ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசிய நாள் - வரலாறு



கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது வரலாற்றின் இயங்கியல் என்பர் அறிஞர்கள்!

திருப்புமுனை என்று சொல்லிக் கொள்ளாமலே சில மாநாடுகள் திருப்பு முனையாக அமைந்து விடுவதுண்டு.

அப்படித்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு அமைந்து விட்டது. “தமிழ்த் தேசியம்’’ இப்போது தனித் தன்மை யுள்ள ஒரு கருத்தியலாக வளர்ந்துள்ளது. ஒரு கருத்திய லாக மட்டுமின்றி அதற்கான அமைப்பு வலிமையும் வளர்ந்து வருகிறது. இதற்கான அடித்தளமிட்டது 1990 பிப்ரவரி 25 மாநாடு!

1980 களிலும் 1990 இன் தொடக்கத்திலும் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும் உச்சத்தில் இருந்தன. தமிழினம் இனப்படுகொலை செய்யப்படுகிறது. நம்முடைய தமிழினம் தனிநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பிய காலம் அது!

ஆனால் அவ்வுணர்ச்சி, தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒடுக்கப்படுவதைப் பற்றிய கவனம் இல்லாமலேயே வெளிப்படுத்தப்பட்டது. தேசிய இனங்கள் தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை படைத்தவை என்ற வாதங்களை முன் வைத்துத் தமிழ் ஈழம் அமைப்பதை ஞாயப்படுத்தும் தலைவர்கள், பேச்சாளர்கள் அனை வரும் அதே ஒடுக்குமுறை, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இருப்பதைப் பற்றியோ, தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதைப் பற்றியோ பேசுவதில்லை.

தமிழ்த் தேசியபக் பேரியக்கத்(அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) தலைமைத் தோழர்கள் இது பற்றி கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குரிய தமிழ்த் தேசியம் என்ற அடித்தளத்தின் மீது நிற்காத தமிழீழத் தேச ஆதரவு உறுதியானதாகவும், பெரு வீச்சுள்ள தாகவும் இருக்காது என்றும் பேசினோம்.

நாங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்பிலிருந்து வெளியேற முடிவெடுத்து அக்கட்சிக்குள் இருந்து கொண்டே, கல்லணையில் கமுக்கமாகக் கூடி விவாதித்தோம். இரண்டு நாள் நடந்த விவாதத்தில் எழுத்து வடிவில் வைக்கப்பட்ட ஓர் ஆவணம் தமிழகத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றியது. மற்ற அடிப்படை விவரங்களும் அங்கு பேசப்பட்டன. நாங்கள் சி.பி.ஐ.(எம்) கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு / வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய பின் முதல் முதலாக வெளியிட்ட நூல் அதே கல்லணை ஆவணம்தான். நூல் வடிவில் அதன் பெயர்  “இந்தியாவில் தேசிய இனங்கள்’’  அந்த ஆவணத்தை அப்போது நான் எழுதியிருந்தேன்.

நாங்கள் தனி அமைப்பு கண்ட பிறகு, தமிழ்த் தேசியக் கருத்தியல் எங்களிடையே கூடுதல் முகாமைப் பெற்றது. அப்பொழுது எங்கள் அமைப்பின் பெயர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி,  சுருக்கமாக எம்.சி.பி.ஐ.

ஈழத்தமிழர் ஆதரவு, காவிரி உரிமை மீட்பு, தமிழ் உரிமைக் காப்பு போன்ற பல தளங்களில் பலப் போராட்டங்களை எம்.சி.பி.ஐ. நடத்திக் கொண்டிருந்தது. அந்நிலையில் மக்கள் விடுதலைக்கான முதன்மைப் புரட்சி முழக்கம் எது என்ற வினா? அப்போது கட்சிக்குள் எழுந்தது.

