ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சேச சமுத்திரம் சாதி வன்முறை வெறியாட்டம் - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!


சேச சமுத்திரம் சாதி வன்முறை வெறியாட்டம் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!

மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேச சமுத்திரம் கிராம தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடிய சாதி வெறித் தாக்குதலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேரையும், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளையும் கொளுத்தி வெறியாட்டம் ஆடிய சாதி வெறிக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சேச சமுத்திரம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையோராகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மிக சிறு எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும், இரு சமூகத்தினரும் இணக்கத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். அவ்வூர் மாரியம்மன் கோயில் ஆடி விழாவில் நீண்டகாலமாக மாட்டு வண்டியில் அம்மன் சிலையை வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் அம்மன் வீதியுலா நடத்தி வழிபட்டு வந்தனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு, ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவருக்கு போட்டியிட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் மாரியம்மன் வீதியுலாவிற்கு தேர் அமைத்துத் தருமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வலியுறுத்தினர். இக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அம்மக்களின் வாக்குகளையும் பெற்று தலைவராக வெற்றி பெற்ற சுப்பிரமணி தேர் கட்டுவதற்கு தாம் ஒத்துக்கொண்ட நிதியை அளித்தார்.

இதைப் பயன்படுத்தி தேரைக் கட்டி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆடி மாத அம்மன் விழா ஊர்வலம் நடத்த முயன்ற போது, 2012இல் வன்னியர் சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தேரோட்டத் திருவிழா நிறுத்தப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளாக மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையின் விளைவாக ஓர் இணக்கம் ஏற்பட்டு தேரோட்ட திருவிழாவிற்கு இரு சமூகத்தினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 2015, ஆகஸ்ட் 16 ஞாயிறு அன்று அம்மன் தேரோட்டம் நடத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆயத்தம் ஆனார்கள். ஆயினும் விழாவிற்கு முதல் நாள் ஆகஸ்ட் 15 அன்று சாதி வெறியர்கள் சிலர் தேர்மீது பெட்ரோல் குண்டுகள் வீசி கொளுத்தினர்.


இதனைத் தடுக்க முயன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டனர். காவலுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் சிலர் மீதும் தாக்குதல் நடந்தது.

எதிர்பாராத இத்தாக்குதலால் அஞ்சி ஓடி, தங்கள் வீட்டுக்குள் பதுங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, அவர்களது வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஏறத்தாழ 15 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

தொடக்கத்திலிருந்தே சமூக நல்லிணக்கத்திற்கு முன் முயற்சி எடுத்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கணிசமானவர்கள் கோயில் திருவிழா அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினாலும், சில அரசியல் தன்னல சக்திகளால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சாதி வெறியூட்டப்பட்ட பள்ளிக் கூட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இத்தாக்குதலில் முன் நின்றனர்.

செய்தி அறிந்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அக்கிராமத்திற்கு சென்ற போது அவர்களும் உள்ளே நுழைய முடியாதபடி தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தொடர்ந்து பல மணி நேரம் தடையின்றி இந்த வெறியாட்டம் நடந்தது. மாலையில் திடீரென்று பெய்த பெரு மழைதான் தீயையும் அணைத்தது, வெறியாட்டத்தையும் தணித்தது. அதன் பிறகே நிலைமையைக் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நீண்ட காலமாக இணக்கத்தோடு வாழ்ந்து வந்த இரு சமூகத்தினரிடையே பகைமையை மூட்டியது பதவிவெறி தன்னல சக்திகளே ஆகும். அவர்களது தூண்டுதலே மனிதத் தன்மையற்ற இத்தாக்குதலுக்கு முதன்மைக் காரணமாகும்.

இந்த சாதி வெறி வன்முறையாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அட்டூழியத்திற்கு மூல காரணமான அனைவரையும் தாமதமின்றி கைது செய்து அங்கு அமைதியை நிலைநாட்ட காவல் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொளுத்தப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக் கொடுப்பதற்கும், உடைமை இழப்பை ஈடு செய்யும் வகையிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 15 இலட்சம் ரூபாய் இழப்பீடாகத் தமிழக அரசு வழங்க வேண்டும்.

கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் பிறகு முதல் முறையாக தேரோட்டம் நடைபெறும்போது வன்முறை நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதை உணர்ந்து காவல்துறை முன் எச்சரிக்கையாக செயல்பட்டிருக்க வேண்டும். வன்முறை வெறியாட்டத்திற்கு இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் ஒரு சமூகத்தினர் திரட்டப்படுவதை உளவுத்துறை முன்னறிந்திருக்க வேண்டும்.

காவல்துறையின் அலட்சியப்போக்கே இந்த சாதி வன்முறை நிகழ வாய்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் நிர்வாக அலட்சியப் போக்கே காவல்துறையினர் உரிய முன்தடுப்பு நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம்.

அமைதியை நிலைநாட்டி, தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு மீண்டும் மாரியம்மன் தேரோட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்பான சூழலை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்த வேண்டும்.

இரு சமூகத்தைச் சேர்ந்த மனித நேயர்கள் முன்முயற்சி எடுத்து சாதிப் பகைமை மேலும் வளராமல் தடுத்து நல்லிணக்கச் சூழலை நிலைநாட்ட முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.