ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நடக்க வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக்  கண்காணிப்பில் நடக்க வேண்டும்!” சென்னையில் நடைபெற்ற உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு! 


ஆந்திராவில் காவல்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து நடுவண் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டுமெனக் கோரியும், இச்சிக்கலில் கடமை தவறி நிற்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு - தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், சென்னையில் உண்ணாப் போராட்டம் நடைபெற்றது. சற்றொப்ப இரண்டாயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 26.08.2015 காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இவ் உண்ணாப் போராட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன், தமிழ்ப்புலிகள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் வழக்கறிஞர் பழனியம்மாள், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வே. பொன்னையன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இப் போராட்டத்தில் பங்கேற்ற, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆற்றிய உரை:

“ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி கேட்டும், இது குறித்து நடுவண் புலனாய்வுக் குழுவினர் (சி.பி.ஐ), விசாரிக்க வேண்டுமெனக் கோரியும், தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், இந்த உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இக்கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொடுத்து வலியுறுத்துவதற்காக, பேராசிரியர் ஜவாகிருல்லா, தோழர் ஜி. இராமகிருட்டிணன், தோழர் முத்தரசன், தோழர் திருமா உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களோடு தாம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு வைகோ அவர்கள், தமிழ்நாடு முதல்வர் செயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகியும், இன்றுவரை பதில் இல்லை என்ற செய்தியை, காலையில் இப்போராட்டத்தைத் தொடங்கி வைக்கும் போது, வைகோ அவர்கள் சொன்னார்கள்.

மக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய ஒரு முதலமைச்சரை, தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச முடியாத நிலை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

அண்ணன் வைகோ அவர்கள், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பதவியேற்கும் நேரத்தில் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி தில்லியில் போராடியவர். நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு எதிர்வினையாக, பா.ச.க.கவின் எச். இராஜா, வைகோ பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டினார்.

பா.ச.க.வோடு ஏற்கெனவே வைகோ கூட்டணி வைத்திருந்தாலும், பின்னர், இவ்வளவு முரண்பாடுகள் வைகோவிற்கும் பா.ச.க.விற்கும் இடையே ஏற்பட்டுள்ளன. ஆனாலும், அண்மையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்த போது, நரேந்திர மோடி அதனை ஏற்று வரவேற்றார். வைகோவை தழுவிக் கொண்டார். படங்கள் ஏடுகளில் வந்தன.

ஆனால், இந்த சனநாயகம் ஏன் தமிழ்நாட்டில் இல்லை? செயலலிதா மட்டுமல்ல, ஆட்சியிருக்கும்போது கருணாநிதியையும் சந்தித்துப் பேச முடியாது. இது போல, கருணாநிதியையும் செயலலிதாவையும் சந்தித்துப் பேச முடியாத நிலை ஏன் இருக்கிறது?

இந்த நிலை உருவாக நாமும் ஒரு காரணம்! இந்த அரசியல் அநாகரிகத்தை நாமும் ஒரு வகையில் அனுமதித்து விட்டோம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரை, போராடும் அரசியல் தலைவர்கள், சந்திக்க முடியாது எனில், இந்த அவமானம் அந்தத் தலைவர்களுக்கு மட்டுமல்ல! ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தான்!

முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மூவரும், எந்த நாளிலாவது ஏதாவதொரு முக்கியப் பிரச்சினை குறித்து சட்டப் பேரவையில் ஒன்றாக அமர்ந்து விவாதித்திருக்கிறார்களா? இல்லை. இது அருவருக்கத்தக்க பண்பாடு!
புதுதில்லியில், பா.ச.க.வும் காங்கிரசும் எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், நரேந்திர மோடியும் சோனியா காந்தியும் ஒன்றாக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்வென்றாலும், நரேந்திர மோடி பதவியேற்பு என்றாலும், சோனியா காந்தியும், இராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார்கள். கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

இந்த நிலை ஏன் தமிழ்நாட்டில் இல்லை? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும், இந்த அராஜக நிலையை - சகிக்க முடியாத அநாகரிகத்தைக் கொண்டுவந்து விட்டன. இது போல் எந்த மாநிலத்திலும் இல்லை. இந்த அநாகரித்தை சகித்துக் கொள்ளும் கூட்டமாக நம்மை ஆக்கிவிட்டார்கள் என்பது வேதனையான உண்மை!

காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு சிக்கல், இருபது தமிழர் படுகொலை போன்ற தமிழினச் சிக்கல்களை இவர்கள் சட்டப்பேரவையில் அமர்ந்து விவாதித்தது கிடையாது.
இதையெல்லாம் நீங்கள் ஒன்றாகக் கூடி விவாதிக்க மாட்டீர்கள் என்றால், இது சட்டமன்றம் அல்ல! கொடுங்கோலர்களின் கொலு மண்டபம்! அமைச்சர்கள் அண்டிப் பிழைக்கும் கோமாளிகளாகக் காட்சியளிக்கின்றனர்.

இவர்களால், கணிசமான மக்கள் “குடிமக்கள்” என்ற நிலையிலிருந்து “பயனாளிகள்” என்ற நிலைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

குடிமகன் – Citizen என்ற உணர்வு, “இது எனது மண்! செயலலிதாவோ கருணாநிதியோ நிரந்தரமானவர்கள் அல்ல! நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்; எங்கள் பிரதிநிதிகளை ஆள விட்டிருக்கிறோம்” என்ற பெருமிதத்தன்மை கொண்டது.

ஆனால், இலவசங்களை எதிர்ப்பார்த்து, “எதிர்காலம்” குறித்த கவலைப்படாமல் இன்றைக்கு என்ன இலவசமாகக் கிடைக்கும் என்று எண்ணுபவர்கள், பயனாளிகள் - Beneficiaries!

குடிமக்கள் பொறுப்புடன் சிந்திப்பவர்கள்; பயனாளிகள் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கபள். குடிமக்கள் போர்க்குணம் உள்ளவர்கள்; பயனாளிகள் கோழைத்தனம் மிக்கவர்கள்.

இந்தக் கட்சிகள், “குடிமக்க”ளை, “பயனாளி”களாக மாற்றியதுதான், இன்றைக்கு விளைந்துள்ள கேடுகளில் மிகப்பெரும் கேடாகும்.

கடந்த ஏப்ரல் 18ஆம் நாள், கர்நாடகத்தில், கன்னட இனவெறி அமைப்புகள் காவிரியில் 4 புதிய அணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் தடுக்க வேண்டுமெனவும், அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழ்நாட்டைக் கண்டித்தும், முதல்வர் செயலலிதாவின் கொடும்பாவியை எரித்தும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின.

அந்தப் போராட்டக்குழுத் தலைவர்கள் வாட்டாள் நாகராஜ், கன்னட ரட்சக வேதிகே தலைவர் நாராயண கவுடு ஆகியோர் தலைமையில், அதே நாளில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க அனுமதி கோரினர். காங்கிரசு முதலமைச்சரான சித்தராமையா மனமகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று, அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். வன்முறையில்லாமல் போராட்டம் நடந்ததற்கு வாழ்த்து கூறினார். மேலும், இந்த முழு அடைப்புப் போராட்டம், தங்கள் அரசுக்கு பலம் சேர்க்கும் என்றும் கூறினார். மேக்கேத்தாட்டில் அணை கட்டுவது உறுதி என்றும் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார். இது செய்தியாக நாளேடுகளில் வெளியானது.

தமிழ்நாட்டில் அப்படியொரு முதல்வரை பார்க்க முடியாது. இங்கே, தமிழ்த் தேசிய இயக்கங்களை “தமிழ் சாவனிஸ்ட்”(தமிழ் வெறியர்கள்) என்று எதிர்ப்பார்கள். அங்கே, வட்டாள் நாகராஜ் யார்? அவரை ஏன் அந்த முதலமைச்சர் சந்திக்கிறார்? இதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

10 – 15 ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவைச் சேர்ந்த ராஜன் பிள்ளை என்ற மலையாளத் தொழில் அதிபர் மீது சிங்கப்பூரில் பொருளாதாரக் குற்ற வழக்கு போட்டார்கள். அவர், தப்பி தில்லிக்கு வந்துவிட்டார். தில்லிக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தார்கள். அப்போது அவருக்கு மார்பு வலி ஏற்பட்டது. இரவு நேரம். சிறையிலேயே இறந்துவிட்டார். இந்தச் செய்தியை கேட்ட கேரளம் கொந்தளித்தது.

ராஜன் பிள்ளைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தி தில்லி நிர்வாகம் கொன்று விட்டது என கேரளாவில், காங்கிரசுக்கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். தில்லி நிர்வாகத்தைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். மரணத்திற்கு பிறகு ராஜன் பிள்ளைக்கு, அந்த வருடத்தின் சாதனை மனிதர் (Man of the Year) என்ற பட்டத்தை வழங்கி, அந்த விருதை அவர் மனைவி நீனா பிள்ளை அவர்களிடம் வழங்கினார்கள். சட்டப் பேரவைத் தேர்தலிலும் போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த மலையாளி இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ளுமா? தமிழினம் தன்னைத் தற்காத்துக் கொள்ளுமா? தலைவர்கள் மனு கொடுக்கக் கூட முடியாத முதலமைச்சரைப் பெற்றுள்ள தமிழினம், எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

நாம் அரசியல் அநாதைகளாக இருக்கிறோம். இங்கே, “சனநாயக” ராஜாக்கள் - “சனநாயக” ராணிகள் நம்மை ஆள்கிறார்கள்.

