"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு கபட நாடகம் ஆடுகிறது இந்திய அரசு..!" பெ. மணியரசன் – புதிய தலைமுறை ஏட்டில் பேட்டி!
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு கபட நாடகம் ஆடுகிறது இந்திய அரசு..!" காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் – புதிய தலைமுறை ஏட்டில் பேட்டி!
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இந்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது!” என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், புதிய தலைமுறை வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
13.10.2016 நாளிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை வார ஏட்டில் வெளிவந்துள்ள பேட்டியில், தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளதாவது:
“சர்வதேச சட்டங்கள் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு காவிரியில் நமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுகளைத் தீர்க்க 1956ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு, அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு சமம். அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்ப இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் அதைச் செய்ய மறுக்கிறது இந்திய அரசு!
நாம் காவிரிப் பிரச்சினையை தண்ணீர் பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். ஆனால், கர்நாடகத்தினர் இனப்பிரச்சினையாகப் பார்க்கின்றனர். காவிரிப் பிரச்சினை எழும்போதெல்லாம் கர்நாடகாவில் வசிக்கும் அப்பாவித் தமிழர்களைத் தாக்குகிறார்கள். இந்த இனவாதத்தை இந்தியத்தேசியம் பேசம் காங்கிரசு, பா.ச.க., மதசார்பற்ற சனதா தளம் போன்ற கட்சிகள் தூபம் போட்டு வளர்க்கின்றன.
இப்போது கர்நாடகாவில் நடந்த வன்முறைகளைப் போலவே 22.11.1991-இல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்போதும் பல ஆயிரம் தமிழர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன; 12 தமிழர்களைப் படுகொலை செய்தனர். அப்போது, நரசிம்மராவ் பிரதமராகவும், பங்காரப்பா முதல்வராகவும் இருந்தனர். அதற்கு எந்த வழக்கும் இல்லை; யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
இப்போது நடந்த பிரச்சினையிலும் பல தமிழர்களின் உடைமைகள் தாக்கப்பட்டன. எரிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் வெளிப்படையாகக் காட்டுவது இனப்பகைதான்! இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில்தான் இந்திய அரசின் நடவடிக்கை உள்ளது.
இந்திய அரசு கன்னடர்களையும் தமிழர்களையும் சமதட்டில் வைத்துப் பார்ப்பதில்லை. காங்கிரசாக இருந்தாலும் பா.ச.க.வாக இருந்தாலும் தமிழர்களை எப்போதும் வஞ்சிக்கும் அரசாகத்தான் இந்திய அரசு உள்ளது. அதற்குக் காரணம் நாம் சமற்கிருதம், இந்தி, ஆரியம் உள்ளிட்ட அவர்களின் எந்தக் கொள்கையிலும் தனித்து நிற்பதுதான்!
கச்சத்தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்தனா. நாம் கேட்டதும், கச்சத்தீவு ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று காங்கிரசு அரசு சொன்னது. அதையேதான் பா.ச.கவும் இப்போது சொல்கிறது. காசுமீரிலோ, அருணாச்சலப்பிரதேசத்திலோ ஒரு துண்டு நிலத்தை பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ விட்டுக் கொடுக்குமா இந்திய அரசு?
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே உள்ளது. ஆனாலும், கேரள அரசு அங்குள்ள நமது அலுவலகத்துக்கு மின்சாரம் தர 15 ஆண்டுகளாக மறுத்து வருகிறார்கள். இதிலும் இந்திய அரசு மௌனமாக இருக்கிறது. தமிழர்களுக்கும் இன்னொருவருக்கும் பிரச்சினை என்றால் தமிழர்களுக்கு எதிரானவர்களுடன் கைகோர்ப்பதே இந்திய அரசின் நிலைப்பாடு! அது பக்கத்து நாடாக இருந்தாலும் சரி, பக்கத்து மாநிலமாக இருந்தாலும் சரி!
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், “பக்ராநங்கல் அணை மேலாண்மை வாரியம் போல ஒரு அதிகார அமைப்பை உருவாக்குகங்கள். அல்லது அதற்கு இணையான வேறொரு அமைப்பை உருவாக்குங்கள். அப்படியொரு அமைப்பை உருவாக்காவிட்டால் இந்தத் தீர்ப்பை கர்நாடகம் நிறைவேற்றாது. இது வெறும் காகிதத்தில்தான் இருக்கும்” என்று நீதிபதிகளே சொன்னார்கள்.
பக்ராநங்கல், கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட மேலாண்மை வாரியம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அப்படியிருக்கும்போது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் நாடாளுமன்றத்தால்தான் அமைக்க முடியும் எனச் சொல்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது. 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுச் சட்டத்தின் 6ஏ உள்ளிட்ட பிரிவுகளின்படி, இந்திய அரசே மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-இல் வந்தது; அத்தீர்ப்பு 2013இல் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. என்னவோ நேற்றுதான் தீர்ப்பு வந்ததுபோல உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என இந்திய அரசு கூறுவது கபட நாடகம்!
இதன்மூலமாக, இனி காலாகாலத்துக்கும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடையாது என்று கர்நாடகம் சொல்லி வருவதை நடுவண் பா.ச.க. அரசும் ஆமோதிக்கிறது என்றுதான் அர்த்தம். நாடாளுமன்றத்தின் மூலமாகத்தான் மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்றால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்களைத் தவிர யார் நமக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள்? எப்படி சட்டம் நிறைவேற்ற முடியும்? ஒரு காலத்திலும் காவிரி நமக்குக் கிடையாது என்பதைத்தான் இந்திய அரசு வேறு சொற்களில் சொல்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நம் உடலோடும் உயிரோடும் பிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக்கூட நடத்தாமல் இருந்தோம். ஆனால், அதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட திறந்துவிட முடியாது எனக் கொக்கரிக்கிறது கர்நாடகா. அவர்களுக்குப் பரிசுகளையும் சன்மானங்களையும் வழங்குகிறது இந்திய அரசு! தீர்ப்புகளை மதித்து நடக்கும் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து தண்டனைகளையே தருகிறது.
நமது உரிமையை நிலைநாட்ட ஒற்றுமையுடனும் தற்காப்பு உணர்ச்சியுடனும் மேலும் வலுவான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமை மீட்புக் குழு
Leave a Comment