ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

நெருக்கடி நிலை நினைவுகள் - பெ.மணியரசன் - தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம். 

1947 ஆகத்து 14 நள்ளிரவு 12 மணிக்குப் பண்டித நேரு, விடுதலை பெற்ற இந்திய அரசின் கொடியை ஏற்றி வைத்து, “உலகம் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழுகிறதுஎன்று உரையாற்றினார். இருபத்தெட்டாண்டுகளுக்குப் பிறகு 1975 சூன் 24 நள்ளிரவில், பண்டித நேருவின் மகள் இந்திரா காந்தி, இந்தியாவை சர்வாதிகார இருளில் தள்ளி நெருக்கடி நிலையைச் செயல்படுத்தினார்.

நெருக்கடி நிலைத் துன்பங்களைச் சுமந்த இலட்சோபலட்சம் சனநாயகச் செயல்பாட்டாளர் களில் நானும் ஒருவன். அப்போது நான் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தஞ்சை வட்டக் குழுவில் முழுநேரச் செயல்பாட்டாளராகக் களப்பணி ஆற்றி வந்தேன். முழுநேரச் செயல்பாட்டாளர் என்றால் முழுநேரப் புரட்சியாளர் என்ற பெருமிதத்துடன் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காலம்!

நெருக்கடி நிலை பற்றி மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நடுவண் குழு இனி இடிந்து தகர்ந்த நாடா ளுமன்றம்.. பறிக்கப்பட்ட சனநாயக உரிமைகள் - இவைதாம் எதிர்காலக் காட்சிகள். மக்கள் புரட்சியின் மூலம்தான் சனநாயகம் மீட்கப்பட வேண்டும்என்று கணித்து அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி, கட்சியில் மேலிருந்து கீழ்வரை ஒரு பகுதியினர் வெளிப்படையாகவும் இன்னொரு பகுதியினர் தலைமறைவாகவும் செயல்பட வேண்டும்.

இப்பொழுது தஞ்சை, திருவாரூர், நாகை என மூன்று மாவட்டங்களாக உள்ளவை அப்போது ஒரே தஞ்சை மாவட்டமாக இருந்தது. அதில் தலைமறைவுக் கட்சிப் பணிப் பொறுப்பாளர்களில் ஒருவனாக என்னையும் கட்சி முடிவு செய்தது.

கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்தது. எனவே அவ்வாட்சி 1976 சனவரி 31ஆம் நாள் முன்னிரவில் கலைக்கப்படும்வரை, தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையின் முழு ஒடுக்குமுறைகள் செயலுக்கு வரவில்லை. தி.மு.க. ஆட்சி சனநாயக உரிமைகளைப் பெரிதும் தடை செய்யவில்லை. ஆனால், அவ்வாட்சி நீக்கப்பட்ட நேரத்திலிருந்து, காவல்துறையினரின் பேயாட்டம் தொடங்கிவிட்டது.

அனைத்திந்திய அளவில் தோழர்கள் பி. சுந்தரய்யா, பி.டி.ரணதிவே போன்ற தலைவர்கள் தலைமறைவாக செயல்பட்டார்கள். ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, பி. இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் வெளிப்படையாகச் செயல்பட்டார்கள். தஞ்சை மாவட்டத்தில் தோழர் கோ. வீரய்யன் தலைமறைவுக் கட்சியின் செயலாளர். நான் தஞ்சை வட்டத்தின் தலைமைறைவுக் கட்சிச் செயலாளர்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி வெளியானவுடன் நான் தலைமறைவாகிவிட்டேன். 1976 சனவரி 31 இரவு தொடங்கி 1977 பிப்ரவரி வரை தலைமறைவு அரசியல் வாழ்க்கை!

நெருக்கடி நிலை என்றால் என்னவென்று இன்றையத் தலை முறையினர்க்குத் தெரிய வாய்ப் பில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு -19 குடிமக்களுக்கு பேச் சுரிமை, எழுத்துரிமை, கட்சி மற்றும் சங்கம் நடத்தும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கியுள்ளது. இவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மறுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு உறுப்பு 352-இன் கீழ் உள்ளது.