அதற்கு விடைகாண அக்கட்சியின் தமிழக சிறப்புப் பேரவை 12.11.1989 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற அந்தச் சிறப்புப் பேரவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கட்சியின் முன்னணிச் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

செயற்குழுவின் சார்பில் தீர்மானத்தை முன்வைத்து தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கமளித்தார். ஆழ்ந்த அக்கறையோடும், உற்சாகத்தோடும் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசிய நிர்ணய உரிமை’’ என்பதே  மக்கள் புரட்சியின் முதன்மை முழக்கம் என அச்சிறப்புப் பேரவை முடிவு செய்தது. இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது என முடிவானது.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கட்சி சார்பின்றி தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டங்களில் முனைந்து ஈடுபட்டு வந்தார். நாங்களும் தோழர் சுப.வீ அவர்களும் தமிழகத் தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்கான மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்தோம்.

அதற்கான கலந்தாய்வுக் கூட் டம் சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தின் சிற்றரங்கில் 1989 நவம்பர் மாதம் நடத்தினோம். அதில் பாவலர் இன்குலாப், பாவ லர் தணிகைச் செல்வன், பேராசி ரியர் சுபவீரபாண்டியன், தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் இராசேந்திரசோழன், தோழர் உதயன், காலஞ்சென்ற பேரா. முனைவர் ந. பிச்சமுத்து, பாவலர் அறிவுமதி, தோழர் அ.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நான் மாநாட்டு நோக்கங்களை விளக்கி முன்மொழிவாகப் பேசி னேன். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.

“தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு’’ என்ற பெயரில் மாநாடு நடத்துவது என முடிவானது. சுயநிர்ணயம் என்பது தமிழ் இல்லை என்பதால் அதனைத் தன்னுரிமை என்று மாற்றிக்கொள்வது என்று முடிவானது.  தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு 1990 பிப்ரவரி 25இல் சென்னை பெரியார் திடலில் நடத்துவது என்று முடிவானது.

பின்னர் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் திருவல்லிக்கேணி அரசு அலுவலர் ஒன்றியக் கட்டடத்தில் நடந்தது. தோழர் அ.பத்மநாபன் வரவேற்புக்குழு தலைவராகவும், தோழர் வண்ணை நக்கீரன், வரவேற்புக்குழு செயலாளராகவும், முடிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் எம்.சி.பி.ஐ. தோழர்கள். பேராசிரியர் முனைவர் ந.பிச்சமுத்து அவர்கள் திருவல்லிக்கேணி பாரதிசாலையிலுள்ள தமது சக்தி புத்தக நிலையத்தை வரவேற்புக்குழு அலுவலகமாக வைத்துக் கொள்ள அனுமதி தந்து உதவினார். சக்தி புத்தகக் கடையின் மாடியில் சீ சைடு லாட்ஜ் இருந்தது. அதில் ஓர் அறையை வாடகைக்கெடுத்து, அதில் தங்கி மாநாட்டு வேலைகளைச் செய்தோம்.

மாநாட்டைப் பொதுத் தன்மையுடன் “இன்னணம் - வரவேற்புக்குழு’’ என்று போட்டு நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். பேராசிரியர் சுப.வீ., பாவலர் இன்குலாப், போன்றவர்களும் இணைந்து நடத்தப்படும் மாநாடு கட்சி சார்பின்றி பொதுத்தன்மையில் நடத்தப்படுவதே பொருத்தம். கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மாநாட்டிற்கு வருவதற்கும் இந்தப் பொதுத்தன்மை வாய்ப்பளிக்கும். இம்மாநாட்டை முன் மொழிந்தது மற்றும் இதை நடத்துவதில் அமைப்பு வழிப்பட்ட ஆற்றலாக இருந்தது எம்.சி.பி.ஐ. என்றாலும் பொதுத்தன்மையுடன் நடத்த முன் வந்தது எம்.சி.பி.ஐ. அணுகுமுறையிலும் சனநாயகத் தன்மையைக் காட்டியது.

