7 முற்றுகைப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு


கர்நாடக அரசு காவிரியில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மார்ச் 7-ஆம் தேதி மேகதாதுவில் முற்றுகைப் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், துணைத் தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை கர்நாடக மாநில அரசு அணை கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாதுப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு, வியாழக்கிழமை ஒசூர் வந்தனர்.

அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடக மாநில அரசு மேகதாது அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஒண்டிகுண்டா, ராசிமணல் ஆகிய இரண்டு இடங்களில் அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. அதாவது, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையின் உபரி நீர் வெளியேறும் இடத்தில் அர்காவதி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இரு அணைகளைக் கட்டினால் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். இதனால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை மதித்து தண்ணீரைத் திறந்துவிடாத கர்நாடக முதல்வர் சித்தராமையா தற்போது, இந்த இரு அணைகளைக் கட்டினால் தமிழகத்துக்குத் தர வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீரை முறையாகத் தருவோம் எனக் கூறுகிறார்.

இதுவரை தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதே கிடையாது. கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும்போது உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்கு வருகிறது.

காவிரியில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அணை கட்டக் கூடாது. ஆனால், அதையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டத் திட்டமிட்டு வருகிறது.

இந்த இரு அணைகளைக் கட்டினால் கர்நாடகத்தில் 12 லட்சம் ஏக்கர் பாசன வசதியைப் பெறும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையில் 25 அதிகாரிகளை நியமித்துள்ளது.

இந்த அணைகள் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து மார்ச் 7-ஆம் தேதி கர்நாடக மாநிலம், மேகதாது பகுதிக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சுமார் 10 ஆயிரம் விவசாயிகளுடன் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு தமிழ் தேசிய முன்னணி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக உழவர் முன்னணி, ஆகியவை ஒருங்கிணைந்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் புதியதாக சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இந்த இரண்டையும் உடனடியாக அமல்படுத்தக் கோரியும், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்
(நன்றி : தினமணி)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.