வெளிநாட்டினர் படையெடுப் பால் நாட்டிற்கு ஆபத்து ஏற் பட்டால், நடுவண் அரசு உறுப்பு 352-இன் கீழ் நெருக்கடி நிலையைப் பிறப்பிக்கலாம். ஏற்கெனவே, இரு முறை சீன - பாகிஸ்தான் போர் காலத்தில் வெளிநாட்டு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அப்போது மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை. மாற்றுக் கருத்துடைய தலைவர்களைத்தாம் சிறையிலடைத்தார்கள். சீனாவின் ஆதர வாளர்கள் என்று கூறி நாடு முழுவதும் சி.பி.எம். தலைவர்களை 1965-இல் சிறையில் அடைத்தார்கள்.

1975-இல் இந்திரா காந்தி பிறப் பித்தது உள்நாட்டு நெருக்கடி நிலை. சட்டப்படி நிறுவப்பட்ட தமது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டிவிடுகின்றன, சதி செய்கின்றன என்று காரணம் காட்டித்தான் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிக்கை தயாரித்தார். அதை அவரது அமைச்சரவையிடம்கூடக் காட்டி ஒப்புதல் பெறவில்லை. அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அட்டியின்றி அதில் கையொப்பமிட்டு, சட்ட முறைப்படி, நெருக்கடி நிலையைப் பிறப்பித்தார்.

1970களின் தொடக்க காலம் உலகு தழுவிய அளவில் பலவகை மக்கள் போராட்டங்கள் வெடித்த காலம். அமெரிக்க ஏகாதிபத்தியப் படைகளை முறியடித்த வியட்நாம் விடுதலைப் போர் முன்னேறி வந்தது. வங்காள தேச விடுதலைப் போர் வெடித்தது. நிகரமை (சோசலிச) ஆதரவுக் கருத்துகள் வீச்சாகப் பரவின. சேகுவேராவின் புரட்சிக்கருத்துகள் உலகெங்கும் இளைஞர்களை ஈர்த்து போராட்டக் களங்களுக்கு அழைத்தது. நக்சல்பாரி எழுச்சியும் அக்காலத்தில் ஏற்பட்டது.

காங்கிரசைப் பிளந்த இந்திரா காந்தி தன்னை நிகரமையாளராகக் காட்டிக் கொண்டு, மன்னர் மானியம் ஒழித்து, வங்கிகளை அரசுடை மையாக்கிய பின்னணியைக் கொண் டிருந்த காலம்! மக்களவைத் தேர்தலை ஓராண்டு முன்கூட்டியே 1971-இல் நடத்தி இந்திரா காந்தி மாபெரும் வெற்றி பெற்றிருந்த காலம்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்திரா காந்தியின் நிகரமை அரிதாரம் கலைந்தது. அவர் மீது நகர்வாலா ஊழல்; இளைய மகன் சஞ்சய் காந்திக்கு மாருதி கார் நிறுவன உரிமை வழங்கிய ஊழல், சஞ்சய் காந்தியை - அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியே ஓர் அதிகார மையமாக வளர்த்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு போன்றவை அடுக்கடுக்காக வந்தன.

1974-இல் எழுந்த மாபெரும் அனைத்திந்தியத் தொடர்வண்டித் தொழிலாளர் போராட்டத்தை இந்திரா காந்தி அரசு அடக்கி ஒடுக்கியது போன்றவை இந்திரா காந்திக்கு எதிராக மக்களின் ஆத்திரத்தைத் தட்டி எழுப்பின.

இப்பின்னணியில் குசராத்தில் சிமன்பாய்பட்டேல் என்ற காங்கிரசு முதலமைச்சரின் ஊழலுக்கு எதிராக மாணவர்களின் மகத்தான வீதிப் போராட்டங்கள் வெடித்தன. அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மாணவர்கள் பிடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விட்டனர். சிமன்பாய் பட்டேலைப் பதவி நீக்கம் செய்து அவரை ஊழல் வழக்கில் சிறைப்படுத்த வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.

இந்திராகாந்தியோ, சிமன்பாய் பட்டேலை பதவி நீக்கம் செய்ய மறுத்து வந்தார். சிமன்பாய் பட் டேல் ஆட்சியைக் கலைக்கக் கோரி சாகும்வரை உண்ணாப் போராட்டம் தொடங்கினார் நிறுவனக் காங்கிரசு (ஸ்தாபனக் காங்கிரசு) தலைவர் மொரார்ஜி தேசாய்! சிமன்பாய் பட்டேலுக்கு - எதிரான போராட்டம் இந்திரா காந்திக்கு எதிரான போராட்டமாக வீச்சுப் பெற்றது. வேறு வழியின்றி  குசராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தார் இந்திரா காந்தி.