சுப.வீ அவர்கள் கடுமையாக உழைத்தார் நண்பர்களைத் திரட்டினார். 1990 பிப்ரவரி 25 அன்று பெருந்திரளான உணர்வாளர்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் கூடியிருந்தனர். எம்.சி.பி.ஐ. தோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் மற்றும் ஊர்திகள் எடுத்து, ஆண்களும் பெண்களுமாக வந்திருந்தனர். மதுரையிலிருந்து புரட்சிக்கவிஞர் பேரவைத் தோழர்கள் நெய்வேலியிலிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஊர்திகள் எடுத்து வந்திருந்தனர். சென்னை புது வண்ணைப் பகுதியிலிருந்து “தாகம்’’ தேநீரகம் வைத்திருந்த தோழர்கள் சிறப்பாக சுவரெழுத்து விளம்பரங்கள் செய்தி ருந்தனர். மாநாட்டிற்கும் வந்தனர். தாகம் இதழ் செங்குட்டுவன் ஜூனியர் விகடன் திருமாவேலன் ஆகியோர் அந்தத்  தாகம் அமைப்பில் இருந்த னர். இவர்கள் தோழர் சுபவீ அவர்களின் தொடர்பில் வந்தவர்கள்.

முற்பகல் நிகழ்வு தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் எழுச்சி இசையுடன் தொடங்கியது. தோழர் அ.பத்மநாபன் வரவேற்புரைக்குப்பின் எம்.சி.பி.ஐ தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் சௌ. வேணுகோபால் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. பின்வரும் விவரப்படி கருத்தரங்கம் நடைபெற்றது.

பேரா. முனைவர் சுப.வீரபாண்டியன் - தமிழ்த் தேசிய இன எழுச்சி வரலாறும் படிப்பினைகளும்,  தோழர் காரல்தாசு - தேசிய இனப் போராட்டம் உலகு தழுவிய அளவில், கவிஞர் இன்குலாப் - தேசிய இனப்போராட்டம் இந்திய அளவில், தோழர் அசுவகோசு - தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?, கவிஞர் தணிகைச்செல்வன் - தேசிய இனப்பிரச்சினைகளும் வர்க்கப் போராட்டமும், தோழர் கி.வெங்கட்ராமன் - தன்னுரிமை கொண்ட தமிழகத்தில் தமிழர் களின் புது வாழ்வு. 

பல கோணங்களில் நின்று தேசியத் தன்னுரிமைக் கொள்கையை விளக்கும் ஆழமான உரையரங்கமாக இது திகழ்ந்தது.

பின்னர் மதுரைத் தோழர் இராஜன் தலைமையில் மாணவர் அரங்கம் நடந்தது. மாணவர்கள் செகதீசுவரி (சென்னைப் பல்கலைக்கழகம்), ரவி (காஞ்சிக் கலைக் கல்லூரி), இராமகிருட்டிணன் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரி), செயச்சந்திரன் (சென்னைப் புதுக் கல்லூரி), சிற்றரசு (கோவை அரசுக் கல்லூரி), வாசுதேவன் (கிண்டி தொழிற்பயிற்சி நிலையம்), சி.வெற்றிவேல் (தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்), கரு.கணேசன் (சென்னை சட்டக் கல்லூரி), த.பொன்னுசாமி (சென்னைப் பல்கலைக்கழகம்), முனுசாமி என்கிற தமிழ்நம்பி (திண்டிவனம் கோவிந்த சாமி அரசினர் கலைக் கல்லூரி) ஆகியோர் உரையாற்றினர். சிறுவன் பாரதி வசந்தனின் (இப்பொழுது திரைப்படக் கவிஞர் யுகபாரதி) கவிதை வீச்சு இடம் பெற்றது.

காஞ்சி கவிஞர் அமுத கீதன் எழுதி இயக்கிய “உரிமை முழக்கம்’’ நாடகம் நடந்தது. காஞ்சி கலைக் குழுத் தோழர்கள் பாவெல், ச.யோகநாதன் (காஞ்சி அமுதன்), சம்பத்குமார், உலக ஒளி, கோதண்டம், கோ.மணிவர்மா ஆகியோர் நடித்தனர். காஞ்சி கலைக் குழுப்பாடகர்கள் தோழர்கள் பாவெல், சம்பத்குமார், உலக ஒளி ஆகியோர் எழுச்சிப் பாடல் பாடினர்.

