ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்! - பெ. மணியரசன்


தமிழ்நாட்டு இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதற்கு சாதி, பிறப்பு, பழக்க வழக்கம், நடைமுறை என்பவை காரணங்களாக அமையக்கூடாது. இவற்றை நிபந்தனையாக்கி இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று 2006ஆம் ஆண்டு சூலை மாதம் 14ஆம் நாள் தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது (அப்போது தி.மு.. ஆட்சி). அதன்பிறகு, அதை முறைப்படி 29.08.2006 அன்று சட்டமாகப் பிறப்பித்தது.

இந்தச் சட்டம் மத நம்பிக்கைகளில் வழிபாட்டு நிகழ்வுகளில் அரசு தலையிடுகிறது. பரம்பரை பரம்பரையாக வாரிசுரிமை அடிப்படையில் வந்தவர்கள்தாம் அர்ச்சகர்களாக வர வேண்டும். அர்ச்சகர்களை அரசு நியமிப்பது, அரசமைப்புச் சட்ட உறுப்பு 25(1), 26 ஆகியவற்றிற்கு எதிரானது, இதனால் தங்கள் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலசங்கத்தினரும் மற்றவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இவ்வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி என்.வி. ரமணா ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பின் முகப்புரையில் நீதிபதிகள் கூறுவது மிகவும் கவனத்திற்குரியது.

இந்து மதம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது. இவற்றுள் எதை ஏற்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று அது கட்டளை இடவில்லை. ஒரு நிறுவனர் இல்லாத மதம்; ஒற்றைப் புனித நூல் இல்லை. ஒரு தொகுப்பு உபதேசங்களை மட்டும் கொண்டதல்ல. சனாதன தர்மம் என்ற நிரந்தர நம்பிக்கை பல நூற்றாண்டுகளின் உபதேசங்களை, கூட்டுப் பரப்புரைகளைக் கொண்டது. இவற்றை மனத்தில் இருத்திக் கொண்டு இந்த வழக்கைப் பரிசீலிக்கிறோம்”.

இத்தீர்ப்பு வந்தவுடன் (16.12.2015), பிற்பகலிலிருந்து தொலைக்காட்சி ஊடகங்கள் பலவற்றில், “அனைத்து சாதியினர் அர்ச்சகராக உச்ச நீதிமன்றம் தடை விதித்ததுஎன்ற பொருளில் அண்மைச் செய்திவெளியிட்டன. அரசியல் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும் தமிழ்நாடு அரசுச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது அல்லது முடக்கி விட்டது என்பன போன்ற பொருளில் அறிக்கைகள் தந்தனர்; முகநூல்களில் எழுதினர்.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு அரசு சட்டத்தைத் தள்ளுபடி செய்யவில்லை. மாறாக, சிவாச்சாரியர்களின் மனுக்களைத்தான் தள்ளுபடி செய்தது.

இந்தக் குழப்பத்திற்குக் காரணம் மேற்படித் தீர்ப்புரை சுற்றிசுற்றி, வளைத்துவளைத்துச் சொல்லப்பட்ட விதம்தான்!

இரண்டு நிலைபாடுகளுக்கிடையே இத்தீர்ப்பு சென்று, சென்று அதனதன்பக்கம் நின்று விவாதிக்கிறது. ஒன்று மதத்தில் கடைபிடிக்கும் மரபுவழிப்பட்ட மத உரிமைகள்முறைகள்; இன்னொன்று குடிமக்கள் அனைவரும் சமம்; அவர்களில் பாகுபாடு காட்டக்கூடாது; தீண்டாமை கடைபிடிக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலானது அரசமைப்புச் சட்டம் என்ற நிலைபாடு.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 25, 26-ஐக் கொண்டு இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய நிலை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 25(1) – எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மனச்சான்று சுதந்திரம் இருக்கிறது. அதனடிப்படையில் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றிட, கடைபிடித்திட, பரப்பிட சுதந்திரம் இருக்கிறது. அதேவேளை பொது ஒழுங்கு, ஒழுக்கம், பொது நலம் போன்றவற்றிற்குத் தீங்கிழைக்காமல் மதச் சுதந்திரத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

… …

25(2)–(b) சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது பொதுத்தன்மையுள்ள இந்து மத நிறுவனங்களை வகுப்பு, பிரிவு பேதங்கள் பார்க்காமல் அனைத்து இந்துக்களுக்கும் திறந்து விடுவது போன்றவற்றில் அரசு தலையிட்டுச் சட்டங்கள் இயற்ற உரிமை உண்டு.

26(b) பொது ஒழுங்கு, ஒழுக்கம், பொது நலம் ஆகியவற்றிற்கு உட்பட்ட நிலையில், எந்த மதப் பிரிவினரும் தங்கள் மதப்பிரிவின் செயல்பாடுகளை நிர்வகித்துக் கொள்ளலாம்.

இந்துக்களுக்குள் சாதி வேறுபாடு பார்க்காமல் எல்லா இந்துக்களும் முறையான ஆகமப் பயிற்சி உள்ளிட்ட இந்து ஆன்மிகப் பயிற்சிகளும் தீட்சையும் பெற்று கோயில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் போட்டதும், பின்னர் முறைப்படி அதைச் சட்டமாக்கியதும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 25(2)(b)-இன்படியும், 1972-இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவரைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்புரைப் படியும்தான்.

16.12.2015 அன்று அளித் தீர்ப்பில் நீதிபதிகள் பின்வருமாறு கூறுகிறனர்.

ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கோபால மூப்பனார் வழக்கில், கோயில் கருவறைக்குள் ஆகமம் அனுமதிக்காத நிலையில் பிராமணர்கள்கூட நுழையக் கூடாது என்று தீர்ப்புரையில் கூறியுள்ளது. பிராமணர்களே நுழையக்கூடாது என்று சொல்லும்போதுஅவர்களுக்கு எதிராகத் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூற முடியாது.  

எனவே, ஒருவர் அர்ச்சகர் ஆகலாம் அல்லது ஆக முடியாது என்பது தீண்டாமையைக் கடைபிடிப்பது ஆகாது. ஆகம விதிகள் மட்டுமே அங்கு கடைபிடிக்கப்படுகின்றன.

இரு நீதிபதிகளும் இவ்வாறு தீர்ப்புரையில் கூறியதின் மூலம், அர்ச்சகராக நியமனம் பெற, சாதியோ கோத்திரமோ அடிப்படை அல்ல என்றாகிறது.

அதேவேளை, இந்து மதத்தைச் சேர்ந்த யாராயிருந்தாலும், தேவையான கல்வித்தகுதியும், பயிற்சியும் இருந்தால் அவரை அர்ச்சகராக்கிவிடலாம் என்றால் ஆகமப்படியான வழிபாடு பாதிக்கப்படும் என்கிறது இத்தீர்ப்பு.

எனவே, 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இயற்றிய அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகி விடலாம் என்ற சட்டத்தின் மீது நடந்த வழக்கில் (சேசம்மா) 1972-இல் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தனி உட்பிரிவுக்கான (Denomination) கோயில் அர்ச்சகராகிட அந்தந்த இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகமப்படி பயற்சி பெற்றுதீட்சை பெற்று அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதை இத்தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

மேற்படித் தீர்ப்புரையில் கூறப்பட்டதற்கும் தமிழ்நாடு அரசு சட்டத்திற்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாட்டை இங்குக் கவனிக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் கல்வித் தகுதியும் ஆகமப் பயிற்சியும் இருந்தால் இந்துக் கோயில் எதிலும் அர்ச்சகராகலாம் என்கிறது தமிழ்நாடு சட்டம். அப்படிப் பொதுவாகக் கூறக்கூடாது, இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தஎந்த ஆகமப்படியான கோயிலோ அந்தக் கோயிலில் அந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அந்த ஆகமத்தில் பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இந்த நிபந்தனையை வைத்துக் கொண்டு, பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் அர்ச்சகராக முடியாது என்று நாம் முடிவுக்கு வரக்கூடாது. இந்த நிபந்தனையைப் பயன்படுத்தி, பிராமணரல்லாத மற்ற சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் அர்ச்சகர்கள் ஆக முடியும்.

இந்தத் தீர்ப்பில் சிவநெறிக்கு (சைவத்திற்கு) சிவாகமம் என்ற ஒரு ஆகமம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வைணவத்திற்கு பாஞ்சரத்னா மற்றும் வைக்கானசா ஆகமங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த ஆகமக் கோயில்களுக்கு அர்ச்சகராக வேண்டும் என்கிறார்கள்.

ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்? அந்தந்த ஆகமக் கோயில்களை வழிபடுபவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக!