அடுத்து, பீகாரில் காங்கிரசு முதலமைச்சர் அப்துல் கபூருக்கு  எதிராக மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது. அப்போராட்டத்தை ஆதரித்துக் களமிறங்கினார் காந்தியத் தலைவர் செயப்பிரகாசு நாராயணன்.

பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதையும் தூய்மைப்படுத்த வேண்டும். முழுப்புரட்சி செய்ய வேண்டும்; மக்கள் வீதிக்கு வாருங்கள் என்றார் செயப்பிரகாசர். பீகாரில் புரட்சிச் சூறாவளி வீசியது.

இந்தச் சமயத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், இந்திரா காந்தி தேர்ந்தெ டுக்கப்பட்டது (1971) செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்துப் போட்டியிலட்ட ராஜ் நாராயணன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் போட்டிருந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா 1975 சூன் 12 அன்று அளித்தத் தீர்ப்பில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தார்.

அரசிதழ் பதிவு பெற்ற இந்திய அரசு அதிகாரியான யஷ்பால் கபூர் இந்திரா காந்தியின் தேர்தல் வேலைகளைச் செய்தார்; உத்தரப்பிரதேச அரசு இந்திரா காந்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியது என்ற இரு குற்றச்சாட்டு களின்கீழ் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார் சின்கா.

உச்ச நீதிமன்றத்தில் இந்திரா காந்தி மேல் முறையீடு செய்தார். விடுமுறைக்காலப் பொறுப்பு நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், “இந்திரா காந்தி பிரதமராக நீடிக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்தில்  வாக்களிக்கும் உரிமை அவர்க்கு இல்லைஎன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளி வைத்தார்.

இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்ற செயப்பிரகாசர் போராட்டம் தீவிரமடைந்தது. சி.பி.எம்., ஜனசங்கம், சோச லிஸ்ட்டுக் கட்சிகள் எனப்பல கட்சிகளும் இந்திரா காந்தி பதவி விலகக் கோரின.

இந்தப் பின்னணியில், தனது பதவிக்கு வந்த நெருக்கடியை இந்தியாவுக்கு வந்த நெருக்கடியாகப் பொய்யாகச் சித்தரித்து உள்நாட்டு நெருக்கடி நிலையைப் பிறப்பிக்கச் செய்தார் இந்திரா காந்தி.

24.06.1975 நள்ளிரவில் நெருக்கடி நிலையைப் பிறப்பிக்கும் போதே, செயப்பிரகாசர், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி, ஜோதிர்மாயி பாசு (சி.பி.எம்) போன்ற தலைவர் களைத் தளைப்படுத்தி சிறையி லடைத்தார் இந்திரா காந்தி. அந்த நள்ளிரவில், தாம் கைது செய்யப்பட்ட போது செயப்பிரகாசர் சொன்ன பழமொழி தொலை நோக்குள்ளது. பின்னர் அது பலித்தது. அப்பழமொழி இது தான். கேடு வரும் பின்னே, மதிகெட்டு வரும் முன்னே” (விநாச காலே விபரீத புத்தி).

இந்தியா முழுவதும் 21 மாதங்களில், 1,40,000 பேர் தளைப்படுத்தப் பட்டு சிறையிலடைக்கப்பட்டதாகப் பன்னாட்டுப் பொது மன்னிப்புக் கழகம் தெரிவித்தது.

அரசை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் - செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர் கள், தொழிற்சங்கவாதிகள், குறுக்கே போன பூம்பூம் மாட்டுக்காரர்கள் உட்படப் பலவகையானவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிசா (விணீவீஸீtணீஸீணீஸீநீமீ ஷீயீ மிஸீtமீக்ஷீஸீணீறீ ஷிமீநீuக்ஷீவீtஹ் கிநீt) என்ற ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் ஏராளமானோர் சிறைபடுத்தப் பட்டனர்.

நாளேடுகள், கிழமை (வார) ஏடுகள் உள்ளிட்டு அனைத்து ஏடுகளையும் அச்சாவதற்கு முன், அந்தந்தப்பகுதியில் அமர்த்தப்பட்ட தணிக்கை அதிகாரிகளிடம் காண் பித்து அவர்கள் ஒப்புதல் அளித்த பின்தான் அச்சிட முடியும். தணிக்கை அலுவலர் மறுப்புத் தெரிவிக்கும் பகுதிகளை நீக்கிவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், அவ்வேட்டின் ஆசிரியர் குழுவினர் சிறைக்குப் போக வேண்டும். அச்சகம் பறிமுதல் செய்யப் படும்.

