திருவைகுண்டம் அணையில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக உழவர்களின் ஒன்றுபட்ட போர் முழக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்) அணையில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக, மாவட்ட உழவர் குறைத் தீர்ப்புக் கூட்டத்தில், அப்பகுதி உழவர்கள் ஒன்றுதிரண்டு போர் முழக்கம் எழுப்பினர்.
2015 - அக்டோபர் 15 அன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், இச்சிக்கல் எழுப்பப்பட்டது.
கூட்டத்தின் தொடக்கத்தில், தமிழக உழவர் முன்னணி தமிழகத் துணைத் தலைவரும், குரும்பூர் பகுதி உழவருமான தோழர் மு. தமிழ்மணி பேசினார்.
தோழர் தமிழ்மணி பேசுகையில், “ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வார்கிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெறுகின்றது. தற்போது, 7 ரீச்சாக பிரித்துத் தோண்டுகிறார்கள். அணையில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரினால் போதும். ஆனால், மணல் கொள்ளையைக் குறியாகக் கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தூர் வாரப்படுகிறது. விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
அணையில் மணலை மட்டுமே எடுக்கிறார்கள். சகதி மற்றும் கழிவுகளை எடுப்பதில்லை. 8 அடி ஆழத்துக்கு மேல் தோண்ட தடை விதிக்க வேண்டும்.
அணையில் எடுக்கப்படும் மணல் ஒரு யூனிட்டிற்கு அரசு 425 ரூபாய் ரசீது போடுகின்றனர். ஆனால், அம்மணல் ஒரு யூனிட்டிற்கு 6 ஆயிரத்திற்கு முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து எடுக்கப்படும் மணல் கங்கைகொண்டானில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கு அதிகளவில் இடம் உள்ள நிலையில் கேரளத்துக்கு அதிக விலைக்கு விற்கவே மணல் கங்கைகொண்டானில் சேமித்து வைக்கப்படுகிறது.
இதுவரை எவ்வளவு மணல் எடுத்துள்ளனர், என்பது கூட தெரியவில்லை. எனவே, தூருவாரும் மணி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து எடுக்கப்படும் மணலை உழவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மூலம் கட்டப்படும் கட்டுமானப் பணிகளுக்கு அம்மணலை பயன்படுத்த வேண்டும்” என பேசினார்.
தோழர் தமிழ்மணியின் பேச்சைத் தொடர்ந்து, பல்வேறு உழவர்களும், இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். ஆட்சியர் ரவிக்குமாரை முற்றுகையிட்டு ஆவேச முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், இச்சிக்கலை “அரசியல் ஆக்குவதாக” குறை கூறிப் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த உழவர்கள், அவ்வார்த்தையைத் திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி, கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
Leave a Comment