“காவிரி உரிமைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுக்காது” நடிகர் சங்கம் இம்முடிவை கைவிட வேண்டும்.
“காவிரி உரிமைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுக்காது” நடிகர் விசால் தவறான இம்முடிவைக் கைவிடவேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
பொதுத் தேர்தல் போல் முக்கியப்படுத்தப்பட்டு அண்மையில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் தங்களின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்தபின், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விசால் அளித்த விடை பேரதிர்ச்சி தருவதாக இருந்தது.
“காவிரி போன்ற பொதுப் பிரச்சனைகளுக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்துமா?” என்ற கேள்விக்கு “இனிமேல் நடிகர்களுக்குரிய பிரச்சனைகள் தவிர காவிரி போன்ற வேறெந்த பிரச்சினையிலும் நடிகர் சங்கம் தலையிடாது,” என்றார் விசால்.
தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடக்கூடாது என்று கோரிக்கை வைத்து கர்நாடகத்தில் அவ்வப்போது நடிகர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கம் சட்டப்படி திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்தி அறவழிப் போராட்டங்களை நடத்தாது என்றால் அதன் பொருள் என்ன?
தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை இனி விசால் – நாசர் தலைமையில் உள்ள நடிகர் சங்கம் கண்டுகொள்ளாது, ஒதுங்கிக் கொள்ளும் என்று தானே பொருள்!
சென்னையில் உள்ள திரைப்பட மற்றும் நாடகக் கலைஞர்கள் உட்பட இலட்சோப லட்சம் மக்களுக்குக் குடிநீராகக் காவிரி நீர் அன்றாடம் பயன்படுகிறது. காவிரி நீரில் உற்பத்தியாகும் உணவுப் பொருள் பயன்படுகிறது.
இவற்றையெல்லாம் விட, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவால் தான் தமிழ்நாட்டுத் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது.
அதையும்விடக் கலைஞர்களுக்கு சமூக அக்கறை மிகமிகத் தேவை என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை!
இந்நிலையில் காவிரிப் பிரச்சினை போன்ற தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தமிழ்நாட்டு நடிகர் சங்கம் முகம் கொடுக்காது என்பது சமூகப் பொறுப்பற்ற செயல்மட்டுமல்ல, மறைமுகமாகக் கர்நாடகத் திரைக்கலைஞர்களின் காவிரி மறுப்பு இனவெறிக்குத் துணை போவதாகவும் அமையும்.
எனவே விசால் – நாசர் தலைமையில் உள்ள நடிகர் சங்கம் தனது முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதைத் “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என்று மாற்ற முடியாது என்றும் அந்நேர்காணலில் விசால் கூறியுள்ளார். இதுவும் தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம் ஆகும். விசாலின் சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஆந்திர நடிகர் சங்கம் என்று வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று தான் இருக்கும் என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.
நாசர் போன்ற தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பொறுப்பில் இருக்கும் போது இவ்வாறான தமிழர் உரிமைக்கு எதிரான முடிவுகளை நடிகர் சங்கம் எடுக்கக் கூடாது என்றும் மேற்கண்ட இரு முடிவுகளையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கப் பொறுப்பாளர் அனைவரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment