மறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள் (பகுதி - 2) - கி. வெங்கட்ராமன் கட்டுரை!
மறுக்கப்படும் காவிரி
தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள்
(பகுதி - 2)
(பகுதி - 2)
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 1-15 இதழில் வெளியாகியுள்ள தோழர் பெ. மணியரசனின் கர்நாடகச் சிறையில் காவிரித்தாய் கட்டுரை, பொறியாளர் வீரப்பனின் ’கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன?’ கட்டுரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக இக்கட்டுரையைப் படியுங்கள்)
( மறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள் பகுதி - 1 )
( மறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள் பகுதி - 1 )
பா.ச.க.வின் தேர்தல் கணக்கா?
கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக
காங்கிரசுக் கட்சி இருக்கிறது. பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பில் உள்ளது.
பொதுவான அரசியல் நோக்கர்களின் மதிப்பீட்டின்படி, சித்தராமையாவின் செல்வாக்கு சரிந்து
வருகிறது. இவையெல்லாம் உண்மையே!
வருகிற 2018ஆம் ஆண்டு
நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதிய சனதா மோடி அரசு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து கர்நாடகத்திற்கு சாய்வாக நடந்து கொண்டுள்ளது
என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்படுகிறது.
பாரதிய சனதாவாக இருந்தாலும்,
காங்கிரசுக் கட்சியாக இருந்தாலும் தங்கள் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு, எல்லா
சிக்கல்களிலும் காய் நகர்த்துவார்கள் என்பது பொது உண்மைதான்!
ஆனால், காவிரிச் சிக்கலில்
இந்திய அரசின் அணுகுமுறைக்கு இந்தத் தேர்தல் கணக்கு முதன்மைக்காரணம் அல்ல! ஏனெனில்,
1991இன் இறுதியில், காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு உச்ச நீதிமன்ற நெருக்குதல்
காரணமாக, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு
எதிராக மிகக்கொடுமையான இனப்படுகொலைத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அன்றைக்கு பங்காரப்பாவின்
காங்கிரசு ஆட்சி நடைபெற்றாலும், அக்கட்சி மட்டுமின்றி அன்றைக்குக் கர்நாடகத்தில் வேகமாக
வளர்ந்து வந்த பா.ச.க.வும் இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டது. ஏறத்தாழ
ஒன்றரை இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டார்கள். 17 தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் நடத்திய நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன; தரைமட்டமாக
இடிக்கப்பட்டன.
அப்போதும் தீர்ப்பாயத்தின்
தீர்ப்பை ஒரு சிறிதும் நிறைவேற்ற மாட்டோம் என்றுதான் கர்நாடகம் நின்றது.
ஆனால், இவை அந்த மாநிலத்தின்
உடனடித் தேர்தல் கணக்கை கருத்தில் கொண்டு செய்யப்பட்டவை அல்ல! ஏனெனில், 1989ஆம் ஆண்டே
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து
முடிந்திருந்தது.
தனது கட்சியை வளர்ப்பதற்காக
பாரதிய சனதாவோ, காங்கிரசோ இவ்வாறு இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக வைத்துக் கொண்டாலும்,
தமிழர்களுக்கு எதிரான இனவெறி கர்நாடகத்தின் பெரும்பாலான கன்னட மக்களிடையே ஒப்புதலைப்
பெற்றிருக்கிறது, அதன் காரணமாக வாக்குகளை அதிகரித்துத் தரும் காரணியாக வளர்ந்திருக்கிறது
என்பதே பொருள்!
தேர்தல் காலமோ அல்லது
வழக்கமான காலமோ எதுவாக இருந்தாலும், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும்
காவிரித் தீர்ப்பை மதித்ததே இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு!
1892 மற்றும் 1924 ஆம்
ஆண்டு காவிரி ஒப்பந்தத்திற்கு எதிராகத்தான் ஏரங்கி, ஏமாவதி, கபிணி, இலட்சுமணதீர்த்தம்
ஆகிய சட்டவிரோத அணைகளை கர்நாடகம் கட்டியது. அணைகள் கட்டுவது என்பது சிறிய கட்டுமானப்
பணி அல்ல! இந்திய அரசின் கவனத்திற்கு வராமல் இந்த அணைகள் கட்டப்பட்டிருக்கவே முடியாது.
இந்திய அரசின் சட்டவழிப்பட்ட ஒப்புதல் இல்லாவிட்டாலும், கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத
நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக அமைந்ததால், இந்திய அரசு அமைதியான ஒப்புதலை அளித்திருக்கிறது.