அனைத்துவகைத் தேர்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்கள வைத் தேர்தல் ஓராண்டிற்குத் தள்ளி வைக்கப் பட்டது. தொழிற் சங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. வேலை நிறுத்தம் சட்ட விரோதம் ஆக்கப்பட்டது. போனசு உரிமை பறிக்கப்பட்டது. பஞ்சப்படி உயர்வு மறுக்கப்பட்டது.

சஞ்சய் காந்தி தலைமையிலான இளைஞர் காங்கிரசுக் கும்பல் அதிகார அட்டூழியங்கள் புரிந்தன. தில்லியை அழகுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு துருக்மான் கேட் பகுதியில் குடிசைகள் போட்டு பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்களின் பலநூறு வீடுகளைப் புல்டோசர் வைத்துத் தகர்த்தெறிந்தனர். பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் வீதியில் வீசப்பட்டனர். அப்போது தில்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த ஜக்மோகன், சஞ்சய் காந்தியின் அடியாளாகச் செயல்பட்டார்.

கட்டாயக் குடும்பக் கட்டுப் பாட்டு அறுவையைத் தீவிரப் படுத்தியது சஞ்சய் காந்தி கும்பல். உ.பி., பீகார், தில்லி போன்ற வட மாநிலங்களில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைக்கு (நச பந்தி), ஆண்கள் வேட்டையாடப்பட்டனர். இவை எல்லாம்தாம்  நாட்டின் நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் போலும்!

அப்போது இந்திரா காங்கிரசின் அனைத்திந்தியத் தலைவராக இருந்த டி.கே.பரூவா, “இந்திராவே இந்தியா - இந்தியாவே இந்திராஎன்ற முழக்கத்தை உருவாக்கி, அதை இந்தியா முழுவதும் பரப்பினார். (செயலலிதா விசுவாசிகள் இதைக் கவனிக்கவும்).

அப்பொழுது நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. (மெய்யான கவிஞர்கள் பொறுத்தருள்க!).



அடேயப்பா
எத்தனை நெருக்கடி
என் தேசத்தில்

ஜன நெருக்கடி என்றார்கள்
சந்ததியை வெட்டினார்கள்

பண நெருக்கடி என்றார்கள் -
தொழிலாளர் பஞ்சப்படியை
வெட்டினார்கள்

இன்று பதவி நெருக்கடியாம்
பாராளுமன்றத்தையே
வெட்டுகிறார்கள்

... ... ...

நானே நாடுஎன்றார்

பதினான்காம் லூயியா
நீஎன்றோம்
இல்லையில்லை
பாரதத்தின் லெனின்என்றார்
சேலை கட்டிவிட்ட
சிவப்புத் துண்டு!
... ... ...

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி இந்திரா காந்தியை முற்போக்கு முதலாளிகளின் பிரதிநிதி என்று வர்ணித்து, இந்திரா காங்கிரசை ஆதரித்தது. இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடி நிலையையும் கடைசி வரை ஆதரித்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி, பன்னாட்டு அரங்கில் இரசியாவின் நலன்களுக்கேற்ப மற்ற நாட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளை வழிநடத்தி வந்தது. அப்போது, சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவர் பிரஸ்நேவ்.

இந்தியாவில் நெருக்கடி நிலை செயல்பட்ட காலத்தில் பிரஸ்நேவ், புதுதில்லி வந்தார். அவரை சோச லிஸ்ட்டுக் கட்சித் தலைவர் மது லிமாயி சந்தித்து, இரசியக் கம்யூ னிஸ்ட்டுக் கட்சி இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை ஆதரிப்பது சரியல்ல என்று கூறினார். அதற்கு பிரஸ்நேவ், “இந்திரா காங்கிரசு ஒருவகையான இடதுசாரிக் கட்சி போன்றது, அதாவது ஐரோப்பாவில் நிலவிய பழைய சமூக சனநாயகக் கட்சி போன்றது. இக்கட்சிக்கு இங்கு எதிர்க்கட்சியே தேவை இல்லைஎன்றாராம். இச் செய்தியை அப்போதே ஏடுகளில் கூறினார் மதுலிமாயி!

