ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தலைமைச் செயலகம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


பள்ளிக்கல்வியில் தமிழை நீக்கி ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசின் தமிழ்மொழிக்கு எதிரானப் போக்கைக் கண்டித்து...

ஆகத்து 3 முதல் 7 வரை. . . சென்னை தலைமைச் செயலகத்திலும்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலும் ஐந்து நாள் தொடர் மறியல் போராட்டம்!

சென்னை செய்தியாளர் சந்திப்பில் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு!

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று (09.07.2015) காலை, சென்னை சேப்பாக்கம் – செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையேற்றார். மூத்த கல்வியாளர் திரு. ச.சீ. இராசகோபாலன், காந்திப் பேரவைத் தலைவர் திரு. குமரி ஆனந்தன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. ரெட்சன் அம்பிகாபதி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் திரு. அன்றில் பா. இறையெழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் – இயக்கங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழ்வழிக் கல்விக்கு எதிரான தமிழக அரசின் போக்கைக் கண்டித்து, சென்னை மற்றும் திருச்சியில் ஐந்து நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கடந்த 2013-14 கல்வியாண்டிலிருந்து அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டப் பிரிவுகள் 1-ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசின் ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்புத் திட்டம் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை வெளியேற்றும் திட்டம் என்று கண்டனம் செய்தும், இத்திட்டத்தைக் கைவிட்டு, +2 வரை தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமொழியாகவும் (Language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் செயல்படுத்துமாறு வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் 2012 மே மாதத்திலிருந்து பலவகையான போராட்டங்களை நடத்தி வருகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கல்வி அதிகாரிகளுக்குக் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் இன்னும் பல அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலும் மற்ற வகுப்புகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கவில்லை என்றும், நடப்புக் கல்வியாண்டில் கட்டாயம் ஓர் அரசுப்பள்ளிகூட விடுதல் இல்லாமல் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டுள்ளது.

பருப்பும் நெய்யும் கலந்த அமுது போன்ற சோற்றை ஒரு கிண்ணத்திலும், ஐஸ்கிரீமை இன்னொரு கிண்ணத்திலும் வைத்தால் குழந்தை ஐஸ்கிரீமைத்தான் விரும்பி உண்ணும். இன்றைய நிலையில் பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்கள், தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலவழி வகுப்புகளையே தேர்ந்தெடுப்பர்.

தமிழ்நாடு அரசின் இச்செயல் 1956 – ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரான செயல். நம்மை அடிமை செய்த வெள்ளைக்காரன் காலத்திலிருந்து பள்ளிக் கல்வியில் தொடர்ந்து வந்த தமிழ்வழிக் கல்வியை முற்றிலுமாக மூடிவிடும் முயற்சியின் தொடக்கமாகும். மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாகும்.

பயன்பாட்டில் இல்லாத தாய்மொழி அழியும் – தாய்மொழியை இழந்த இனம் தன்னை ஒரு தேசிய இனமாகவும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் உதிரிகளாக மாறி அயலாரை அண்டிப் பிழைக்கும் கூட்டமாக மாறும்.

தாய்மொழியான தமிழ் மொழியைக் கல்வியிலிருந்து நீக்குவது சமூகநீதியை ஊனப்படுத்துவதாகும். காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் – காலம் காலமாக சமூகத்திலும் கல்வியிலும் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களின் மாணவர்களோடு அயல்மொழியான ஆங்கிலத்தில் போட்டியிட முடியாமல் பின்தங்கிவிடுவர்; தோற்றுப்போவர்; ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் – முதல் தலைமுறையாக, இரண்டாம் தலைமுறையாகக் கல்விக்கூடங்களுக்கு வந்திருக்கும் மாணவர்கள் – ஆங்கிலவழிக் கல்வியால் மிகமிகப் பாதிக்கப்படுவர். இடையில் கல்வியைத் தொடராமல் விடு மாணவர்களின் எண்ணிக்கை மேற்கண்ட சமூகங்களில் அதிகமாகும்.

