ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஊடகங்கள் – அரசு சென்றடையாத சென்னை பொழிச்சலூர் பகுதிகளில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நிவாரணப்பணி!


குடி தண்ணீர் – தரை விரிப்பு - மாற்று உடை மருந்துப் பொருட்கள் மேலும் தேவை!

சென்னையில் மழை வெள்ளத்தினால் நிலைகுலைந்துள்ள பகுதிகளில், வீடிழந்து – உடைமைகளை இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும் பணிகளில், தமிழ்த் தேசியப் பேரிக்கம் ஈடுபட்டு வருகின்றது.

சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொழிச்சலூர் பகுதியில், அடையாறு ஆற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை, அரசு மற்றும் ஊடகங்கள் அப்பகுதி பாதிப்புகளை வெளிப்படுத்தவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உதவிகள் செய்யத் தொடங்கியபின், அரசு சார்பில் வெள்ள நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்றிலிருந்து (திசம்பர் 4), பொழிச்சலூர் வினாயகா நகர் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், வீடுகள் இழந்து தற்காலிகமாக பள்ளியில் உள்ளவர்களுக்கும் சப்பாத்தி, பிரெட், போர்வை, துணிகள், நாப்கின் எனப் பலப் பொருட்கள் தோழர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. நாளையும் பணிகள் தொடர்கின்றன.

ஈரோடு த.தே.பே. தோழர்கள் அளித்த உணவு – போர்வை உள்ளிட்ட பொருட்களும், சிதம்பரம் த.தே.பே. தோழர்கள் அளித்த சப்பாத்தி உள்ளிட்டவையும், நியூஸ்7 ஊடகத்தினரிடமிருந்து பெற்ற துணிகளும் அப்பகுதியில் மக்களிடம் வீடுவீடாகச் சென்று அளிக்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த, தமிழ்த் தேசியப் பேரியக்க முன்னணிச் செயற்பாட்டாளர் தோழர் கவியரசன் அப்பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை தோழர் இளங்குமரன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் வெற்றியொளி, ஈரோடு சரவணன், அன்பு, இரமேசு, சீவா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இப்பணிகளில் ஈடுபாடுடன் கலந்து கொண்டு, பணிகளைச் செய்தனர்.

தற்போது, இப்பகுதியிலுள்ள மக்களுக்கு பலரும் உணவுப் பொருட்களை அளித்து வருவதால், அவர்களுக்கு உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களேத் தேவை. எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் அதற்கு உதவுங்கள்.

கீழ்க்காணும் அலுவலக முகவரிக்கு, அப்பொருட்களை அனுப்பி வையுங்கள்.
21, முதல் தெரு, முதல் செக்டார், (சரவண பவன் உணவகம் அருகில்), கே.கே. நகர், சென்னை-78. பேச அழையுங்கள்: 044-24742911, 9841949462.









No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.