ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

சென்னை கடற்கரையில் காமராசர் சாலை – இராதாகிருட்டிணன் சாலை சந்திக்கும் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதென்று கூறி தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அச்சிலையை அப்புறப்படுத்த ஆணையிட்டது.

தமிழ்நாடு அரசும் சிவாஜி சிலையை எடுத்து அடையாற்றில் புதிதாக கட்ட இருக்கும், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அதை வைத்திட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மணி மண்டபம் கட்ட அவகாசம் தேவை என்றும், 2017க்குள் மணிமண்டபம் கட்டப்பட்டுவிடும் அதில் அப்பொழுது சிவாஜி சிலையை அகற்றி அங்கு வைத்துவிடலாம் என்றும் நேற்று (14.10.2015), சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி அவர்கள் மூலம் கூறியது.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார் அக்னிகோத்திரி மற்றும் கே.கே. சசிதரன் ஆகியோர் வரும் நவம்பர் 16ஆம் நாளுக்குள், சிவாஜி சிலையை அப்புறப்படுத்திவிட வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக சிவாஜி கணேசன் சிலையை அப்புறப்படுத்த ஆணையிடும் போக்கில், நிதானமற்றத்தன்மை வெளிப்படுகிறது. தாங்கள் சொன்னதை உடனடியாக நிறைவேற்றவதுதான் கீழ்ப்படிதிலுள்ள அரசுக்கு அடையாளம் என்று நீதிபதிகள் கருதுவது போல் தோன்றுகிறது.

நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை பிற்பகல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்துமாறு கட்டளையிட்டு, பிற்பகலில் அவர் வந்த போது பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் இரண்டு மணி நேரத்தில் அகற்றிவிடுகிறார்கள், உங்களால் இத்தனை மாதங்களில் சிவாஜி சிலையை அப்புறப்படுத்த முடியவில்லையா என நீதிபதிகள் கேட்டார்கள்.

இவ்வாறு, நீதிபதி அக்னி கோத்ரி கேட்கும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் தமிழர்களின் கலைச்சின்னம் என்பதையோ, தமிழர்களின் கடந்த கால கலைப்படைப்பின் அடையாளம் என்பதையோ அவர் சிறிதும் சட்டை செய்யவில்லை.

இரண்டு மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அப்புறப்படுத்திவிடலாம் என்று அவர் சொல்வதில், சிவாஜி கணேசன் சிலையை வெறும் கட்டுமானமாக மட்டுமே பார்க்கிறார் என்று புரிகிறது.

நேர்நின்ற நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சிவாஜி கணேசன் சிலை உள்ள சாலை தனது நெடுஞ்சாலைத்துறை சேர்ந்தது அல்ல என்றும் தாம் அதில் நேரடியாக செயல்பட அதிகாரமில்லை என்றும் கூறிய பிறகு, அது பற்றி பதிலறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்படி செயலாளருக்கு நீதிபதி அக்னி கோத்ரி கட்டளையிடுகிறார். இவ்வாறு கட்டளையிடுவது, எந்தவகை சட்டத்திற்கு உட்பட்டது? 

ஓர் அதிகாரியின், அதிகார வரம்பில்லாத ஒரு சிக்கலில், அவரை உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து நேர் நிற்கச் செய்து, அவர் தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய பிறகும், அறிக்கை தாக்கல் செய்யச் சொல்வது என்ன சட்டத்திற்குப் பொருந்தி வரும்? எந்த நீதிக்கு பொருந்தி வரும்?

ஏழரைக் கோடி தமிழ் மக்களின் இன்றியமையாத் துறைகளில் ஒன்றான நெடுஞ்சாலைத்துறைத் தலைமை அதிகாரியை, அவருக்குத் தொடர்பில்லாத பிரச்சினையில் நீதிமன்றம் வரவழைத்து அவரது நேரத்தை வீணடித்ததும் இல்லாமல், அவரிடம் அதிகார அத்துமீறலாக நீதிபதி அக்னி கோத்ரி பதிலறிக்கை கேட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, சிவாஜி கணேசன் சிலை சிக்கலில் உறுதியான நிலையெடுக்காமல், சிலையை அகற்ற ஒப்புக் கொண்டது சரியான நடவடிக்கையல்ல. இனியாவது, அடுத்த நவம்பர் 16-க்குள் சிலையை அகற்ற வேண்டுமென்ற நீதிபதிகளின் கட்டளையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவோ அல்லது மேல் முறையீடோ செய்ய வேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது, தமிழினத்தின் பெருமைக்குரிய கலைச் சின்னத்தை இழிவுபடுத்துவதாக அமையும். உண்மையில், இப்பொழுதுள்ள இடத்தில் சிவாஜி கணேசன் சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு எதுவும் கிடையாது. 

ஒருவேளை, வாதத்திற்காக ஓரளவு இடையூறு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், தங்கள் இனத்தின் மாபெரும் அடையாளச் சின்னத்தை தகுந்த இடத்தில் மக்கள் முன் வைத்திருப்பதற்காக அந்த இடையூறைப் பொறுத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும். அப்படித்தான், இந்தியா உட்பட உலகெங்கும் பழம்பெரும் கலைச் சின்னங்களை மக்களும் அரசுகளும் பாதுகாக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறோம். அதற்காக இப்பொழுதுள்ள இடத்திலிருந்து சிவாஜி கணேசன் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்து, சிவாஜி சிலை அதே இடத்தில் இருக்கும்படி தமிழ்நாடு அரசு முயல வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.