மராட்டியத்தில் பீகாரிகள் அதிகமாக வேலைக்கு வந்து மண்ணின் மக்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள் என்று எதிர்ப்பு உண்டு. ஒரு பீகார் இளைஞனை, மராட்டியக் காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டது. பீகார் கொந்தளித்தது. எதிரெதிர் முகாமாக இருந்த லல்லு பிரசாத்தும், நிதிஸ் குமாரும் சேர்ந்து, பீகார் அடைப்பு நடத்தினார்கள்.

ஆனால், இங்கோ அயல் மாநிலத்தில் 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழ்நாட்டு முதல்வரிடமிருந்து கண்டன அறிக்கைகூட வெளி வரவில்லை.

பீகாரிகள் தங்கள் வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்கள் என அசாமில் அவர்களை அடித்தார்கள். அவர்களது வீடுகளைக் கொளுத்தினார்கள். உடனடியாக லல்லு பிரசாத் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரைப் பார்த்து, அசாமிற்கு இராணுவம் அனுப்புமாறு கோரினார். அசாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். அசாமைவிட்டு நீங்கள் வெளியேற வேண்டியதில்லை, உங்களைப் பாதுகாக்க இராணுவம் வரும் என நம்பிக்கையூட்டினார் லல்லு.

1991இல், செயலலிதா முதல்வராக இருந்த போது, கர்நாடகத்தில் காவிரிக் கலவரம் நடந்தது. தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு, பலர் கொல்லப்பட்ட நிலையில், 2 இலட்சம் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். அன்றைக்கு, முதல்வர் செயலலிதா கர்நாடகம் சென்று, பாதிக்கப்பட்டத் தமிழர்களைப் பார்த்தாரா? இராணுவத்தை அனுப்பச் சொல்லித் தலைமை அமைச்சரைப் பார்த்தாரா?

தமிழ்நாட்டில் பெருந்தலைவராக விளங்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினாரா? இல்லை.

ஏன்? ஏனெனில், இது நாதியற்ற இனம்! செயலலிதாவும் கருணாநிதியும் தமிழ் இனத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்.

2011இல், மலையாளிகள் கேரளாவுக்குச் சென்ற தமிழக அரசு ஊர்திகளைத் தாக்கினார்கள். தேனி மாவட்டத் தமிழ்த் தோட்டத் தொழிலாளிப் பெண்களை சிறைபிடித்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து அய்யப்ப சாமி கோயில் சென்ற பக்தர்களை அடித்து உதைத்தார்கள். ஒரு தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றார்கள்.

செயலலிதாவோ, கருணாநிதியோ தில்லி சென்று உடனடியாக தில்லி தலையிட்டு, தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி வற்புறுத்தினார்களா? இல்லை. கேரளா சென்று பாதிக்கப்பட்டத் தமிழர்களைப் பார்த்தார்களா? இல்லை.

தமிழர்களைத் தாக்கினால் கேட்க நாதியில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டு தான், அண்டையிலுள்ள அயல் இனத்தார் அனைவரும் நம்மைத் தாக்குகிறார்கள். நாம் அரசியல் அனாதைகளாக இருக்கிறோம்.

மேக்கேத்தாட்டில் அணைகள் கட்டியே தீருவோம் என்கிறார், நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா. நடுவண் அமைச்சராக இருந்து கொண்டு அவ்வாறு பேசும் சதனாந்த கவுடாவுக்கு எதிராக, அண்ணன் வைகோதான் கண்டித்து அறிக்கை அளித்தார். அமைச்சர் சதானந்தா மீதான கோபம் முதல்வர் செயலலிதாவுக்கும், முன்னாள் முதல்வர் தலைவர் கருணாநிதிக்கும் அல்லவா வர வேண்டும்? ஏன் வரவில்லை?

புரட்சி அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவை அவர்களின் கொள்கை வழிமுறைகளுக்கு ஏற்ப ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களில் சிலரை பிடித்து வைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, எங்களைத் தாக்கினார்கள் அவர்களைத் திருப்பி சுட்டோம் என்று காவல்துறையினர் கூறுவது போலி மோதல். இந்தப் போலி மோதலை முழுமையாக நான் கண்டிக்கிறேன். மாவோயிஸ்ட்டுகள், சில இசுலாமிய அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களை இப்படி ஆந்திராவில் சுட்டுக் கொல்கிறார்கள்.

இந்தப் போலி மோதல்களின் உண்மையை அறிந்து கொள்ளாத பாமர மக்கள் அவர்கள் ஆயுதப் போராட்டம் நடத்துபவர்கள், வெடிகுண்டு வீசுபவர்கள், அதற்குரியத் தத்துவத்தின் கீழ் செயல்படுபவர்கள், அவர்கள் காவல்துறையினரை எதிர்த்து சுட்டிருப்பார்கள், அப்போது காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ள திருப்பி சுட்டிருப்பார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுவதில் ஆந்திரத் தொழிலாளிகளும் ஈடுபடுகிறார்கள். அந்த மரங்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி கோடி கோடியாய் பொருள் ஈட்டி, மாட மாளிகைகள் கட்டிக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஆந்திரத் தெலுங்கர்கள். செம்மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க ஒரு கூட்டத்தினரை சுட்டுக் கொன்று மக்களுக்கு அவர்களின் பிணங்களைக் காட்டி, ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஆந்திர அரசும், காவல்துறையும் முடிவு செய்தன.

அப்போது, ஆந்திரத் தெலுங்குத் தொழிலாளிகளை சுட்டுக் கொல்வதா வேற்று மாநிலத் தொழிலாளிகளை சுட்டுக் கொல்வதா என்று அவர்கள் ஆலோசித்திருக்கிறார்கள். தெலுங்குத் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றால், ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். ஏனெனில், ஆயுதப் போராளி அமைப்பைச் சேர்ந்தவர்களை அல்லது ஒரு தத்துவத்தின் கீழ் தீவிரமாக செயல்படுபவர்களை போலியாக சுட்டுக் கொன்றால், காவல்துறையினர் சொல்லும் பொய்யை மக்கள் நம்புவார்கள்.

ஆனால், அரசியலற்ற எந்தத் தத்துவப்பின்னணியும் இல்லாத அன்றாடக் கூலித் தொழிலாளிகள் தங்களை சுட்டுக் கொல்ல முன்வந்தார்கள், அவர்களை திருப்பி சுட்டோம் என்று காவல்துறையினர் சொன்னால், ஆந்திராவில் சாதாரண மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அந்த அநீதியை எதிர்த்துப் போராடுவார்கள். தமிழ்நாட்டு அப்பாவித் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றால், தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பு வராது. பெரிய கொந்தளிப்பு வராமல் பாதுகாக்கும் அரண்களாக நமக்கு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் விளங்கும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும் கணித்தன.

அந்த நம்பிக்கையோடுதான், பேருந்துகளில் சென்ற, அங்கே இங்கே நின்ற தமிழ்த் தொழிலாளிகளை கடத்திச் சென்று, அவர்களுடைய உறுப்புகளையெல்லாம் அறுத்து, கண்ணை குத்தி, ஆணுறுப்பைத் துண்டித்து, பல்வேறு சித்திரவதைகளை செய்து, கடைசியில் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்தப் பிணங்களை ஒரு வெட்ட வெளியில் போட்டு, எங்களோடு மோதினார்கள் நாங்கள் திருப்பிச் சுட்டோம் என்று கதை கட்டினார்கள். ஆந்திர அரசின் இந்த நம்பிக்கை, இந்த தந்திரம் பலித்தது.

அன்றைக்கு முதல்வராக இருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமோ, அவரை இயக்கிக் கொண்டிருந்த செயலலிதாவோ ஆந்திர அரசைக் கண்டிக்காமல், நிர்வாக வழியில் விசாரணை நடத்த வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டனர்.

சரி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்தார்? ஆறு மாதத்திற்கு முன்னே ஆந்திரக் காவல்துறை எச்சரித்தும், விழிப்புணர்வோடு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாத அ.தி.மு.க. அரசின் அலட்சியமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். அவருடைய மகன் பட்டத்து இளவரசர் மு.க.ஸ்டாலின் என்ன அறிக்கை வெளியிட்டார்? இருபது தமிழர் படுகொலைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று கூறி கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி மக்களுக்கும் பாதுகாவலராக இருக்க வேண்டும். பாகுபாடில்லாமல் எல்லார்க்கும் பாதுகாவலாக விளங்க வேண்டும். கடவுள் குறித்து வள்ளலார் பாடியது போல், அரசு செயல்பட வேண்டும். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடு” என்றார் வள்ளலார். “வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரம்” என்றார். “எல்லார்க்கும் பொதுவில்” இருப்பது என்றார். அதைப்போல், அரசு இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லை!

