கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் கமலஹாசனின் கருத்து - தோழர் நா. வைகறை அறிக்கை!
கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் கருத்தே, நடிகர் கமலஹாசனின் கருத்து! தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நா. வைகறை அறிக்கை!
“நான் தேசிய விருதை திருப்பித் தர மாட்டேன்; விருதுகளைத் திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிப்பதாய் அமையும்.விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். விருதுகளைத் திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது” என்று 03.11.2015 அன்று, ஹைதராபாத்தில் அளித்த தனது பேட்டியில் நடிகர்கமலஹாசன் கூறியுள்ளார்.
இது ஒருவகையில் இந்துத்துவா மதவாத பா.ச.க. அரசுக்கு ஆதரவான கருத்தாகும்.
தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை, எழுத்தாளர்கள் கல்பர்கி, பன்சாரே உள்ளிட்டோர் படுகொலை, கர்நாடகத்தில் இளம் எழுத்தாளர் மீது தாக்குதல் என இந்துத்துவாவின் வெறிச்செயல்கள்,கருத்துரிமைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்தேறுகிறது. மேற்கண்ட செயல்கள் மற்றும் புனே திரைப்பட கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் தங்களுக்கு இந்திய அரசு வழங்கிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் மோடி அரசுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக கருத்துத்தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
குஜராத்தில் 3000 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு “காரில் போகும் போது பூனைக்குட்டிகள்அடிப்பட்டால் என்ன செய்வது” என்று நஞ்சு கக்கியவர்தான் மோடி. பா.ச.க. அரசினுடைய மதவாதநடவடிக்கைகள், இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. கருத்துரிமைக்குஎதிராக நடக்கும் வெறிச்செயல்கள் எதற்கும் பதிலளிக்காது, இந்தியத் தலைமையமைச்சர் மோடி மெளனம்காக்கிறார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றுசொன்னபோது, கமலஹாசன் கடைசி வரை அதை மறுத்து, “மும்பை எக்ஸ்பிரஸ்” என்று தனதுதிரைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் காவிரிப் போராட்டம் நடைபெற்றபோது, “காவிரியில் தண்ணீர்வரவேண்டுமே தவிர, இரத்தம் வரவேண்டியதில்லை” என்று கூறி, தமிழர் உரிமைப் பிரச்சினை என்பதைக்கடந்து கர்நாடகத்திற்கு ஆதரவானக் கருத்தைதான் உரைத்தார்.
திரைத்துறையினர் பலர் தொடர்ந்து முன் வைக்கும் “தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம்” என்ற பெயர்மாற்றக் கருத்தை குழிதோண்டி புதைக்கும் விதமாக சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்சங்கத் தேர்தலின் போது “இந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றுதனது இந்தியப் பாசத்தை வெளிக்காட்டினார். மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்று தன்னையார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.
தன்னை ஒரு முற்போக்காளன், பெரியாரிஸ்ட் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் கமலஹாசன் இப்போதுஇந்துத்துவா மதவாத அரசுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவரின் கருத்தென்பது ஆளும் பா.ச.க அரசுக்குவலுசேர்க்கவே பயன்படும்.
சமூகப் படைப்பாளிகள் அனைவரும் தொடர்ந்து கருத்துரிமைக்கு எதிராகக் களம் காண வேண்டும்.கமலஹாசன் போன்ற திரைப்பட கலைஞர்களை தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
இவ்வாறு தோழர் வைகறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment