“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!
“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!”
மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் உடலடக்கத்தின் போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!
மதுஒழிப்புப் போராட்டக் களத்தில் உயிரீகம் செய்த ஐயா. சசிபெருமாள் அவர்களின், உடல் இன்று (07.08.2015) மாலை, சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது இல்லத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் சேலம் கொண்டு வரப்பட்டது. சேலம் மாநகரில் அவரது உடல் பேரணியாகக் கொண்டு செல்ல, தமிழகக் காவல்துறையினர் கடும் கெடுபிடிகள் செய்தனர். உடல் நல்லடக்க நிகழ்வின் போது, பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அங்கு நடைபெற்ற இறுதி வணக்கக் கூட்டத்தை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின், காங்கிரசுத் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் திரு. மாசிலாமணி, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, காந்தி பேரவைத் தலைவர் திரு. குமரி. ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களின் தலைவர்கள் இரங்கலுரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன், ஈகி சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இறுதி வணக்கக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“மது ஒழிப்புப் போராளி ஐயா சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புப் போராட்டங்களின் போது, சென்னையில் அவரை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனால், இன்று அவருடைய மண்ணில் இந்த மேடைக்கு அருகில், வெறும் உடலாக அவரைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதைக்கிறது.
மது ஒழிப்புப் போராட்டத்தில், தன்னுயிரை ஈந்திருக்கிறார். தன்னுயிரை ஈந்திருக்கிறார் என்பதைவிட, அவர் தமிழக அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை!
மது ஒழிப்புப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த ஐயா சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரதிநிதியாக சசிபெருமாள் வாழ்ந்திருக்கிறார்.
அவர் உயிரோடு ஓடியாடி மதுவிலக்கு போராட்டம் நடத்தியபோது, இலட்சக்கணக்கான நெஞ்சங்களில் மது எதிர்ப்புணர்வை ஊட்டினார். ஆனால், இந்த மரணத்தின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களில் மது எதிர்ப்பு உணர்ச்சியை - முழு மதுவிலக்கு தமிழ்நாட்டில் வேண்டும் என்ற ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மரணத்திற்குப் பிறகு மகத்தான புது வாழ்வை ஐயா சசிபெருமாள் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு, முழு மதுவிலக்கை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி, முன்னிலும் கூடுதல் வேகத்தோடு நாம் போராடுவோம் என்று ஈகி சசிபெருமாள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்!
அரசாங்கத்தின் மதுக்கொள்கையை எதிர்த்துப் போராடும் அதேவேளை, ஐயா சசிபெருமாள் மீது ஆணையிட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்தை விட்டுவிடுகிறோம் என்று உறுதியேற்க வேண்டும்.
சசிபெருமாள் அவர்கள் மீது ஆணையிட்டு தனிநபர் ஒழுக்கம் - மது மறுப்பு போன்ற உயர் பண்புகளை நம்முடைய தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.
ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்த, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரண்டிருந்தனர்.
மது ஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment