ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வனவிலங்கு சரணாலயங்களாக சட்டவிரோத அறிவிப்பு செய்துள்ள தமிழக அரசைக் கண்டித்து நெல்லையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!


திருநெல்வேலி மற்றும் மேகமலை பகுதிகளை வனவிலங்கு சரணாலயங்களாக சட்டவிரோத அறிவிப்பு செய்துள்ள தமிழக அரசைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு, திருநெல்வேலி வனவிலங்கு சரணாலயம், மேகமலை வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை அறிவித்திருப்பது சட்ட விரோதமான செயல் மட்டுமல்ல, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கும் செயலாகும். இந்த அறிவிப்பின் மூலம், பழங்குடியின மக்களோ, பொது மக்களோ அப்பகுதிக்குள் அரசின் அனுமதியின்றி செல்ல முடியாது.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, அனைத்து மலைக்கிராமங்களிலும் வனத்துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களின் அன்றாட நடமாட்டத்தையே தடை செய்து வருகின்றனர். இந்த அறிவிப்புக்கு முறைப்படி, கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமலிருப்பது இப்பகுதியில் வாழ்ந்து கொண்டுள்ள பளியர் மற்றும் புலையர் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும். பழங்குடியின மக்களின் அன்றாட நடவடிக்கைகளையே முடக்கும் இந்த அறிவிப்பு, வன உரிமைகள் சட்டப்பிரிவு 7இன் கீழ் கிரிமினல் குற்றமாகும்.

எனவே, இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியும், செங்கோட்டை முதல் மேகமலை வரையுள்ள மலைப்பகுதிகளை சரணாலயமாக அறிவிக்கக்கூடாது என்று கோரியும், சோதனைச் சாவடி என்னும் பெயரில் பழங்குடியின மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடை செய்யக் கூடாதென வலியுறுத்தியும், பழங்குடியின மக்களை இழிவாகப் பேசியும் மிரட்டியும் வரும் வனவர் அருள்தேவதாசைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரியும், நேற்று (17.06.2015) மாலை, நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரியில் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் - சட்டவிரோத சரணாலய எதிர்ப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆதிவாசிகள் விடுதலை முன்னணி தமிழகத் தலைவரும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமையேற்றார்.

தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தோழர் ஆறுமுகம் காணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தோழர்கள் ரவிதாமஸ், தலையணை அந்தோணிச்சாமி, பால் தினகரன், சொக்கட்பட்டி மலை பால்துரை, மைலார்காணி கணேசமூர்த்தி, வேலுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில், திரளான பழங்குடியின மக்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழக அரசே! பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வனவிலங்குகள் சரணாலய அறிவிப்பைத் திரும்பப் பெறு!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.