ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு! 'பசுமை விகடன்' ஏட்டில் கி. வெங்கட்ராமன் பேட்டி!

காவிரி மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு! 'பசுமை விகடன்' ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் பேட்டி!




“காவிரிச் சிக்கலுக்கு மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு” என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி. வெங்கட்ராமன், “பசுமை விகடன்” ஏட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
25.10.2016 நாளிட்ட பசுமை விகடன் ஏட்டில், தோழர் கி. வெங்கட்ராமன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :
“அரியானா, பஞ்சாப், ராசஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களுக்கிடையேயான பக்ரா நங்கல் நதிநீர்ப் பகிர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள பக்ரா நங்கல் நதிநீர்ப் பகிர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள பக்ரா – பியாஸ் மேலாண்மை வாரியம் இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “அந்த மாநிலங்களுக்கான நீர்ப்பாசனம், நீர் மின்திட்டம், குடிநீர் ஆகியவற்றுக்கு எப்போது எவ்வளவு தண்ணீர் தேவை என்பதையெல்லாம் பக்ரா – பியாஸ் மேலாண்மை வாரியம்தான் முடிவு செய்து வருகிறது. அதனை ஒத்ததாகக் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்ட வேண்டும்” என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தன்னிச்சையான, சுதந்திரமான, அதிகாரமிக்க அமைப்பாக அவ்வாரியம் செயல்படும். நடுவண் நீர்வளத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தலைமைப் பொறியாளர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார். கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை வல்லுநர்களும், இந்த நான்கு மாநிலங்களைச் சாராத நீர்வளத்துறை வல்லுநர்கள், புவி இயற்பியல் வல்லுநர்கள், வேளாண் துறை வல்லுநர்கள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஏமாவதி, ஏரங்கி; தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், பவானிசாகர், அமராவதி; கேரள மாநிலத்தில் உள்ள பானாசூர சாகர் ஆகிய 8 அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடும்.
இந்த அணைகளைக் கண்காணிப்பது, நீர் மேலாண்மை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேலாண்மை வாரியமே மேற்கொள்ளும். அணைகள் பராமரிப்பு, அன்றாட அலுவல்கள் ஆகியவை மட்டுமே அந்தந்த மாநிலங்களிடம் இருக்கும். அந்தப் பணிகளின் செலவுகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவற்றை வழக்கம்போல் அந்தந்த மாநிலங்களே வழங்கும்.
ஆனாலும்கூட பராமரிப்பு தொடர்பான ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு உண்டு. உதாரணமாக, அணைகளில் கதவுகள் பழுதடைந்தால், அதனைச் சீரமைக்கச் சொல்லி மேலாண்மை வாரியம் ஆணையிட முடியும். அந்த ஆணைகளை அந்தந்த மாநிலங்கள் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் தன்னுடைய துணை அமைப்பாகக் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்துக் கொள்ளும். இந்தக் குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை வல்லுநர்கள் மற்றும் இந்த நான்கு மாநிலங்களைச் சாராத நீர்வளத்துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒழுங்காற்றுக் குழு நேரடியாக எட்டு அணைகளையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் தில்லியில் செயல்படும். மேலாண்மை வாரியத்தின் ஆணைகளை ஒழுங்காற்றுக் குழு செயல்படுத்தும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கினால், காவிரி நீர் மேலாண்மையில் எந்தவொரு மாநிலமும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது. இந்த இரண்டு அமைப்புகளும் இயங்குவதற்கான செலவுகளை நான்கு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். கர்நாடகா மற்று தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தலா 40 விழுக்காடு செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 விழுக்காட்டுச் செலவையும், புதுச்சேரி 5 விழுக்காட்டுச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நிகரானது. எனவே, அத்தீர்ப்பை எதிர்த்து எந்த ஒரு மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் தடை விதிக்கவும் முடியாது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள தண்ணீர் அளவை மாற்றக் கோரிதான் நான்கு மாநிலங்களுமே நடுவர் மன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டுள்ளன. அது நிலுவையில் இருக்கும் வரை, மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சொல்கிறது.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகத் தெளிவான ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. “உடனடியாக மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் நடுவர் மன்றம் தன்னுடைய தீர்ப்பின் தண்ணீர் அளவில் ஏதேனும் மாற்றம் செய்தால், அதனை மேலாண்மை வாரியம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே சட்டப் போராட்டங்களின் மூலமாகக் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை கண்டிப்பாக நம்மால் கொண்டு வர முடியும். காவிரிப் பிரச்சினைக்குக் கண்டிப்பாக விரைவில் தீர்வு வரும்”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.