ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர்களை அடக்க வந்த ஆரியப் போர்வாள் எச். இராசா பாரதிய சனதாக் கட்சி சுவரொட்டி! - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!


தமிழர்களை அடக்க வந்த ஆரியப் போர்வாள் எச். இராசா பாரதிய சனதாக் கட்சி சுவரொட்டி!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

எங்கள் மண்ணின் மைந்தரே தமிழகத்தின் துரோணாச்சாரியே திராவிடத்தை வென்ற ஆரியப் போர்வாளேன தேசியச் செயலாளர் எச். ராஜா CA பிறந்தநாள் விழா 29.09.2015

பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியச் செயலாளர்களில் ஒருவரான எச். ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அக்கட்சியின் தஞ்சை ஒன்றியப் பிரமுகர்கள் சார்பில் தஞ்சை நகரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிச் சொற்கள்தாம் மேலே உள்ளவை!

இந்துத்துவா என்பது வெறும் இந்து மதவாதம் மட்டும் அல்ல அது ஆரிய இனவாதம்; தமிழினம் போன்ற தனித்துவம் பெற்ற இனங்களின் அடையாளங்களையும் அவற்றின் இருப்பையும் அழிக்கும் ஆரிய வாதம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்துத்துவா என்பது வெறும் இந்து மதவாதம் மட்டுமல்ல அது பார்ப்பனிய ஆதிக்கவாதம் என்றும் த.தே.பே. கூறி வருகிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் இக்கூற்றுகள் மெய்யானவை என்பதை எச். இராசா வாழ்த்துச் சுவரொட்டி அம்பலப்படுத்தியுள்ளது.

தஞ்சை பா.ச.க.வினர் எச். இராசாவை துரோணாச்சாரி என்கின்றனர். ஏன்? சத்திரியனுக்குரிய போர்க்கலையை சூத்திரன் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஏகலைவனுக்க வில் வித்தை கற்றுத்தர மறுத்தார் துரோணாச்சாரி. ஆனால், ஏகலைவனோ, துரோணாச்சாரியின் பொம்மையைச் செய்து வைத்து, அதன் முன் தானே பயிற்சி எடுத்து விற்போர்க் கலையைச் சிறப்பாகக் கற்றுக் கொண்டான்.

பின்னர் துரோணாச்சாரியிடம் தனது விற்பயிற்சியைச் செய்து காட்டும்போது, “என் பொம்மையை வைத்துக் கற்றுக் கொண்டதால், குரு காணிக்கை தர வேண்டும். உனது வலது கைக் கட்டை விரலை வெட்டி காணிக்கையாகக் கொடு” என்றார் துரோணாச்சாரி! அப்படியே வலதுகைக் கட்டை விரலை வெட்டி ஏகலைவன் கொடுத்தான். அதன்பின் அவனால் விற்போர் செய்யவே முடியவில்லை.

சூத்திரர்களின் கட்டை விரலை வெட்டிக் காணிக்கையாக வாங்கும் துரோணாச்சாரி போன்றவர் எச். இராசா! அதாவது ஒரே நேரத்தில் ஆரியப் பார்ப்பனராகவும், ஆரியச் சத்திரயனாகவும் செயல்பட்டுத் தமிழர்களை அடிமைப்படுத்தும் வல்லமை பெற்றவர் எச். இராசா!

“திராவிடம்” என்ற பெயரில் ஆரிய எதிர்ப்பும் தமிழின உணர்வும் கொண்ட தமிழர்களை அழிக்க வந்த ஆரியப் போர்வாள் எச். இராசா!

தமிழின எதிர்ப்பு -  வர்ணாசிரம ஆதிக்கம் போன்றவற்றை மறைபொருளாக வைத்து, “இந்து” மத உணர்வை மட்டும் வெளிப்படையாகத் தூண்டி – இதுவரை பா.ச.க.வை வளர்த்து வந்தவர்கள் – இப்போது, ஒளிவு மறைவின்றி, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தையும் தமிழின எதிர்ப்பையும் அறிவிக்கிறார்கள்!

பாரதிய சனதாக் கட்சி தமிழினப் பகைக் கட்சி என்பதைத் தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். பொன் இராதாகிருட்டிணன், தமிழிசை போன்ற தமிழர்கள் பா.ச.க.வில் வெறும் உற்சவர்கள் மட்டுமே! உண்மையான அதிகாரம் படைத்த மூலவர்கள் எச். இராசா போன்ற ஆரியப் பார்ப்பனர்கள்!


தமிழர்களே, புரிந்து கொள்ளுங்கள்! பா.ச.க.வைத் தமிழ்நாட்டில் வளர விடாதீர்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.