பன்னாட்டு அரங்கில் தன்னை ஆதரிக்கும் அரசை அந்நாட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எதிர்க்கக் கூடாது என்பது இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அன்றையத் தன்னல உத்தி! எவ்வளவு ஈகம் செய்திருந்தாலும் சொந்த சிந்தனைக் குறைவாக உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இரசிய பக்தியில் மூழ்கித் திளைத்தார்கள். பார்ப்பனிய உளவியலை வேரறுக்காத இந்திய மார்க்சிய சிந்தனையின் ஊனமும் இந்தக் குறைபாட்டில் பங்கு வகிக்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி ஒரு சமயம் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியது கவனத்திற்கு உரியது. இந்தியக் கம்யூனிஸ்டுகள் ஒன்று மாஸ்கோவின் கைப்பொம் மையாக இருக்கிறார்கள் அல்லது பீக்கிங்கின் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்” (Indian Communists are either puppetery of Moscow or Parrotery of Peking).

நெருக்கடி நிலையை ஆதரித்துத் தன்னழிவைத் தானே தேடிக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை எழும்பவில்லை.

காலம் கடந்த பின்னர், தங்களது இந்த முடிவு தவறானது என அக்கட்சி அறிவித்தாலும், மக்கள் அக்கட்சியை பழையபடி ஏற்கவில்லை. அப்போது புரட்சிகரமாகப் பேசிய, ஓரளவு செயல்பட்ட மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஒரு வகையில் சி.பி.ஐ. போல்தான் சிந்தனையிலும் செயலிலும் உள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், காவல் துறையின் பேயாட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் காவல் துறையால் மிகவும் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் தஞ்சை வட்டம் ஒன்று.

எங்கள் தலைவராகவும், தஞ்சை வட்டச் செயலாளராகவும் இருந்தவர் தோழர் ந. வெங்கடாசலம் (என்.வி.). அவர் ஒரு மனித உரிமைப் போராளி; காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களைத் - தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடியவர். இந்நோக்கில் அடிக்கடி போராட்டங்கள் முன்னெடுத்தவர்; இவற்றால் ஆத்திரமடைந்திருந்த காவல்துறையினர், நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி சொல்லொண்ணாக் கொடுமைகள் இழைத்தனர். தட்டிக் கேட்க, தடுக்க நாதியில்லை. கண்டனக் கூட்டம் போட முடியாது.

கட்சி முடிவுப்படி தலைவர் ந. வெங்கடாசலம், பகிரங்கமாக செயல்பட்டுக் கைதாகி விட வேண்டும். நான் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டும். ஆனால், தோழர் ந. வெங்கடாசலம் இயல்பாகத் தலைமறைவாகி விட்டார். இருவரும் தலைமறைவு. எங்கள் இருவரையும் காவல்துறையினர் தேடுகின்றனர். தோழர் வெங்கடாசலத்தைக் கைது செய்ய மிகக் கடுமையாகத் தேடுகிறார்கள்.

தற்போது திருவையாறு வட்டத்தில் உள்ள (அப்போது ஒரே தஞ்சை வட்டம்) கண்டமங்கலம் - செந்தலை தஞ்சை வட்டத்தில் உள்ள காமாட்சிபுரம், பூதலூர் தோழர்களைப் பிடித்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் வைத்து அடித்து நொறுக்கினார்கள். லாடம் கட்டினார்கள். லாடம் கட்டுதல் என்பது, ஒருவரை அம்மணப் படுத்தி, மல்லாந்து படுக்க வைத்து, முன்னங்கால்களில் இருகாவலர்கள் ஏறி மிதித்துக் கொண்டிருப்பர். இன்னொரு காவலர் கைகளையும், தலையையும் மிதித்துக் கொண்டி ருப்பார். ஒரு காவலர் தடியால் கால் பாதத்தில் கடுமையாக அடித்துக் கொண்டே இருப்பார்.. அதிகாரி விசாரிப்பார். வெங்கடாசலம் எங்கே என்று கேட்பது; மணியரசன் எங்கே என்று கேட்பது!

இராயமுண்டாம்பட்டியில் வெங்கடாசலம் வீட்டிற்கு அடிக்கடி சென்று கூரையைத் தடியால் தட்டி உடைப்பது, கோழிகளைப் பிடித்துச் செல்வது, முட்டைகளை எடுத்துச் செல்வது என்று அட்டூழியம் செய்தனர் காவல்துறையினர்.

ஆச்சாம்பட்டி சென்று என் வீட்டில் அடிக்கடி என் தாயார், அம்மாச்சி ஆகியோரை மிரட்டி வந்தனர். பின்னர் தோழர் வெங்கடாசலம் கட்சி முடிவுப்படி காவல்துறையில் கைதானார். நான் தலைமறைவைத் தொடர்ந்தேன்; களப்பணிகள் செய்தேன்.