இப்போதும், மேகத்தாட்டுவிலும்
இராசிமணலிலும் மேலும் சட்ட விரோத அணைகளைக் கட்டுவதற்கு முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டை
கர்நாடகம் தனது நிதிநிலை அறிக்கையில் முடிவு செய்துள்ளது. இதுவும் இந்திய அரசின் கவனத்திற்கு
வர முடியாத சிறிய செய்தியல்ல! இதிலும் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயலுக்கு இந்திய
அரசு மவுன சம்மதம் அளித்திருக்கிறது.
இவை அனைத்தும் தேர்தல்
கணக்குகளுக்கு அப்பால் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வருபவை ஆகும். பாரதிய சனதாக் கட்சி
கர்நாடகத்தில் காலூன்றுவதற்கு முன்பிருந்தே, இவை நடைபெற்று வருகின்றன.
எனவே, காவிரிச் சிக்கலில்
இந்திய அரசின் அணுகுமுறை தேர்தல் கணக்குகளில் மட்டுமே நடைபெறுவது அல்ல. அது முதன்மையானக்
காரணியும் அல்ல!
காங்கிரசும் பா.ச.கவும்
தமிழ்நாட்டில் நோகாமல் தங்கள் அமைப்பு வலுவைத் தாண்டி பல மடங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப்
பெறுவதற்கு வாய்ப்புள்ளது. தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய முதன்மைக் கட்சிகள் தமிழ்நாட்டில்
இந்த அனைத்திந்தியக் கட்சிகளை தூக்கிச் சுமப்பதற்கு எப்போதும் அணியமாகவே இருக்கின்றன.
தமிழ்நாட்டில் சிரமப்பட்டு கட்சி வளர்க்காமலேயே காங்கிரசு, பா.ச.க. போன்ற அனைத்திந்தியக்
கட்சிகள் பதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உறுதியாக உள்ளன.
தவிரவும், இவ்விரு முதன்மைக்
கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியை இந்திய ஆளும் கட்சி ஆதரவுக் கட்சியாக வைத்துக் கொள்ள
முடியும். இந்த வகையில், தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகப்பெரும்பான்மை
ஆதரவை தில்லி ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். வெறும் தேர்தல் கணக்கு என்று
கொண்டால், தமிழகத்தில்தான் அனைத்திந்தியக் கட்சிகளுக்கு குறிப்பாக இந்திய ஆளுங்கட்சிக்கு
கூடுதல் வாய்ப்பான சூழல் உள்ளது. கர்நாடகத்திலோ 28 மக்களவை உறுப்பினர்கள்தான். என்ன
முயன்றாலும் தில்லி ஆளுங்கட்சி ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத்தான் கர்நாடகத்தில்
பெற முடியும்.
இந்த நிலையிலும், சட்ட
மரபுகளைத் தாண்டி தமிழகத்திற்கு எதிராகவும் கர்நாடகததிற்கு ஆதரவாகவும் இந்திய ஆளுங்கட்சி
செயல்படுவதை வெறும் தேர்தல் கணக்கை வைத்து விளக்கிவிட முடியாது! மெய்நிலையில், அது
முதன்மைக் காரணம் அல்ல!
முதன்மையான காரணம் ஆரிய
இந்தியத்தின் தமிழினப்பகையே ஆகும். எனவேதான், தமிழர்களுக்கு எதிராக யார் வந்தாலும்
அவர்கள் பக்கம் இந்தியா நிற்கிறது. இந்திய ஆட்சியில் எந்தக் கட்சி – எப்படிப்பட்ட கூட்டணி
இருந்தாலும், இந்த நிலையில் ஒரு சிறிது மாற்றமும் இல்லை!
கர்நாடகத்தில் காங்கிரசு
ஆட்சி செய்தாலும், பா.ச.க.வோ சனதா தளமோ ஆட்சியில் இருந்தாலும் இந்தப் போக்கில் ஒரு
சிறிது மாற்றமும் இருப்பதில்லை.
பாரதிய சனதா மோடி அரசின்
காவிரி நிலைப்பாடு தமிழ்நாட்டில் பா.ச.க. வளர ஒரு சிறிதும் பயன்படாது. இது பா.ச.க.
தலைமைக்கு தெரியாத ஒன்றல்ல! அனைத்திந்தியக் கட்சிகள் வளர முடியாத ஒரு தனிச்சூழல் நிலவும்
தமிழ்நாட்டில், பா.ச.க. வளர்வது வேறு மாநிலங்களில் வளர்வதைவிட அடிப்படை முகாமை வாய்ந்தது
என்பது ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தலைமைக்குத் தெரியாததல்ல!