உடனடிக் கோரிக்கைகள் குறித்த தீர்மானங்களை முன்மொழிந்து தோழர் குமரி மகாதேவன் (அப்போது தமிழர் தேசிய இயக்கம்), ஆண்டன் கோமஸ் (கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுத் தலைவர்), நெய்வேலி மு. செந்திலதிபன் (இப்போது ம.தி.மு.க., தத்துவ அணிச் செயலாளர்),  க. பழநிமாணிக்கம் (எம்.சி.பி.ஐ., தஞ்சை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வுகளுக்கிடையே எனது “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ என்ற நூலின் இரண்டாவது பதிப்பை முனைவர் ந.பிச்சமுத்து வெளியிட ஈகி கன்னியாகுமரி பி.எஸ்.மணி பெற்றுக்கொண்டார்.

பாவரங்கில் பாவலர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, இருவரும் எழுச்சிமிகு பா படித்தனர்.

நிறைவாக, சிறப்பரங்கம்; அதன் தலைமை நான் (பெ. மணியரசன்).

சிறப்புரை: திரு பழ. நெடுமாறன் அவர்கள். அப்போது அவர் தமிழ் ஈழம் சென்றிருந்ததால் தமது உரையை எழுதி தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பரந்தாமன் வசம் கொடுத்தனுப்பியிருந்தார்கள். தோழர் பரந்தாமன், ஐயா அவர்களின் உரையைப் படித்தார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் மராத்திய மாநில அமைப்பாளர் திரு வெ. பன்னீர்செல்வம், கர்நாடகத் தமிழர் பேரவைத் தலைவர் திரு ப. சண்முகசுந்தரம், ஈழத்தமிழர் சார்பில் எம்.கே. ஈழவேந்தன், திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன், வெகுமக்கள் சமுதாயக் கட்சித் தலைவர் நகைமுகன், தெற்கெல்லை மீட்புப் போராளி ஈகி கன்னியாகுமரி பி.எஸ். மணி, திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பேரா. தீரன், தமிழறிஞர் சாலை இளந்திரையன், நிறைவாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் பேசினர்.

நான் எனது தலைமையுரையில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை” (Right to self determination with right to secede) என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினேன். இதற்கான வரைவுத் தீர்மானம் 1 1/2 மாதத்திற்கு முன்பாக அச்சிட்டுக் குறுநூலாக வெளியிடப்பட்டது. காங்கிரசு உட்பட எல்லாக்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது. துக்ளக் உட்பட பல ஏடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

தமிழகமெங்கும் அங்கங்கே உணர்வாளர்கள் கூட்டம் நடத்தி இவ்வரைவுத் தீர்மானத்தை விளக்கிக் கூறினோம். ஐயங்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவற்றைக் கேட்டோம். சில திருத்தங்கள் செய்தோம். அவ்வாறு திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினேன். பேசி முடித்தபின் கருத்துகள் கேட்டேன். சிலர் கருத்துகள் கூறினர். அவ்வாறு திருத்தம் கூறியவர்களுள் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களும் ஒருவர். அங்கே வந்த சில திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இறுதியாகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. ஏற்பிசைவின் வெளிப்பாடாக அரங்கம் அதிர கையொலி எழுப்பினர்.

தீர்மானத்தின் சாரம் இதுதான்:

  • தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்க ளுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமை யுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with right to secede) என்று பெயர் தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ்வுரிமை வேண்டும்.
  • இந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.
  • தேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.
  • குடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழ்த் தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

நிறைவரங்கத்தில் பேசியோர் இத்தீர்மானத்தை ஆதரித்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெங்களூர் அண்ணாச்சி சண்முக சுந்தரம், சாலையார் ஆகியோர் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்று கேட்காமல் நேரடியாக விடுதலையைக் கேட்கவேண்டும். என்றனர்.

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று பேசினார் வழக்கறிஞர் அருள்மொழி. பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும் விட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்க வேண்டும் என்று நான் பேசியதிற்கு மறுமொழியாக இவ்வாறு கூறினார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், மேற்படி வரைவுத் தீர்மானத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் பற்றியும் தேசிய இன ஒடுக்குமுறை பற்றியும், சமூகக் கட்டமைப்பு பற்றியும் ஆய்வாகக் கூறப்பட்ட கருத்துகளை மிகவும் பாராட்டிப் பேசினார்.