இதை நடைமுறையில் பார்ப்போம்! வைணவத்தில் தென்கலைவடகலை என்ற இருபிரிவுகள் இருக்கின்றன. எளிதில் புரிந்து கொள்வதற்கான உவமையாக இது இங்கு சொல்லப்படுகிறது. தென்கலைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்துதென்கலைக் கோயிலுக்கு அர்ச்சகராக வேண்டும். வடகலையைச் சேர்ந்தவர் வடகலைக் கோயிலுக்கு அர்ச்சகராக வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்கலைத் திருவரங்கம் பெருமாளையும், வடகலை வடவேங்கடப் பெருமாளையும் பிராமணரல்லாத சாதிகளில் எல்லா வைணவரும் வழிபடுகிறார்கள். இவர்களை எந்தப் பெருமாள் கோயிலுக்கும் அர்ச்சகராக்கலாம். அக்கோயிலுக்குரிய ஆகமப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

அடுத்து, பிராமணரல்லாத சாதிகளில் எல்லா சாதிகளிலும் சிவன்முருகன் வழிபாடும் உள்ளது; பெருமாள் வழிபாடும் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த உட்பிரிவு (Denomination) பெரிய சிக்கலாகாது.

யாராவது சிக்கல் எழுப்பினால், எந்த ஆகமம் அதைக் கொண்டு வாருங்கள் என்று அரசு கூற வேண்டும். அத்துடன் வழக்குப் போடுபவர் எந்த ஆகமத்திற்கு எந்த கோயிலுக்கு உரியவர் என்பதை சான்றுடன் மெய்ப்பிக்குமாறு கோர வேண்டும். எந்த ஆகமமும் சாதி மற்றும் கோத்திரப்படி அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்று நிபந்தனை போடவில்லை என சத்தியவேல் முருகனார் போன்ற ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் இக்கருத்து உள்ளது. எல்லா சாதிகளுக்கும் பொருந்தக்கூடிய பொது நிபந்தனைகள்தான் போடுகின்றன.

பிறகு, அந்தந்த ஆகமங்களுக்குரிய கோயிலுக்கு அந்தந்த ஆகம வகையறாவை அர்ச்சகராக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த நிபந்தனை இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு. ஆனால், இந்த நிபந்தனைக்காககளத்திலிருந்து நாம் பின்வாங்க வேண்டியதில்லை.

இந்தத் தீர்ப்பிற்கு மறு சீராய்வு மனுப் போட்டால், இன்னும் பத்து ஆண்டு காத்துக் கிடக்க வேண்டும்.

இருநீதிபதிகள் கொண்ட இந்த அமர்வே கூறுகிறது, “ஒவ்வொரு நியமனத்திற்கும் தனித்தனியே செல்லுமாசெல்லாதா என்று நீதிமன்றத்திற்குப் போய்க் கொள்ளலாம்; ஒவ்வொன்றையும் நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்என்று.

நீதிபதிகள் முகப்புரையில் கூறியதை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்து மதத்தை எந்தத் தீர்க்கதரிசியும் உருவாக்கவில்லை. மக்களே உருவாக்கிக் கொண்டார்கள். இந்துமதம் பல கடவுள்களும் பன்முக வழிபாடுகளும் கொண்டது. அதில் அர்ச்சகர் மட்டும் ஒருமுகமாக இருக்க வேண்டும் என்பது நீதியும் இல்லை. இந்து மதத்திற்கு ஏற்றதுமில்லை.

நீதிமன்றம் ஒவ்வொரு நியமனத்தையும் தீர்மானிக்க நேர்ந்தால் தீர்மானிக்கட்டும்; ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாடு சட்டம் செல்லாது என்றோ, நிறுத்தி வைக்கப்படுகிறது என்றோ நீதிமன்றம் கூறவில்லை. மாறாக தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளைத்தான் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஆன்மிகச் சமூக நீதிக்கு அணிவகுக்க வேண்டிய தருணமிது.

தமிழ்நாடு அரசு, தன்னிடம் பயிற்சி பெற்ற 206 அர்ச்சகர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க எந்தத் தடையும் இல்லை. உடனடியாகப் பணி ஆணை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் மிகமிகக் குறைவான கோயில்களே ஆகமக் கோயில்கள். அவற்றில் அர்ச்சகர்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை.
தமிழ்நாடு அரசு அக்கோயில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் உடனே அமர்த்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு இத்திசையில் செயல்படும் வகையில், ஊக்கப்படுத்திட சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துப் பிரிவினரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.