ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டை எதிர்த்துப் போராடிய கன்னட இனவெறி அமைப்புகளுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டு!

தமிழ்நாட்டை எதிர்த்துப் போராடிய கன்னட இனவெறி அமைப்புகளுக்குக்
கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டு!

தமிழ்நாட்டிலோ இனத்துரோக அரசியல் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழகத்திற்குரிய காவிரி நீரை மேட்டூர் அணைக்கு வராமல் தடுக்க, சட்ட விரோதமாகக் கர்நாடக அரசு மேக்கே தாட்டுவில் நீர்த்தேக்கங்கள் கட்டுவதைத் தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

இதற்காகத் தமிழ்நாட்டைக் கண்டித்தும் குறுக்கு நீர்த்தேக்க அணைகள் கட்டுவதை விரைவுபடுத்த வலியுறுத்தியும் கன்னட அமைப்புகள் 18.04.2015 அன்று கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடத்தின.

முழு அடைப்பு நடத்திய கன்னட அமைப்புகளின் தலைவர்கள் பெங்களூருவில் பேரணி நடத்தி வாட்டாள் நாகராசு தலைமையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து மனுக்கொடுத்தனர். அம்மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமையா கன்னட அமைப்புகளைப் பாராட்டி பேசியது ஏடுகளில் வந்துள்ளது.

“தமிழக அரசு தேவை இல்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்புக்குப் பணிய மாட்டோம். காவிரியில் அணைகட்டும் முடிவைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை, இதை எதிர்க்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை. எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் முழு அடைப்பு நடத்திய உங்களைப் பாராட்டுகிறேன். உங்களின் பலம் எங்களுக்குக் கூடுதல் பலம் கொடுக்கும் வகையில் உள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே நீர்த்தேக்க அணைகட்டக் கூடாது என்று தமிழ்நாட்டில் தமிழ் அமைப்புகள், கட்சி சார்பற்ற விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்முறையற்ற மக்கள் திரள் போராட்டங்கள் பலவற்றை நடத்தி வருகிறோம்.

தமிழக முதலமைச்சரைச் சந்தித்து மனுக் கொடுக்க நாம் ஏற்கெனவே வேண்டுகோள் கடிதங்கள் தமிழக முதலமைச்சர்க்கு (அப்போது செயலலிதா அவர்களுக்கு) அனுப்பியுள்ளோம். ஆனால் ஒரு தடவை கூட நமக்கு அவரைச் சந்தித்து மனுக்கொடுத்திட அனுமதி வழங்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும் இப்போது ஓ.பன்னீர்ச்செல்வம் முதல்வராக இருக்கும் போதும் தமிழ் மொழி, தமிழக உரிமை, காவிரி உரிமை, முல்லை பெரியாறு உரிமை போன்றவற்றிற்காக நாம் பேரணியாகச் சென்று முதலமைச்சரைச் சந்திக்க வாய்ப்புத் தருவதில்லை. மனுக் கொடுக்கவும் வாய்ப்பு தருவதில்லை.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேதாட்டு செல்லும் பேரணி தேன்கனிக்கோட்டையில் 07.03.2015 அன்று நடந்த போது, முதலமைச்சராக இல்லாத நிலையில் கலைஞர் கருணாநிதி அப்பேரணியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்திய தேசியம் பேசும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தமிழ்நாட்டிற்கு எதிராகக் கன்னட இனவெறி அமைப்புகள் நடத்திய போராட்டத்தைப் பாராட்டியதுடன் அது தனது அரசுக்கு பலம் சேர்க்கும் என்று கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., கட்சித் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் போது தமிழக உரிமைகளுக்காக மக்கள் திரள் போராட்டம் நடத்தினால் தமிழ் அமைப்புகளையும், விவசாய சங்கங்களையும் பாராட்டியதுமில்லை. அவ்வமைப்புகளின் தலைவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கியதுமில்லை.

திராவிடம் பேசும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தமிழினப் பற்றோ, தமிழகப் பற்றோ இல்லாமல் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து வருவதால் தான் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க ஒன்று சேர முடியாமல் பிளவுபட்டுள்ளார்கள். உரிமைக்குப் போராடும் மக்கள் மீது வழக்குப் போடுவதாலும், காவல்துறையை ஏவிவிடுவதாலும் தமிழக மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தக்கூட அச்சப்படும் நிலையை உண்டாக்கியுள்ளனர்.

07.03.2015 அன்று மேக்கேதாட்டு செல்ல தேன்கனிக்கோட்டையில் பேரணியாகப் புறப்பட்ட ஐந்தாயிரம் உழவர்கள் மற்றும் உணர்வாளர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. காவல்துறையினர் தடுத்தவுடன் கைதுக்கு உடன்பட்டுக் கைதானார்கள். அவர்களை அன்று மாலை விடுவித்த காவல்துறை 1200 பேர் மீது வழக்கு பதிவு செய்து சொந்தப் பிணையில் விட்டதாக ஏடுகளுக்கு மறுநாள் செய்தி கொடுத்தது.

மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க முடியாத அதிகார மலை உச்சியில் செயலலிதா, கருணாநிதி, ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் முதல்வராக இருக்கும் போது உட்கார்ந்து கொள்கிறார்கள். பதவி இழந்த நிலையிலும் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் இவ்வாறான இனத்துரோக - எதேச்சாதிகார அரசியலைப் பின்னுக்குத் தள்ளி, தமிழினப் பற்றும் சனநாயகப் பண்பும் கொண்ட உண்மையான நேர்மையான மாற்று அரசியல் எழுச்சி பெற்றால் தான் தமிழக உரிமைகளை மீட்க நாம் நடத்தும் போராட்டங்கள் பயன் தரும்!

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.