காவல்துறையினர் பல இடங்களில் என்னைத் தேடித் தோற்றனர். தலைமறைவு வாழ்கைக்கேற்ற பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டேன். மீசையை மழித்துக் கொண்டது, தலை சீவும் முறையை மாற்றிக் கொண்டது, பெயரை மாற்றிக் கொண்டது என்பதை யெல்லாம்விட நடையை மாற்றிக் கொள்வது முக்கியம் என்று உணர்ந்தேன்.

எத்தனை கோடிப் பேர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்த முகம் இருப்பது போல், ஒவ்வொருவருக்கும் தனியான ஒரு நடை இருக்கிறது. நடக்கும் போது பாதங்கள் எழுப்பும் ஓசை, நடக்கும் பாணி இவை தனித்தனியாக உண்டு. இவற்றில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். நடையை வைத்து, மறைவில் உள்ள காவல் துறையினர் நம்மை ஊகிக்க முடியும் என்று கருதினேன்.

நான் தலைமறைவாக இருந்து கொண்டு கட்சிப்பணிகள் ஆற்றிய போது, என்னடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அம்மாச்சி -- என் அம்மாவின் அம்மா இறந்து விட்டார். உரிய மருத்துவமின்றி, உரிய கவனிப்பின்றி இறந்து விட்டார். என்னை வளர்த்தவர் - படிக்க வைத்தவர் அவரே! ஆனால், நான் துக்கத்திற்குப் போகக்கூடாது. காவல்துறையினர் காத்திருப்பர், காத்திருந்தனர். நான் போகவில்லை. நான் இருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை இயக்கத் தோழர்கள் ஆற்றினர். என் அம்மாச்சியின் நினைவாகப் பிற்காலத்தில் என் மகளுக்கு மங்கலம் என்று பெயர் சூட்டினேன் (அக்குழந்தை நான்கு அகவையில் இறந்துவிட்டது).

நான் தலைமறைவு வாழ்க்கை வாழ - எம் இயக்கத் (சி.பி.எம்.) தோழர்கள், இயக்கம் சார்ந்த வெகு மக்கள் பெருந்துணையாய் - பெருங் கவசமாய் இருந்தார்கள். அக்கொடிய காலத்திலும் உரிமைப் போராட்டங்கள் நடத்தினோம்! நான் திரைமறைவில்!

ஆளுநர் ஆட்சியில் காங்கிரசார் ஆடிய ஆட்டம் செய்த அட்டூழியம் கொஞ்ச நஞ்சமன்று. நெருக்கடி நிலைக்கு முந்திய காலத்தில் ஒரத் தூரில் புறம்போக்கு நிலம் 30 ஏக்கர் இருந்தது. அதை நிலமற்ற ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் களின் 30 குடும்பங்களுக்குத் தலா ஒரு ஏக்கர் என்று பிரித்துக் கொடுத்தார் தலைவர் வெங்கடாசலம். நெருக்கடி நிலையில் அதை - காங்கிரசு ஆதரவாளர்க்குப் பிரித்துப் பட்டா போட்டு - பட்டா வழங்கினர். அதிகாரிகள் கீழ்ப் படிந்தனர்.

நாங்கள் அந்த நிலத்தைக் காங்கிரசு ஆதரவாளர்கள் வந்து கைப்பற்றாமல் தடுக்கும் போராட்டம் நடத்தி வென்றோம். நெருக்கடி நிலை போனபின், உண் மையான சாகுபடிக்காரர்களுக்குப் பட்டா கிடைத்தது. 

திருவையாறு அருகே காருகுடி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு சுடுகாடு இல்லை. சுடுகாடு கோரி - காவிரியாற்றின் நடுப்பகுதியில் கோடை காலத்தில் பிணத்தை எரித்து இயக்கத் தோழர்கள் போராடினர். பின்னர் காவிரிக் கரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பட்டா கிடைத்தது.

ஓர் இயக்கம் புரட்சிகரமானதாக இருந்து தன்னலமற்றவர்களால் தலைமை தாங்கப்பட்டால் காவல் துறை தாக்குதல் எவ்வளவு வந்தாலும்,- அதிகார வர்க்கம் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அவ்வியக்கத்தை ஆதரிக்கும் மக்களை அச்சுறுத்திவிட முடியாது. அவ்வியக்கத் தோழர்களை இயக்கத்திலிருந்து பிரித்துவிட முடியாது என்பதற்குத் தஞ்சை வட்டத் தோழர்களும், இயக்க ஆதரவு வெகு மக்களுமே சான்று! தஞ்சை வட்டத்தில் பல தோழர்கள் போர் வீரர்களாகச் செயல்பட்டார்கள்.

