ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியா நமக்கு எதிரியே என்ற புரிதல் வேண்டும்!

“முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியாநமக்கு எதிரியே என்ற புரிதல் வேண்டும்!”தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!


முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியா நமக்கு எதிரியே என்ற புரிதல் நமக்கு வேண்டும்என, சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில், ஊடகவியலாளர் ஏகலைவன் தொகுத்துள்ள நேர்காணல் தொகுப்பு நூல், நேற்று (17.05.2016) மாலை, சென்னையில் வெளியிடப்பட்டது.

சென்னை வடபழனி ஆர்.கே.வி. அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான்தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. திருச்சி வேலுச்சாமி, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் பால் நியூமன், தோழர் உமர், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தோழர் சிவ. செம்பியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினர். நூல் ஆசிரியரும், ஊகடயவியலாளர் திரு. விசுநாத் ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில், ஆதிராவின் 'நவீனக் கூத்துப்பட்டறை'யினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பின் வருமாறு பேசினார் :

முள்ளிவாய்க்கால் முடிவல்லஎன்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூலை தம்பி ஏகலைவன் தொகுத்துள்ளார். ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நேர்கணல்களை  அவர் எடுத்தார்.

தமிழினமே அம்புகள் பாய்ந்து, குருதி கொட்டிய வலியோடும், தமிழ்நாட்டுத் தமிழர் வெட்கியும் மனச்சான்று உற்பத்தியும் துன்புற்றிருந்த நேரத்தில், பக்கத்து மண்ணில் நம் கண்முன்னேயே தமிழீழ இனப்படுகொலை நடப்பதை எண்ணி நாம் துன்பப்பட்டுத் துடித்துக்  கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக இந்த நேர்காணல்களை அவர் எடுத்து வெளியிட்டார். அதில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன்.

முதலில், இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்த, அவர் பணி புரிந்த குமுதம் நிறுவனத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், குமுதம் இதழின் உரிமையாளர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அல்லர். இருப்பினும், தோழர் ஏகலைவனை சுதந்திரமாக இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்தார்கள். என்னைப் போன்றவர்களுக்கு அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எங்கள் கருத்துகள் அப்படியே, இந்த புத்தகத்திலும் வெளியாகி இருக்கின்றன. எந்தத் திருத்தமும் அவர் செய்யவில்லை.

தம்பி ஏகலைவனை செய்தியாளர் - ஊடகவியலாளர் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். அதற்கும் மேலாக அவர் மனச்சான்றுள்ள ஒரு மனிதர்ஒரு தமிழர்.

ஊடகவியலாளருக்கு உள்ள மனச்சான்றின்படி அவர், ஈழ விடுதலையின் பக்கம் நின்று, ஆதரவு நிலையில் கருத்துகளைப் பரப்பினார். என்னைப் போன்றவர்கள், ஈழவிடுதலைக்குத் தலைமையேற்றுப் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கம் நின்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பக்கம் நின்றுதான் கருத்துகளைக் கூறுகிறோம். நடுநிலை என்றெல்லாம் குழப்ப வேண்டியதில்லை. எல்லாரும் எங்களைப் போல் இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது ஞாயமும் இல்லை.

இந்த நேர்காணல்களில் பெரும்பாலும் ஈழவிடுதலை ஆதரவுக் கருத்துகளே காணப்படுகின்றன. அதற்கு, நம் போராட்ட ஞாயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த புத்தகத்தை ஈடுபாட்டுடன் தொகுத்த ஏகலைவன் மற்றொரு காரணம்!

ஒரு புத்தகத்தைப் பார்த்து எழுதி விடலாம். ஆனால் ஒரு பேச்சைக் கேட்டு, அதை சொற்றொடர்கள் தவறாமல் சரியாக அமைத்து எழுதுவது கடினமான பணி! சற்றொப்ப 632 பக்கங்களுக்கு நீளும் இந்த நேர்காணல்களை, ஏகலைவன் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பானது! அந்த உழைப்பை நாம் பாராட்ட வேண்டும்! நன்றி சொல்ல வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் தமிழினத்தின் ஆன்மாவாக, நம் கருத்துகள் இந்த நூலில் வெளியாகியுள்ளன. வரலாற்றைக் குழப்புவதற்கு இன்றைக்கு பலபேர் உள்ள நிலையில், உண்மையாக நடந்தது என்ன என்று வருங்காலத் தலைமுறைக்குத் தெரிவிக்க இந்த நூல் பெரிதும் பயன்படும் ஆவணமாகும்.

இந்த நூலுக்கு, “முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை, என்ன செய்ய வேண்டுமென்று, இந்த நூலில் உள்ள என் நேர்காணலிலேயே சொல்லி விட்டேன்.