தமிழின உரிமைப் போராட்டம் தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதற்காக ஈகங்கள் செய்துள்ளார்கள் தமிழ் மக்களும் தமிழறிஞர்களும் தலைவர்களும்! ஆனால் இலக்கு துல்லியப்படுத்தப்படவில்லை. சமூக அறிவியல்படி சரியான விளக்கங்களும் வரையறுப்புகளும் வழங்குவதில் குறைபாடுகள் நீடித்தன.

தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் வழியாக மீண்டும் தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின உணர்ச்சி - தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு விடுதலை நோக்கித் திரும்புவதில் இம் மாநாடு குறிப்பிடத்தகுந்த பணியைச் செய்துள்ளது என்ற நம்பிக்கையுடன், மனவெழுச்சியுடன் உணர்வாளர்கள் விடைபெற்றனர்.

ஆனால் இவ்வளவு பெரிய மாநாடு பற்றி நாளேடுகள் எதுவும் எழுதவில்லை. மிக விரிவாகச் சுவரொட்டிகள் மூலம் சுவரெழுத்து மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட, விரிவாக வரைவறிக்கை விவாதிக்கப்பட்ட நாளேடு ஒன்றில் விளம்பரம் கொடுக்கப்பட்ட இம்மாநாடு பற்றி நாளேடுகள் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் துக்ளக் கிழமை ஏடு கனமாகக் கண்டு கொண்டது. “இலக்கு பிரிவினை, வழி வன்முறை” என்று தலைப்புக் கொடுத்து இம்மாநாடு பற்றி மூன்று பக்கங்கள் எழுதியிருந்தது. அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் திரு தமிழ்க்குடிமகன் அவர்கள் அம்மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதை மாநாட்டில் படித்தோம். அதையும் சுட்டிக் காட்டி, தி.மு.க. ஆட்சியின் ஆதரவோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று எழுதியது. 

பெருஞ்சித்திரனார் பேச்சு, என் பேச்சு, அருள்மொழி பேச்சு, சுப.வீ. பேச்சு, இன்குலாப் பேச்சு முதலியவற்றில் சிற்சில பகுதிகளைப் போட்டு, இந்தியாவை உடைத்திட பிரிவினைப் போராட்டம் நடத்திட இம்மாநாடு என்று எழுதியிருந்தது.

பாவலர் ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்ற வரிகளைத் தூக்கிப் போட்டுப் “பார்த்தீர்களா வன்முறை நோக்கத்தை” என்று எழுதியது. பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகள் சிலவற்றைப் போட்டது,

“1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் / நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் / அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் / அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. / விடிந்ததும் விழித்துப் பார்த் தோம் / போர்வை இருந்தது. / கோவணத்தைக் காணவில்லை. / தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம்.  /  விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் / வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். / அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!”

இவைதாம் அறிவுமதி பாடலின் அந்த வரிகள்! சில சொற்கள் மாறியிருக்கலாம். துக்ளக் பற்ற வைத்த நெருப்பு பற்றிக் கொண்டது.

அப்போது நடந்த தி.மு.க. ஆட்சியை எதிர்க்க இம்மாநாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.  பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவராக அப்போதிருந்த முரளி மனோகர் சோசி “தி.மு.க. ஆட்சி பிரிவினை சக்திகளை ஊக்கப்படுத்துகிறது” என்று கண்டன அறிக்கை கொடுத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. ஆட்சிக்கெதிராக ஒரு வாரம் நடத்திய பரப்புரையில் “தி.முக. ஆட்சியில் தங்கு தடையின்றி பிரிவினைவாத மாநாடு நடந்திருக்கிறது. கொடுமை என்ன வென்றால் இப்பிரிவினை மாநாட்டை வாழ்த்தி சபாநாயகரே செய்தி அனுப்பியுள்ளார்” என்ற குற்றச்சாட்டைத் தனது துண்டறிக்கையில் கூறியிருந்தது. இதனை அது தனது மாநில செயற்குழுத் தீர்மானத்திலும் கூறியிருந்தது.