நெருக்கடி நிலையை சி.பி.எம். கட்சி வீரத்துடன் எதிர் கொண் டதால் அதன் மதிப்பு உயர்ந்தது. புதிய வளர்ச்சி ஏற்பட்டது. அத் தனையையும் பின்னர் வீணாக்கியது சி.பி.எம். கட்சி! உழைத்துச் சேர்த்த பொருளை சீட்டாட்டத்தில் தோற் பது போல், ஈகம் செய்து, வீரம் புரிந்து வளர்த்த இயக்கத்தை தி.மு.க. - அ.தி.மு.க. என மாற்றிமாற்றிக் கூட்டுச் சேர்த்து வீணடித்தது சி.பி.எம். கட்சி!

தி.மு.க. நெருக்கடி நிலையை எதிர்த்ததை அதன் சனநாயகப்பற்று என்று மட்டும் கருதி விட முடியாது. 1969இல் காங்கிரசு இரண்டாகப் பிரிந்து போது, இந்திரா காங்கிரசை ஆதரித்தது தி.மு.க.

1972 இல் நடக்க வேண்டிய மக்களவைத் தேர்தலை முன் கூட்டியே 1971 இல் நடத்த இந்திரா காந்தி முடிவு செய்தவுடன் கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை ஓராண்டு முன்கூட்டியே 1971 இல் நடத்த முன்வந்தார். இ.காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது.

1972 இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதி.மு.க.வை அமைத்தார். அப்போது அ.தி.மு.க. உருவாக்கம் இ. காங்கிரசின் சதி என்றும், அதி.மு.க. என்பது ஒட்டுக் காங்கிரசு எனவும் சாடினார் கருணாநிதி.  எம்.ஜி.ஆர் மேலும் நெருக்கமாக இ.காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டார். இ.காங்கிரசு - அ.இ. அ.தி.மு.க. உறவைப் பிரிக்க முடியாதபடி ஒட்டுவதற்கான பசையாக இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் எம். கல் யாண சுந்தரம் விளங்கினார். 

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றுமுள்ள அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்து நடவடிக்கை கோரி நடுவண் அரசுக்கு மனுக்கொடுத்தார் எம்.ஜி.ஆர்.  அம்மனுவை தி.மு.க.வுக்கு எதிராகப் பயன்படுத்த முனைந்தார் இந்திராகாந்தி. 

நெருக்கடி நிலையை எம்.ஜி.ஆர் முழுக்க முழுக்க ஆதரித்தார். இ.காங்கிரசு - தி.மு.க. உறவு இவ்வாறாக முறிவுக்கு வந்தது.

இந்தப் பின்னணியில்தான் தி.மு.க.வின் நெருக்கடி நிலை எதிர்ப் பைப் பார்க்க வேண்டி உள்ளது. இ.காங்கிரசின் நெருக்கடி நிலை அறிவிப்பை தி.மு.க. எதிர்த்ததற்கு இப்படி ஒரு பின்னணி இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதே வேளை அந்த இருண்ட காலத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்து தனது ஆட்சி யை இழந்தது உட்பட பல இழப்பு களுக்கு தி.மு.க. ஆளானதை நாம் பரிவோடு பார்க்க வேண்டும்.  பாராட்ட வேண்டும். 

சென்னை நடுவண் சிறையில் வித்தியாசாகர் என்ற சிறைக் கண்காணிப்பாளரின் காட்டு மிராண்டித்தனத்தால் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு, மு.க. ஸ்டாலின் போன்றோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தடியடியால் பாதிக்கப்பட்ட சிட்டி பாபு சிறையிலேயே இறந்தார். 

நெருக்கடி நிலை அறிவிப்பின் பிற்பாதியில் தி.மு.க. சுற்றி வளைத்து நெருக்கடி நிலையை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. சஞ்சய் காந்தியின் ஐந்தம்சத் திட்டத்தைப் பாராட்டிக் கலைஞர் கருணாநிதி கட்டுரைகள் எழுதினார். 