உலகெங்குமுள்ள கல்வி உளவியல் அறிஞர்களும், குழந்தை உளவியல் அறிஞர்களும் தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் புரிதல் ஆற்றலையும், சிந்தனை ஆற்றலையும் வளர்க்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. உலக நாடுகளில் மிகப்பெரும்பாலானவற்றில் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கல்வி வரை தாய்மொழி வழியாகவே மாணவர்கள் கற்கின்றனர். விரும்புகின்ற ஓர் அயல்மொழியை மொழிப்பாடமாக மட்டும் கற்கின்றனர். பயிற்றுமொழியாக அயல்மொழியை அவர்கள் ஏற்பதில்லை.

தமிழ்நாட்டில் – ஆங்கிலத்தை மாணவர்கள் விரும்பும் ஒரு மொழிப்பாடமாகக் கற்கலாம். ஆனால், பயிற்றுமொழியாக ஆங்கிலத்தைத் திணிப்பது தமிழ்மொழி அழிப்புச் செயல் மட்டுமல்ல, சமூகநீதி மறுப்புச் செயலும், தமிழ் மக்களின் சொந்த சிந்தனை ஆற்றலை முடக்கும் செயலும் ஆகும்.

பெற்றோர்கள் ஆங்கிலமொழிப் பிரிவுகளை விரும்பி, தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்; பெற்றோர்களின் நிதிச்சுமையைக் குறைத்திட தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையிலும், மற்ற அறிக்கைகளிலும் தமிழ்மொழி நீக்கத்தை ஒரு சாதனையாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தனியாரின் ஆங்கிலவழிப் பள்ளிகளை நாடாமல் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளை நாடும் அளவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. திசைமாறும் மக்களை நெறிப்படுத்த வேண்டியது கடமையும், அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.

கோரிக்கைகள்

1. +2 வரை தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் மருத்துவம் போன்ற உயர் தொழிலியல் கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2. சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங்களைத் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

3. அரசுப் பள்ளிகளின் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும்.

அ. போதிய ஆசிரியர்களை அமர்த்துதல்

ஆ. விளையாட்டு, இசை, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் அமர்த்துதல்

இ. தக்க சோதனைக்கூடங்களை நிறுவுதல்

4. கல்வியைக் கொள்ளை வாணிகமாகக் கருதும் கும்பல், தன்நிதிப்பள்ளிகளை நடத்திக் கொண்டு, தேர்ச்சி விகிதத்தை செயற்கையாக உயர்த்திக் காட்டி விளம்பரப் படுத்துவதற்காக கற்பித்தல் விதிகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. 9ஆம் வகுப்பில் அவ்வகுப்புப் பாடங்களுக்குரிய பாடம் நடத்தாமல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்துவது போன்ற தனியாரின் தகிடுதத்தங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அச்செயலுக்குத் தூண்டிய – அச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதைத்தடுக்க +1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முறை கொண்டுவர வேண்டும்.

5. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வியில் தமிழ்மொழியை நீக்கி ஆங்கில ஆதிக்கத்தைத் திணிக்கும் தனது தமிழின விரோதத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2015 ஆகத்து 3 முதல் 7 வரை, ஐந்து நாட்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தின் முன்பும் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும் தொடர் மறியல் போராட்டம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் நடத்துகின்றது.

இக்கோரிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில், சென்னையில் சூலை 28 அன்று தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளியிலும், திருச்சியில் பிறகு அறிவிக்கப்படும் ஒரு நாளிலும், சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தப்படும். போராட்டத்தை விளக்கி சூலை 20 – ஆம் நாளிலிருந்து தமிழ்நாடெங்கும், தெருமுனைக் கூட்டங்கள் – பரப்புரைகள் நடைபெறும்.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் காக்கும் – சமூகநீதி காக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.