மேக்கேதாட்டில் புதிய அணைகள் – காவிரியில் இரசாயனக் கழிவுநீரை தடுக்க முதலைமைச்சர் அனைத்துக்கட்சிக் குழுவினருடன் தலைமையமைச்சர் மோடியை சந்திக்க வேண்டும்.- பெ. மணியரசன் அறிக்கை
மேக்கேதாட்டில் நான்கு புதிய அணைகள் – காவிரியில் இரசாயனக் கழிவுநீர் கர்நாடகத்தின் மனிதகுல விரோத நடவடிக்கைகளைத் தடுக்க தமிழக முதலைமைச்சர் அனைத்துக்கட்சிக் குழுவினருடன் தலைமையமைச்சர்
மோடியை சந்திக்க வேண்டும்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் 70 டி.எம்.சி. கொள்ளளவில் நான்கு அணைகள் கட்டுவது பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது.
அச்செய்தியில் கூறப்பட்டுள்ளபடி முதல் அணை 40 டி.எம்.சி. கொள்ளளவும் மற்ற மூன்று அணைகளும் தலா 10 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டிருக்கும்.
இவை தடுப்பு அணைகள் அல்ல. நீர்த்தேக்கங்கள். இந்த நீர்த்தேக்கங்களிலிருந்து பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், தும்கூர் உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கொண்டு போகப் போவதாக அத்திட்டம் கூறுகிறது. ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க போவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எழுபது டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்ட நீர்த்தேக்கங்கள் குடிதண்ணீருக்காக மட்டும் இருக்காது. பாசனத்திற்கும் பயன்படுத்துவார்கள்.
ஏமாவதி, ஏரங்கி, அர்க்காவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பிய பிறகு வெளியாகும் மிகை நீரை முழுமையாக தேக்கி தமிழ்நாட்டிற்கு உபரி நீர் செல்லாமல் தடுப்பது தான் இந் நான்கு அணைகள் கட்டப்படுவதன் நோக்கம். புதிதாகக் கட்டத் திட்டமிட்டுள்ள நான்கு நீர்த்தேக்கங்கள் நிரம்புவதற்கு வழியே இல்லை. இந்நான்கு நீர்த்தேக்கங்களும் நிரம்பாத போது அவற்றிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை. கர்நாடகத்தில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க் கட்சிகள் ஆகியவற்றின் ஒருமித்த முழக்கமும், “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட்த் தரமுடியாது” என்பதுதான்.
அதன்பிறகு தமிழ்நாடு காவிரி நீரை முற்றாக இழந்துவிடும். பன்னிரெண்டு மாவட்டங்களுக்குப் பாசனநீரும் காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது. கோடிக் கணக்கான தமிழ் மக்கள் பிழைக்க வழியின்றி குடிக்க நீரின்றி பிற மாநிலங்களுக்கு வெளியேரவேண்டிய அவலநிலை ஏற்படும்.
அ.இ.அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுக் கணக்குக் காட்டும் பழைய உத்தியைக் கைவிட்டு, தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் தில்லி சென்று, தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அவர்களை நேரில் சந்தித்து கர்நாடகம் மேக்கேதாட்டுவில் புதிய அணைகள் கட்டத் தடை விதித்து கட்டளைத்தாக்கீது அனுப்புமாறு கோரவேண்டும்.
உரிமைப்படி தரவேண்டிய காவிரி நீரைத் தடுத்து தேக்கிக் கொண்டு இரசாயனக் கழிவு நீரைத் தமிழகக் காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் திறந்துவிடும் கர்நாடக ஆட்சியாளர்களின் மனிதகுலவிரோத சிந்தனை மிகவும் கொடியது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பகுதியில் காவிரியில் கர்நாடகம் திறந்து விட்ட இரசாயன கழிவுநீர் அதிகமாகிவிட்டதால் மீன்கள் செத்து மிதக்கின்றன; அங்கு காவிரி நீர் பச்சையாக நிறம் மாறிவிட்டது; அத்தண்ணீர் குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். கர்நாடகம் இரசாயனக் கழிவுநீர் விடுவதைத் தடுக்கத் தமிழக அரசு கர்நாடக அரசுடன் நேரடி பேச்சு நடத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மேக்கேதாட்டில் கர்நாடகம் நான்கு அணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளது குறித்தும் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் இரசாயனக் கழிவுநீர் திறந்து விடுவதைத் தடுப்பது குறித்தும், குறுவை சாகுபடிக்குக் கர்நாடக அரசிடம் தமிழக அரசு தண்ணீர் பெறவேண்டிய அவசரம் குறித்தும் கலந்து பேசி மக்கள் திரள் போராட்டங்களுக்கான முடிவு எடுப்பதற்கு வரும் 18.06.2015 வியாழன் காலை 10.00 மணிக்குத் திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Leave a Comment