வெற்றி பெறுவோம் என்று அதி காரிகள் கொடுத்த மதியுரையை நம்பி இந்திராகாந்தி மக்களவைத் தேர்தலை அறிவித்து நெருக்கடி நிலையை 1979 பிப்ரவரியில் தளர்த் தினார்.

1977 மார்ச் தேர்தலில் இந்திரா காங்கிரசு படுதோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. - இ. காங்கிரசு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தி.மு.க. சார்பில் ஆசைத்தம்பி ஒருவர் மட்டுமே வென்றார்.  சனநாயக மீட்பிற்கான போராட்டத்தில் தமிழ்நாடு சர்வா திகாரத்தை வெற்றி பெறச் செய்த தற்கு முழுப்பொறுப்பு எம்ஜிஆரே!

1977ல் சனநாயகக் குரல் எழுப் பிய சனதாக்கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தலைமையில் அமைச் சரவை அமைந்தது. உட்கட்சிச் சண்டையால் அவ்வாட்சி வீழ்ந்து 1980 இல் மக்களவைத் தேர்தல் வந்தபோது நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சி தருகஎன்று வாழ்த்துப் பாடி கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தியுடன் கூட்டணி கண்டார். 

கொள்கையும் இலட்சியமும் அற்ற சர்வாதிகார எதிர்ப்பு மனப் பான்மையற்ற பயனாளி உதிரிக் கூட்டமாகத் தமிழ் மக்களில் கணிசமானோரை மாற்றியவர்கள் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் ஆவர்!

கருணாநிதியும் செயலலிதாவும் நெருக்கடி நிலை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருந்தால் தமிழ்நாட்டில் அவ்விருவரும் மாறி மாறி பலமுறை அதைப் பிறப்பித் திருப்பார்கள்.  தங்கள் அதிகாரத்தைக் கொண்டு அவ்விருவரும் தம்தம் ஆட்சியில் நடத்தும் உரிமைப் பறிப்புகள் சனநாயக மறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல!

இப்பொழுது நரேந்திர மோடி ஆட்சியில் நெருக்கடி நிலை மீண்டும் வருவதற்கான தோற்றங்கள் தெரிகின்றன என்பதை மீண்டும் நெருக்கடி வாய்ப்புள்ளதுஎன்று கூறியுள்ளார் பாசகவின் மூத்த தலைவர் அத்வானி.

நரேந்திரமோடி தமது கட்சியின் தலைமையை கூட்டுத் தலைமை என்ற நிலையிலிருந்து மாற்றி தன் கீழுள்ள ஒற்றை மையத் தலைமை யாக்கிவிட்டார்.

நடுவண் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நடைமறை யில் நீக்கித் தலைமை அமைச்சர் அலுவலகம் அமைச்சரவைக்கு ஆணையிடுவதாக்கிவிட்டார்.  மாநிலங்களில் பல்வேறு அதிகாரங்கள் வரிவிதிக்கும் உரிமைகள் அனைத்தையும் மாற்றி -  நடுவண் அரசின் கீழ்ப்படிதலுள்ள கிளை அமைப்புகளாக மாநிலங்களை மாற்றிவருகிறார். 

இவை காரணமாக உட்கட்சியிலும் வெளியிலும் பெரும் எதிர்ப்பையும் போராட்டங்களையும் மோடி சந்திக்க நேரிடலாம்.  அப்போது இந்திரா காந்தி செய்ததை, நெருக்கடி நிலை பிறப்பிப்பதை மோடியும் செய்யலாம். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சனநாயக உரிமைப் பாதுகாப்பும் தமிழ்த் தேசியமும் இணைந்தவை.  தமிழ்த் தேசியம் பன்மையை ஏற்பது; மதிப்பது. தமிழ்த் தேசியம் என்பது சனநாயகத்தை வளர்ப்பதுபாதுகாப்பது.

கடந்த கால நெருக்கடி நிலைப் பட்டறிவுகள் நிகழ்கா சனநாயகப் பாதுகாப்பிற் வெளிச்சம் காட்டும் சுடர்கள்!

(கட்டுரையாளர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

2 comments:

  1. விடுதலை வாழ்வின் ஒளிவீச்சினை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டிய அவசியத்தை தோழர் பெ.ம._வின் நெருக்கடி கால நினைவுகள் கற்பிக்கின்றன.

    ReplyDelete
  2. விடுதலை வாழ்வின் ஒளிவீச்சினை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டிய அவசியத்தை தோழர் பெ.ம._வின் நெருக்கடி கால நினைவுகள் கற்பிக்கின்றன.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.