ஆனால், கட்சி வளர்ச்சியைவிட
தனது ஆரிய ஆதிக்கமே இந்தியத்திற்கு – இந்தியக் கட்சிகளுக்கு முதன்மையானது. எனவேதான்,
தமது கட்சி தலையெடுக்க முடியாவிட்டாலும் காவிரியில்லை, எக்காரணம் கொண்டும் தமிழினம்
தலைதூக்கிவிடக் கூடாது என்பதுதான் இந்தியத்தின் பெருவிருப்பம்! அதிலும் கூர்மையான ஆரியக்
கட்சியான பா.ச.க.வுக்கு அது தீராத வெறி!
ஆரிய இந்தியத்தின் அதன்
கூர்மையான பா.ச.க.வின் மாறாத தமிழினப்பகைதான், காவிரிச் சிக்கலில் மோடி அரசின் இந்த
முடிவுக்குக் காரணமாகும்.
செயலலிதாவின் உடல் நிலையா?
தமிழ்நாடு முதலமைச்சர்
செயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பது தமிழ்நாட்டில் ஒரு குழப்பான அரசியல்
நிலையை உருவாக்கியிருப்பது உண்மைதான்! ஒற்றைத் தலைமையின் கேள்விமுறையற்ற அதிகாரப்போக்கு
பழக்கப்பட்டுப்போன தமிழக ஆட்சி தேங்கி நிற்பது உண்மைதான்!
இப்போது உள்ளாட்சித்
தேர்தல் அறிவிக்கப்பட்டு, சிற்றூர்களிலும் மாநகரங்களிலும் அனைத்துமட்ட அரசியல் செயல்பாட்டாளர்களின்
கவனமும் அந்தப் பதவிச் சண்டையில் குவிந்துவிட்டதும் உண்மைதான்!
இவை, காவிரிச் சிக்கலில்
மோடி அரசின் சட்ட மீறலுக்கு முதன்மைக் காரணம் ஆகா!
2009 ஏப்ரல் – மே மாதங்களில்,
தமிழீழத்தில் நடந்த தமிழின அழிப்பு தமிழகத் தேர்தல் பதவிப்போட்டியில் கவனிக்கப்படாமல்
போனதுபோல், இப்போது மோடி அரசு தனது தமிழினப்பகை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல உள்ளாட்சித்
தேர்தலும் முதலமைச்சர் செயலலிதா உடல்நிலையும் வாய்ப்பான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளதே
தவிர, மோடி அரசின் முடிவுக்கு இது அடிப்படைக் காரணம் அல்ல!
ஏனெனில், செயலலிதா நல்ல
உடல்நிலையோடு சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அரசு காவிரிச்
சிக்கலில் இப்படித்தான் நடந்து கொண்டது! தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த
போதும், இப்படித்தான் நடந்து கொண்டது.
எனவே, முதலமைச்சர் செயலலிதாவின்
உடல்நலக் குறைவு இப்போதைய காவிரி உரிமைப் பறிப்புக்கு முதன்மைக் காரணம் அல்ல!
மோடி அரசின் தீராத தமிழினப்பகை
தான் காவிரிச் சிக்கலில் முதன்மைக் காரணமும் அடிப்படைக் காரணமும் ஆகும்!
அரசியலுக்கு
அப்பாற்பட்ட முயற்சி வெற்றி பெறுமா?
கர்நாடகத்தில் அரசியல்
கட்சிகள்தான் தங்களுடைய பதவி இலாபத்திற்காக காவிரிச் சிக்கலில் அநீதியாக நடந்து கொள்கின்றன,
அரசியலுக்கு அப்பாற்பட்ட இரண்டு மாநில குடிமைச் சமூகங்கள் முயற்சி மேற்கொண்டால் சுமூகமானத்
தீர்வு காணாலாம் எனக் கருதுவோர் உண்டு.
இந்தியா என்ற கட்டமைப்பு
உருவாவதற்கு முன்பாகவே, மன்னராட்சி காலத்திலேயே காவிரியைச் சிறைபிடிக்க கன்னடதேசம்
முயன்றதையும், தமிழ்நாட்டு மன்னர்கள் படையெடுத்துச் சென்று அணை உடைத்து காவிரியை மீட்ட
வரலாற்று உண்மையை, இவ்வகை கருத்துடையோர் கவனத்தில் கொள்வதில்லை! வரலாறு நெடுகத் தொடரும்
இனப்பகைச் சிக்கல் இது!
காவிரி இடைக்காலத் தீர்ப்புக்குப்
பிறகு “காவிரிக் குடும்பம்” என்ற பெயரில், இவ்வாறான “முயற்சிகள்(?)” மேற்கொள்ளப்பட்டன.
‘இந்து’ இராம் பின்னணியில் இருந்து கொண்டு, மன்னார்குடி ரெங்கநாதனை முன்வைத்து, இவ்வாறான
முயற்சிகள் 2003இல் தொடங்கின.