தமது ஆட்சி பற்றி பார்ப்பன ஏடுகளில் ஏதாவது குற்றச்சாட்டு வந்துவிட்டால் அதுவும் தமிழினத்திற்குச் சார்பாக இருக்கிறார் என்று வந்துவிட்டால் நடுங்கிப் போவார் கலைஞர் கருணாநிதி. உடனே என் மீது 1967ஆம் ஆண்டின் பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அதேபோல் பாவலர் அறிவுமதி மீது தேசியக் கொடியை அவமதித்த வழக்கைப் பதிவு செய்யச் சொன்னார். இச்செய்தி நாளேடுகளில் வரும்படிச் செய்தார். 

உடனடியாக என்னைத் தளைப்படுத்தவில்லை. வழக்குப் போட்டுக் கணக்குக்காட்டியாகி விட்டது. காவல்துறையினர் இம்மாநாட்டில் நான் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதற்கான சாட்சியங்கள் ஆவணங்கள் அணியப்படுத்தக் காலமெடுத்துக் கொண்டனர்.  1990 டிசம்பர் 24 முன்னிரவில் சிதம்பரத்தில் தளைப்படுத்தி - இரவு அங்கு காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு, டிசம்பர் 25 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.  தோழர் கி.வெங்கட்ராமன் கூடவே சிறைச்சாலை வரை வந்தார். சென்னை நடுவண் சிறையில் என்னை அடைத்தனர்.

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் என் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். சென்னை, சைதையில் தோழர் அ. பத்மநாபன் தலைமையில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசினார். பின்னர் பிணையில் வெளிவந்த போது, பா.ம.க.வின் முன்னணித் தலைவர்களான தோழர்கள் தலித் எழில்மலை (பா.ம.க. பொதுச் செயலாளர்) பு.தா. இளங்கோவன் ஆகியோர் சிறைவாயிலில் என்னை வரவேற்று மருத்துவர் சார்பில் சால்வை அணிவித்தனர். 
இந்திய அரசுக் கொடியை அவமதித்த வழக்கில் தோழர் அறிவுமதி அவர்களும் - பிரிவினைத் தடைச் சட்ட வழக்கில் நானும் எட்டாண்டுகள் எழும்பூர் நீதிமன்றத்தின் மாநகரக் கூடுதல் தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு அலைந்தோம். தீர்மானம் முன் மொழிந்ததை நானும் மறுக்கவில்லை. பாடல் பாடியதை அறிவுமதியும் மறுக்கவில்லை.

எனக்காக வழக்கறிஞர்கள் சென்னை திரு. சி.விசயகுமார் அவர்கள், திரு. தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் ஆகியோர் வாதாடினர். மேற்படித் தீர்மானம் நிறைவேற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என்று வாதிட்டனர். துக்ளக் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. ரமேஷ் வந்து தாம் எழுதியதை உறுதி செய்து சாட்சி சொன்னார். என் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தோழர் அறிவுமதிக்காக வழக்கறிஞர் பாலு வாதாடினார்.  தோழர் அறிவுமதியும் விடுதலை ஆனார். 

ஆனால் தூர்தர்சனில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக இருந்த பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

இவ்வளவு அதிர்வுகளை அந்த மாநாடு ஏற்படுத்தியது.  ஆனால் நாங்கள் எம்சிபிஐ தலைமைக் குழுவில் உள்ளோர் வரைவுத் தீர்மானம் அச்சிட்டு சுற்றுக்கு வெளியிட்ட உடனேயே ஒரு முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டோம். “இந்த மாநாட்டுத் தீர்மானத்திற்காக என்ன அடக்கு முறை வந்தாலும் ஏற்க வேண்டுமே தவிர இந்தத் தீர்மானத்தைக் கைவிடக் கூடாது’’ என்பதுதான் அந்த உறுதி.

அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை மேலும் மேலும் செழுமைப்படுத்தி, தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்துள்ளோம். “தமிழ்த் தேச விடுதலை” என்று முழக்கத்தைக் கூர்மைப் படுத்தியுள்ளோம்!

தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு ஏற்படுத்திய தாக்கம் பல வகையிலானது. ஐயா நெடுமாறன் அவர்கள் அதே ஆண்டு சூன் 9,10 நாட்களில் தஞ்சையில் “தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாடு” நடத்தப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு மாநாடு என்று கூறி தி.மு.க. ஆட்சி அதைத் தடை செய்தது. நெடுமாறன், பாவலரேறு பெருஞ் சித்திரனார், சாலையார், சாலினி யார், தாமரை பெருஞ்சித்திரனார், கி.வெங்கட்ராமன், (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), சுப.வீரபாண்டியன் உட்பட பலர் சிறைப்படுத்தப்பட்டனர்.  த.தே.இ. பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் முருகேசன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார். 

அதன்பிறகு சென்னையில் பாமக நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் “தமிழகத்திற்குத் தன்னுரிமை” கோரித் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது செயலலிதா ஆட்சி! மருத்துவர் இராமதாசு, திரு. பழ.நெடுமாறன், பண்ருட்டி இராமச்சந்திரன், பெ.மணியரசன், சுபவீ, தியாகு, நெல்லிக் குப்பம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

1990 பிப்ரவரியில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்திய போது முதலாளியத்திற்குப் பல்லக்குத் தூக்கப் போவதாக எம்சிபிஐ.யைத் தாக்கி எழுதின சில மார்க்சிய -லெனினிய அமைப்புகள். பின்னர் அவை தன்னுரிமையை ஆதரித்தன. அவற்றில் ஒன்று தமிழ்நாடு விடுதலை வேண்டும் என்று கூறித் தன் அமைப்பின் பெயரையே மாற்றிக் கொண்டது. இன்று ஏராளமான தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளன. 

“எமது தேசிய இனம் தமிழர் / எமது தேசிய மொழி தமிழ் / எமது தேசம் தமிழ்த் தேசம் / இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது இலட்சியம்” என்று வரையறுக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியம்.  

தமிழ்நாடு விடுதலையை அறிவிக்கப்பட்ட இலட்சியமாகக் கொள்ளாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசிய அமைப்பு ஆகாது என்பதே துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு! 

இதன் தொடக்கமாகத்தான் 1990 பிப்ரவரி 25இல் சென்னைப் பெரியார் திடலில் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பிரிந்துபோகும் உரிமை கோரிய தீர்மானம்!

1990லிருந்து தொடர்ந்து தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்து வரும் வாய்ப்பையும் அதனை அடிப்படை இலட்சியமாகக்  கொண்ட வேலைத் திட்டங்களைச் செயல்படுத்திய பட்டறிவையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கு வரலாறு வழங்கியது. 

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் தமிழ்த் தேசியக் களத்தில் முகாமை பெறுகிறது. எனவே, ஆண்டு தோறும் பிப்ரவரி 25 ஆம் நாளைத் தமிழ்த் தேசிய நாளாகக் கடைபிடிக்கலாம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம்  முடிவு செய்து, கடைபிடித்து வருகிறது.

ஐயா பழ. நெடுமாறன், ஐயா பாவலரேறு போன்றோரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டு நாள் அது! தமிழகத்தில் விரிவான கலந்தாய்வுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் அது. பல தரப்பினரையும் கொண்ட மூவாயிரம் தமிழர்கள் பங்கேற்க நடந்த மாநாடு அது! 

இந்த பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் எங்களுக்கு மட்டுமே உரியதென்று நாங்கள் தனியுரிமை கோரவுமில்லை. தமிழ்த் தேசியம் பேசும் அனைவரும் இந்நாளைக் கடை பிடிக்க வேண்டுமென்று திணிக்கவுமில்லை. நாங்கள் கடைபிடிக்கிறோம்! இந்நாளைத் தக்கதென்று கருதும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழர்களும் கடைபிடிக்கலாம்!

(தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் எழுதி, தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2-15-2014 இதழில் வெளியான கட்டுரை இது)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.