தமிழீழத்தில்முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய அழிவு நேர்ந்ததற்கு, வெறும் பூகோள அரசியல் மட்டுமே காரணமல்ல. உலக நாடுகளைத் திரட்டி அந்த இனப்படுகொலையைச் செய்தது, இந்திய அரசு. அதன் சதியும் தமிழின வெறுப்பும் தான் முதன்மைக் காரணம்!

வரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். சிந்துச்சமவெளி தமிழர் நாகரிக நகரங்களை அழித்த அதே ஆரியப் பார்ப்பனிய பகைக் கும்பல்தான், “இந்தியவடிவில் கிளிநொச்சி நகரத்தையும் அழித்தது என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழர்களுக்கு ஒரு நாடு அமையக் கூடாது என்பதே அவர்களது எண்ணம்!

காங்கிரசு, பா..., மட்டுமின்றி வேறு எந்த அனைத்திந்தியக் கட்சி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தாலும், அவர்கள் நம் இனத்திற்கு எதிராகத்தான் இருப்பார்கள். தமிழீழ இன அழிவிற்குப் பிறகாவது அந்தப் புரிதல் நமக்கு வலுப்பட வேண்டும். அது முக்கியமானது.

தமிழீழத்திற்கு ஆதரவாக இந்தியாவை திருப்பிவிடலாம், தமிழ்நாட்டு சிக்கல்களுக்கு ஆதரவாக இந்தியாவைத் திருப்பிவிடலாம் என நம்மில் பலர் நினைக்கின்றனர். அது நடக்கவே நடக்காது! ஒருக்காலும், இந்தியாவை நமக்கு ஆதரவாகத் திருப்பவே முடியாது.

காவிரிப் பிரிச்சினையில் இந்தியாவை நம் பக்கம் திருப்ப முடியுமா? தமிழ்நாட்டு அரசியலில் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் இருப்பது ஒரு பாதிப்பு என்றாலும், நமக்கும் வேறொரு இனத்திற்கும் தகராறு என்றால், அந்த வேறொரு இனத்தைத்தான் இந்தியா ஆதரிக்கும். நம்மை ஆதரிக்க மாட்டார்கள்.

இவ்வளவு பெரிய இழப்புக்குப் பிறகும், நாம் இதனைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், பிறகு எப்பொழுது நாம் வாழ்வதுவெல்வது? ஈழத்தமிழர்கள்தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தப் புரிதலைப் பெற்றுச் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆற்றுநீர் சிக்கல்கள், தமிழ்நாட்டிற்குள் வெளி இனத்தாரின் ஆக்கிரமிப்பு, தமிழ் மொழி உரிமைப் பறிப்பு, இன உரிமைப் பறிப்பு போன்றவற்றில், தமிழ் மக்களைத் திரட்டிக் கால் பதித்து நின்று, அந்தப் போராட்டங்களின் வழியே ஈழ விடுதலைக்கு நாம் துணை செய்யலாம். அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், ஈழத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழ்நாட்டில் செயல்பட்டால், சிறிது காலம் நாம் செயல்படுவோம், அது வெகுமக்களிடம் வேரூன்றாத தற்காலிகமான மக்கள் ஆதரவாகவே அமையும். அதன்பின் அது பயனில்லாமல் போகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களைஅவர்கள் அடிமைப்பட்டிருப்பதை உணர்த்தி போராட்டக் களங்களுக்குத் திரட்ட வேண்டும். தனது சொந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட முன்வராத உளவியல் இங்கிருந்தால், அவர்கள் எப்படி ஈழத்தமிழர் விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

எனவே, இந்த உறுதியோடு இளைஞர்கள்மாணவர்கள் செயல்பட வேண்டும். சிந்திக்க வேண்டும். நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொள்ளாமல், நாம் தான் முன்னின்று செயலாற்ற வேண்டும் என, இலட்சக்கணக்கான தமிழர்கள் இறப்பிற்குப் பிறகாவது இளைஞர்கள் உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.

அதற்கான உந்துசக்தியை, இந்த நூல் நிச்சயம் வழங்கும். இந்த நூலை விற்பனை செய்ய எல்லோரும் துணை செய்ய வேண்டும். கடன்கள் ஏதுமில்லாமல், மறுபதிப்புக்கு இந்த நூல் வரும் அளவிற்கு, நாம் இந்நூலை கொண்டு சென்று விற்பனை செய்து, கருத்துகளைப் பரப்ப வேண்டும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

நிகழ்வில், தமிழ்த் தேசியப்பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் வடிவேலன், இளவல், சீவானந்தம், சரண்யா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளின் திரளான தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.