ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி சென்னை – திருச்சி – தருமபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டங்கள்!

தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி சென்னை – திருச்சி – தருமபுரியில்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டங்கள்! 

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரியும், இந்தி – ஆங்கிலத்தை நீக்கக் கோரியும், சென்னை – திருச்சி - தருமபுரி நகரங்களிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள், இன்று (சூலை 10 – 2015) எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற, இந்தி எதிர்ப்பு - மொழிப் போரில் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டடு, 50ஆம் ஆண்டுகள் கடந்தும் கூட, தமிழகத்தில் இந்தியும் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 1976ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிராக, இந்தியும் – ஆங்கிலமும்தான் அலுவல் மொழியாக உள்ளது.

எனவே இந்நிலையை மாற்றவும், தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரியும், இந்தி – ஆங்கிலத்தை நீக்கக்கோரியும்,  சென்னை, திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவித்தது. அதன்படி, இன்று போராட்டங்கள் நடைபெற்றன. 

சென்னை

சென்னை நடுவண்(சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் நலக் கழகச் செயலர் திரு. அமுதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், தோழர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், வி.கோவேந்தன், இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தமிழக உழவர் முன்னணி பொருளாளர் தோழர் இரா. கனகசபை, செயற்குழு உறுப்பினர் தோழர் இராமகிருட்டிணன் உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள், இதில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்வண்டி நிலையத்தின் வெளியில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தொடர்வண்டி நிலையத்தின் நிலைய அதிகாரி அலுவலகம் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கா. விடுதலைச்சுடர் தலைமையில், இன்னொரு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிலைய அதிகாரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் இரா. அருள் உள்ளிட்டோர் இதில் கைது செய்யப்பட்டனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு நீடித்தது. கைது செய்யப்பட்டத் தோழர்கள், தற்போது கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொது, காவல்துறையினர் குறுக்கிட்டு அனுமதி மறுத்த போது, இன்னொரு பகுதியில் தோழர்கள் அஞ்சலகத்திற்குள் நுழைந்தனர். இதன் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடவே, அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தோழர்கள் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனங்களில் அனைவரையும் ஏற்றிக் கைது செய்தனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, பழ. இராசேந்திரன், அ.ஆனந்தன், இரெ.இராசு, தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் இரா.சு.முனியாண்டி, மு.தமிழ்மணி, புளியங்குடி க. பாண்டியன், மதுரை மேரி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி, பூதலூர் ஒன்றிய த.தே.பே. தலைவர் தோழர் ஆ. தேவதாசு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் இராசாரகுநாதன், திருக்குவளை முத்தமிழ் மன்றம் பாவலர் வெற்றிப்பேரொளி உள்ளிட்ட த.தே.பே. தோழர்களும், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமையில் வந்த 30க்கும் மேற்பட்ட மகளிர் தோழர்களும் இதில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள சுமங்கலி மகாலில் தங்க வைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.  

தருமபுரி

தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு, இன்று காலை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் கோவை இராசேந்திரன், சேலம் பிந்துசாரன், ஈரோடு இளங்கோவன், தருமபுரி செயலாளர் தோழர் விஜயன், ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி திரு. சக்திவேல், மொழிப்போர் ஈகி திரு. கயிலை இராமமூர்த்தி, குறள்நெறி பேரவை செயலாளர் திரு. வெங்கடேசன், தமிழ்நாடு மாணவர் பேரவை மாவட்டத் தலைவர் தோழர் தமிழரசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.