ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உயர் நீதிமன்றத்திற்கு நடுவண் படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றமே அரசமைப்புச் சட்டத்தை கவிழ்க்கிறது! - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


உயர் நீதிமன்றத்திற்கு நடுவண் படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றமே அரசமைப்புச் சட்டத்தை கவிழ்க்கிறது!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

வழக்குரைஞர்களின் போராட்டத்தை காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றப் பாதுகாப்புக்கு, நடுவண் தொழிலகப் பாதுகாப்புப் படையை அமர்த்த வேண்டுமென்றும், அதற்கு செலவாகும் 36 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்றும் கடந்த 30.10.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (04.11.2015) அளித்துள்ள தீர்ப்பு, அரசமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி முறைமையையும் நீதிமன்றமே கவிழ்க்கும் செயலாகும்.

கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற முழு ஆயம், கூட்டாட்சி முறைமை என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று என்றும், இது மீற ஒன்னாதது என்றும் உறுதிபடக் கூறியது. ஆனால், இப்போது நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர், பி.சி. பந்த் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, மேற்கண்டத் தீர்ப்பை மீறும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, காவல்துறை அதிகாரம் என்பது மாநில அரசைச் சார்ந்தது ஆகும். இதில், மாநில அரசின் கோரிக்கையின்றி நடுவண் அரசின் படைகள் வருவது என்பது மாநில உரிமைக்கு எதிரானதாகும். அரசமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அதிகாரப் பங்கீட்டை சீர்குலைப்பது ஆகும்.

இந்தக் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையின் மீது நம்பிக்கையில்லை என்றும், எனவே நடுவண் காவல்படை பாதுகாப்பு வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானதாகும்.

எனவேதான், மாநில அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றத்தின் ஆணையை உறுதிசெய்ததோடு மட்டுமின்றி நடுவண் தொழிலகப் பாதுகாப்புப் படை போதாதென்றால், நேரடியாக இராணுவத்தையும் அனுப்பத் தேவைப்பட்டால் அனுப்ப வேண்டும் என்று கூறியிருப்பது அரசமைப்பு சட்ட கவிழ்ப்பு ஆகும்.

நீதிபதிகளின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக அரசமைப்பு சட்டத்தை மாற்றிவிட முடியாது. உச்ச நீதிமன்றம் நிகழ்த்தியுள்ள இந்த அரசமைப்பு சட்டக் கவிழ்ப்பு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு, கூட்டாட்சி முறைமைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, அரசமைப்பு சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு இச்சிக்கலை எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.

மாநில உரிமையைப் பறிக்கும் இத்தீர்ப்பைக் கண்டிக்க வேண்டிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயர் நீதிமன்றம் சொன்னபோதே, தமிழ்நாடு அரசு இத்தீர்ப்பின்படி நடுவண் படை பாதுகாப்புக்கு இணங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துவது தங்களது பதவிப் போட்டி அரசியலில் தமிழ்நாட்டு உரிமையை பலி கொடுக்கும் மோசமான செயலாகும். இது ஏற்கத்தக்கதல்ல.

உச்ச நீதிமன்றமே மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் வகையில், அரசமைப்பு சட்டக் கவிழ்ப்பில் ஈடுபட்டிருப்பதை எதிர்த்து கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.