ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!
 
தஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு! 
 

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தும், கேரளா சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாக்கியும் அடாவடித்தனம் புரிந்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என 2011ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் நாள், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) எழுச்சியுடன் நடத்தியது.

சென்னை, குடந்தை, ஒசூர், கோவை ஆகிய இடங்களில் மலையாள ஆலுக்காஸ் உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டு, பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சையில் மலையாளக் கடைகளை முற்றுகையிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் ஆ. அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய தோழர்கள், திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் பிணையில் விடுதலையாகி, தஞ்சை மாவட்ட - கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணையில் பங்கேற்றனர். இன்று காலை வழங்கப்பட்டத் தீர்ப்பில், தோழர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் விடுதலையான தோழர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று வாழ்த்தினார். தோழர்களுக்காக வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் மு. கரிகாலன், சிவராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.