கர்நாடகம், தமிழகம் ஆகிய
இரண்டு முதன்மைக் காவிரி மாநிலங்களிலிருந்தும் விவசாய சங்கத் தலைவர்கள், நீரியல் தொடர்பான
ஆய்வாளர்கள், பாசனப் பொறியாளர்கள் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த “காவிரிக்குடும்பம்”
2012 வரையிலும் இரண்டு மாநிலங்களிலும் மாறி மாறி கூட்டங்கள் நடத்தின. சமரசத் திட்டங்கள்
என்ற பெயரால், பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்துமே தமிழகத்தின் காவிரி
உரிமையை கைவிட்டு – ஏதோ ஒரு சிறிது காவிரித் தண்ணீர் கர்நாடகம் தந்தால் போதும் என்ற
வகையிலேயே வரையப்பட்டன.
இந்தக் குடிமைச் சமூக
முயற்சியும் 2012இல் தோல்வியில் முடிந்தது. காரணம், ஒரு சொட்டு உரிமைத் தண்ணீரும் காவிரியில்
திறந்துவிட முடியாது என்பதே கர்நாடகத்தரப்பின் நிலையாக இருந்தது. அணை உடையும் வகையில்
உபரி நீர் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குக்
காவிரி நீர் தரப்படும் என்பதில், கர்நாடகத்தின் குடிமைச் சமூகத் தரப்பு உறுதியாக நின்றது.
தமிழகத் தரப்பு எவ்வளவு
சிறிய அளவு தண்ணீர் கேட்டாலும், அதை ஏற்க காவிரிக்குடும்பத்தின் கர்நாடகத் தரப்பு தயாராக
இல்லை. தமிழ்நாடு தனது காவிரி உரிமையை கைவிட்டுவிட வேண்டும் என்பதையே கர்நாடகத்தின்
குடிமைச் சமூகம் வலியுறுத்தியது.
அனைத்திந்தியம் பேசும்
இடதுசாரிக் கட்சிகள் அவை தேர்தல் கட்சிகளாக இருந்தாலும், தேர்தலுக்கு அப்பால் போராடும்
ஆயுத அமைப்புகளாக இருந்தாலும் காவிரியில் தமிழக உரிமையை தெளிவாக ஏற்றுக் கொள்வதற்கு
முன்வந்ததே இல்லை! மொக்கையாக இனவெறிக்கு ஆட்படாமல் காவிரிச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள
வேண்டும் என்று அறிக்கை விடுவார்களே அன்றி இந்த இடதுசாரிகள் கர்நாடகத்தின் இனவெறியை
– காவிரி மறுப்பை உரியவாறு கண்டுகொண்டதே இல்லை.
முதன்மைக் கட்சிகளும்
இல்லை, குடிமைச் சமூக அமைப்புகளும் இல்லை, ஆயுதப் போராட்டம் நடத்தும் இடதுசாரிகளும்
இல்லை, ஊடகங்களும் இல்லை, இதைத் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் முயற்சி எங்கிருந்து
நடத்துவது?
மெய்நிலையில் மலைபோல்
நிற்கும் கர்நாடகத்தின் இனவெறியை ஆரிய இந்தியத்தின் தமிழினப்பகையை காண மறுத்து கண்களை
இறுக மூடிக் கொள்வதன் விளைவே இந்த வாதம்!
உள்ளதை உள்ளபடி பார்ப்பவர்கள்,
காவிரிச் சிக்கல் வெறும் தண்ணீர் பகிர்வு சிக்கல்ல! அது ஒரு இனச்சிக்கல் என்பதைப் புரிந்து
கொள்வார்கள்.
இந்தக் குழப்பவாதங்களில்
சிக்கிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு இளைஞர்களும் உழவர்களும் காவிரிச்சிக்கல் அடிப்படையில்
ஒரு இனச்சிக்கல் எனப் புரிந்து கொண்டு, தமிழினமாக ஒன்றுதிரண்டு காவிரிப் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இனவெறி கர்நாடகத்திற்கு
துணை போகும் ஆரிய இந்திய அரசு, தமிழ்நாட்டில் செயல்படாமல் முடக்குவதற்கான நீண்ட போராட்டத்திற்கு
அணியமாக வேண்டும்!
இனப்பகை இந்திய அரசிற்கு
தமிழ்நாட்டின் ஞாயத்தை – இயற்கை நீதியை எவ்வளவு முயன்றாலும் புரிய வைக்க முடியாது!
இந்திய அரசைப் பணிய வைத்தால்தான், தமிழினத்தின் காவிரி நீதி நிலைநாட்டப்படும்.
நீதிக்கான போராட்டத்திற்கு
வீதியில் திரளுங்கள் தமிழர்களே!
(கட்டுரையாளர் கி. வெங்கட்ராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர், தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர்)
Leave a Comment