ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு பெரும் இழப்பு! தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 25000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!

அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு பெரும் இழப்புதமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 25000 ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டும்தமிழ்நாடு உழவர் முன்னணி ஆலோசகர் கிவெங்கட்ராமன் கோரிக்கை!
இப்போது பெய்த திடீர் பருவ மழையாலும் அடித்த புயலாலும் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. புயல் பாதிப்பு என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொன்னாலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க முடியும்.

குறிப்பாக இப்போது பெய்த மழை என்பது எதிர்பாராதா பருவம் தவறிய மழை அல்ல, பெரிய மழையும் அல்ல. ஆனால் இது கடலூர் மாவட்டத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புக்கு முதன்மைக் காரணம் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்குதான் என்பதை தமிழக உழவர் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் இந்த பாதிப்பு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கால் நேர்ந்தது என்பதை யாராலும் உணரமுடியும். வீராணம் ஏரியில் கடைசி நிமிடம் வரையிலும் முழு அளவிற்கு தண்ணீர் தேக்கி வைத்ததால் பெரும் மழை பெய்த போது அந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் திடீர் என்று 09.11.2015 இரவு திறந்துவிட்டனர். அதன் காரணமாக வீராணம் ஏரி தண்ணீர் கிராமங்களில் புகுந்து நட்ட வயல்களை வேளாண்மையை முழுவதுமாக பாதிப்படைய செய்துள்ளது. வயல்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த மழை - புயல் எச்சரிக்கை வந்த உடனேயே வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை சென்னை குடிநீருக்காக தேக்கி வைக்காமல் இருந்திருந்தால் இந்த பாதிப்பு வர வாய்ப்பே இல்லை. ஆனால் கடைசி நேரம் வரையிலும் வீராணம் ஏரியில் முழு கொள்ளளவுத் தண்ணிரை சென்னை குடிநீர் தேவைக்காக தேக்கி வைத்ததற்கான விளைவு, பெய்த மழையை உபரியாக வெளியே திறந்து விட பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கு - உழவர் விரோத போக்கின் வெளிபாடே ஆகும்.

அதேபோல் காவிரிப் பாசன வாய்க்கால் பகுதிகளில் தூருவாருதல் நடைபெறவே இல்லை. எனவே வாய்கால்களும், வடிகால்களும் செடி கொடிகள் மண்டி நீர்வரத்து பெரிய பாதிப்புகளை சந்தித்தது. இதன் விளைவாக மழை நீர் வயல்களில் இருந்து வடிந்து வடிகால் வழியாக செல்லமுடிய வில்லை இந்த நிலைமையினால் பாசன வாய்கால் பகுதிகளில் வயல்களில் நீர் சூழ்ந்து வடிய முடியாமல் நட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த இரண்டிற்கும் வீராணம் பகுதி உழவர்களுடைய பாதிப்புக்கும் காவிரிப் பாசனப் பகுதி பாதிப்புக்கும் தமிழ்நாடு அரசின் அலட்சிய போக்கே காரணம் ஆகும்.

எனவே இதில் ஏற்பட்ட இழப்புக்கு முழுமைக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். உழவர்கள் அனைவருக்கும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் வெள்ள இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.