ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் ! தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து !

தமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் !தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து !





















இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கொண்டாடியது தமிழ்நாடு. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமையாளரான சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் அவர் தோழர்களும் 1923 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மே நாள் கொண்டாடினர்.

 இந்தியாவிலேயே முதல் முதலாக முறைப்படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தொடங்கப்பட்ட இடம் சென்னை. தமிழ்த்தென்றல் திரு வி.க. அவர்களும் அவருடைய தோழர்களும் 1918 ஆம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்கம் (Madras Labor Union) தொடங்கினர். 

1917 இரசியப் புரட்சியை இந்தியாவிலேயே முதல் முதலாக வாழ்த்தி வரவேற்றுப் பாடியப் பாவலர் பாரதியார்.

வரலாற்றுப் புகழ்மிக்க விடுதலைப் போர்க்களத்தில் பகைவர்களோடு போராடிக் கொண்டிருந்த காலத்திலும் ஆண்டு தோறும் தமிழீழத்தில் மே நாள் போராளிகளும் மே நாள் எழுச்சி நிகழ்வுகளும் கடைபிடித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

அவ்வாறான பெருமைமிக்கத் தமிழ் மரபின் சிறந்த பிரதிநிதியாய் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 2016 மே நாள் வாழ்த்துகளை உழைக்கும் மக்களுக்கும், இன அடிப்படையில் ஒடுக்கப்பட்டுள்ள தமிழின மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளிகள் மட்டுமின்றி உரிமைக்குப் போராடும் அனைத்து மக்களும் தங்களுக்கான எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் மேதை லெனின்!

காலனி நாடுகளைப் பிடிக்க அந்தக் காலத்தில் கையில் பீரங்கியும், துப்பாக்கியும் கொண்டு வந்தன ஏகாதிபத்தியங்கள். இந்தக் காலத்தில் உலகமயம் பொருளியல் என்ற ஆக்கிரமிப்பு வலையும் வளர்ந்த தொழில் நுட்பமும் கொண்டு வருகின்றன.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களை முறியடிப்பது என்பது ஒவ்வோரு தேசிய இனமும் நாடும் தங்கள் தாயகத்தை ஏகாதிபத்தியப் பொருளியல் அண்டாமல் தடுத்துக்கொள்வது தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களும் அண்டை ஏகாதிபத்தியமான இந்தியாவும் சேர்ந்துதான் நமது பொருளியலைச் சூறையாடுகின்றன. 

நம் உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறிக்கின்றன. நம் வாழ்வியல் – சுற்றுச்சுழல் அனைத்தையும் சீரழித்து வருகின்றன.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் மிகை நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொள்ளப் மரபு வழிப்பட்ட நமது சிறந்த வாழ்க்கை முறையை மீட்டல், இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக சமத்துவம், உழைக்கும் மக்கள் உரிமை, பெண்ணுரிமை முதலிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த்தேசியமே நமது உரிமைப் போராட்டத்தின் இலட்சியமாகும்.

உலகெங்கும் கடைபிடிக்கப்படும் உரிமை எழுச்சி நாளான மே 1 இல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தைப் புரிந்து கொள்ளவும் தமிழ்த்தேசிய இலட்சியத்தைக் கையில் ஏந்தவும் முன்வருமாறு கேட்டுக் கொண்டு, மே நாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.