வைகோ அவர்கள் இங்கே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தமிழ்நாடு அரசும், ஆந்திர அரசுடன் Collusion என்றார். அதாவது, கூட்டுச்சதி என்றார். அதுதான் உண்மை! எனவேதான், தமிழ்நாடு அரசு இருபது தமிழர் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. இருபது தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க, முயற்சிகள் எடுக்கவில்லை. மாறாக, அவர்களைத் தண்டிக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

இதைக் கண்டித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டினோம். “தமிழர்கள் அரசியல் அனாதைகளாகிவிட்டார்கள்” என்று அதிலே குறிப்பிட்டிருந்தோம். அதற்காக என் மீதும், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் மீதும் வழக்கு போட்டது தமிழ்நாடு அரசு. இனங்களுக்கிடையே பகையுணர்ச்சியைத் தூண்டியதாக 153A பிரிவின் மீதும், சுவர்களை சுவரொட்டி ஒட்டி அசிங்கப்படுத்திவிட்டதாக தனியார் சொத்து அழிப்புப் பிரிவுகளின் கீழும் பிணையில் வர முடியாதபடி பிரிவுகளை சேர்த்து, தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டது.

திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையிலுள்ள எங்கள் தமிழர் கண்ணோட்டம் இதழ் அலுவலகத்திற்கு, காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர். எந்த கணிப்பொறியிலே அந்த சுவரொட்டியை செய்தீர்கள் என கேள்வி கேட்டனர். அந்தக் கணிப்பொறியைக் கைப்பற்றிச் செல்ல முயன்றனர். மேலதிகாரிக்கு புகார் தெரிவித்ததன் மூலம் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. ஒரு சுவரொட்டிக்கு இவ்வளவு அடக்குமுறைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. இந்த இனத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

இங்கு பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள், தம்மைப் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் பேச, கேள்வி கேட்க, ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்க, அனுமதி வழங்குவதில்லை, நாங்கள் வெளிநடப்பு செய்து, சட்டசபைக்கு வெளியே இருக்கும் செய்தியாளர்களிடம்தான் அவற்றையெல்லாம் பேசுகிறோம் என்றார். செய்தியாளர்களிடம் சொல்லித்தான் செய்தி வெளிவரும் என்றால், அதற்கு சட்டசபைக்கு செல்ல வேண்டியதில்லை. இதோ இதுபோன்ற இடங்களில் தலைவர்கள் பேசினாலே, செய்திகள் வெளியாகின்றன. நிருபர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.

இங்கு எனக்கொரு யோசனை வந்தது. சட்டப் பேரவையில் மக்கள் சிக்கல்களை பேச விடவில்லையெனில், ஏன் இந்த பதவியை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தேர்தல் வர இன்னும் ஏழெட்டு மாதங்கள் தான் இருக்கின்றன. நடப்புத் தொடர் கூட்டத்தில், தமிழ்நாட்டு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுங்கள். இங்கேயுள்ள கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஒத்த கருத்துள்ள கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து கொடுங்கள். அவற்றை விவாதிக்க சட்டப் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லையென்றால், அனைவரும் பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டு, அவரவர் தொகுதிக்குச் சென்று தமிழகம் தழுவிய அளவில் சென்று, சட்டசபை எப்படி மக்களின் பிரச்சினைகளைப் பேச வாய்ப்பளிக்கப்படாத மன்றமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துப் பேசுங்கள். எழுச்சியை உண்டாக்குங்கள். அந்த எழுச்சியோடு தேர்தலை சந்தியுங்கள். இதுபற்றி பரிசீலியுங்கள் என்று இங்குள்ள கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்குமேல், இதில் நான் இரவல் ஆலோசனை வழங்குவது சரியல்ல. ஏனெனில், நான் தேர்தலில் போட்டியிடாத அமைப்பைச் சேர்ந்தவன்.

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட குற்றம் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும். சி.பி.ஐ. நடத்த வேண்டும்; 2ஜி வழக்கு நடைபெறுவதைப் போல! அந்த வழக்கு, ஆந்திராவிலோ தமிழ்நாட்டிலோ அல்லாமல் வேறோரு மாநிலத்தில் நடைபெற வேண்டும் என்று தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துவதுடன், இங்கே வைக்கப்பட்டுள்ள இன்றைய போராட்டக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் வலியுறுத்தி விடைபெறுகிறேன். தொடர்ந்து இதற்காகப் போராடுவோம்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

போராட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், பழரசம் அளித்து உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.