சைமா சாயப்பட்டறையை உடனே நிறுத்து! பெரியப்பட்டில் பட்டினிப் போராட்டம்!
தென்னிந்திய நூற்பாலை முதலாளிகள் சங்கம் (சைமா) சார்பில் சாயப்பட்டறை அமைக்கும் திட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பெரியப்பட்டு கிராமத்தில் நிறுவப்படவுள்ளது.
திருப்பூர், ஈரோடு, கோவை மட்டுமின்றி இராஜஸ்தான் பகுதியிலிருந்தும் 7 தனியார் நூற்பாலைகள் இணைந்து இந்தச் சாயப்பட்டறையை நிறுவுகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு 400 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விட்டுள்ளது. இந்திய அரசு 450 கோடி ரூபாய் நிதியளித்துள்ளது. தமிழ்நாடு அரசும் இதற்கு இணையான நிதி வழங்கி இந்தச் சாயப்பட்டறையை நிறுவவுள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீரையும் நொய்யல் ஆற்று நீரையும் உறிஞ்சி பாழ்ப்படுத்திய அதே நூற்பாலை நிறுவனங்கள் இப்போது கடலூர் மாவட்டத்திற்கு வருகின்றன.
பெரியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் 20 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நிமிடத்திற்கு 1000 லிட்டர் தண்ணீர் என்றளவில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்ச கட்டமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி சாய ஆலையிலிருந்து நாள் ஒன்றுக்கு 1.5 கோடி லிட்டர் கொடிய நஞ்சுடன் கூடிய சாயக் கழிவு நீரை நிலத்திற்கு அடியிலும் கடலிலும் கொட்ட உள்ளார்கள். இந்த ஆலை செயல்பட்டால் பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே இறங்குவதுடன் பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புத்தன்மை அடைந்து விடும்.
சாயப்பட்டறைக் கழிவுகளில் வெளியாகும் நஞ்சான உப்புக் கரைசல்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 40 மடங்கு அதிகம் இருப்பதால் வாழத் தகுதியற்ற நிலமாக அக்கிராமங்கள் மாறிப்போகும். கடல்வாழ் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து உணவுக்கு இரையில்லாமல் மீன்கள் இடம் பெயர்ந்துவிடும். அது மட்டுமின்றி சில வகை கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் மலட்டுத் தன்மை அடையும். கடலோடி மக்களின் (மீனவர்களின்) வாழ்வாதாரம் அழியும்.
கடற்கரைக்கு அருகில் 10 கி.மீ. வரையிலும் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு பொதுப்பணித்துறைச் சட்டப்படி தடை இருந்தபோதிலும் அவற்றைப் புறந்தள்ளி தமிழ்நாடு அரசு இந்த சைமா சாயப்பட்டறைக்கு சட்ட விரோதமாக அனுமது அளித்துள்ளது.
வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சைமா சாயப்பட்டறையை எதிர்த்து பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்றிணைந்து “மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பை நிறுவி கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, 27.10.2015 செவ்வாய்க் காலை 10.00 மணிக்கு தொடங்கி, மாபெரும் கண்டன உண்ணாப் போராட்டம் நடத்தினர். அறவழியிலான உண்ணாப் போராட்டத்தைக் கூட, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனக் கூறி, காவல்துறை தடை செய்தது. உயர் நீதிமன்ற ஆணைப் பெற்றுதான், இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் நேரில் சென்று அங்கு உரையாற்றினார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், சூழலியல் போராளி தோழர் முகிலன், மக்கள் இயக்கங்களின் இந்தியக் கூட்டமைப்பு தமிழக அமைப்பாளர் தோழர் அருள்தாஸ் உள்ளிட்டப் பலர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், தோழர்கள் மு. முருகவேல், கலைச்செல்வன், சரவணன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு சைமா சாயப்பட்டறையை உடனடியாக நிறுத்த வேண்டும்!
Leave a Comment