ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? பெ. மணியரசன் கேள்வி!

உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 05.09.2016-இல் கொடுத்த தீர்ப்பைக் கண்டித்து நேற்று (09.09.2016) கர்நாடகம் முழு அடைப்பு நடத்தியுள்ளது. இந்த முழு அடைப்பை ஆதரித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கை ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அத்துடன் அந்த முழு அடைப்புக்கு ஆதரவாக மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் சித்தராமையா விடுமுறை விட்டுள்ளார்.

மண்டியா மாவட்டத்தில் சாலைகளில் டயர் உள்ளிட்ட பல பொருட்களைப் போட்டு கொளுத்தி, நாள் முழுவதும் நெருப்பெறியச் செய்தார்கள். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குள் அத்துமீறிப் புகுந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை தடுத்து நிறுத்த மதகுகளை மூடுவதற்கு முயன்றார்கள். தமிழ்நாடு பதிவெண் கொண்ட சரக்குந்துகள் கன்னட வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபட்ட யார் மீதும் கர்நாடகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சட்ட விரோதக் காரியங்கள் அனைத்தும் ஊடகங்களில் காட்சிகளாக, செய்திகளாக வெளி வந்துள்ளன. இந்த சட்ட விரோதக் காரியங்களை மற்றும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டிக்கும் போராட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா ஆதரித்து அறிக்கை வெளியிட்டும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய மறுத்தும் செயல்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாததன் காரணமென்ன என்ற கேள்வி தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடித் தமிழர்களின் நெஞ்சில் எழுந்துள்ளது.

சேதுக்கால்வாய் விரிவாக்கத் திட்டத்தை ஆதரித்து 2007ஆம் ஆண்டு நடந்த முழு அடைப்பை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆதரிக்கிறார் என்று காரணம் கூறி, அவரது ஆட்சி கலைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அப்பொழுது எச்சரித்ததையும் தமிழர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

தாமதமானாலும் இனியாவது உச்ச நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.