இரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்? - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இரசியப்புரட்சி - 100:
வென்ற புரட்சி வீழ்ந்ததேன்?
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மனித குல வரலாற்றில் இரசியப் புரட்சியை உலகம் கொண்டாடியதைப் போல் வேறெந்தப் புரட்சியையும் கொண்டாடியதில்லை. அதுவரை நடந்த புரட்சிகளில் மக்கள் அனைவர்க்குமான புரட்சியாக வெற்றி அடைந்தது இரசியப் புரட்சி மட்டுமே! 1917 நவம்பர் 7-இல் வெற்றியடைந்த அப்புரட்சிக்கு அகவை 99 முடிந்து நூறாவது ஆண்டு தொடங்கியுள்ளது.
இன்றும் உலகெங்கும் மதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூரப்படும் அந்த இரசியப் புரட்சி அது அரங்கேறிய நாட்டில் உரியவாறு போற்றப்பட வில்லை. இரசியாவில் அரசு விழாவாக கொண்டாடப்படவில்லை. சிறிய எதிர்க்கட்சியாகிவிட்ட
கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடும் நிகழ்வாக அங்கு சுருங்கி விட்டது.
எந்திரக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் உரிமையில் தனிநபர் ஏகபோகமும் வளர்ந்து முதலாளிய ஆதிக்க சமூகங்கள் உருவானபின் -_ உள்நாட்டு மக்களை மட்டு மின்றி - வெளிநாடுகளைச் சுரண்டும் காலனிய ஆதிக்கங்கள் வளர்ந்தபின் _- மனிதனை மனிதன் அடிமைப் படுத்தாதே, மனிதனை மனிதன் சுரண்டாதே என்ற மார்க்சிய _- லெனினியக் கருத்தியல் எழுந்தது. அதன்முதல் செயல்வடிவம் இரசியப் புரட்சி!
“அவரவர் ஆற்றலுக்கேற்ற உழைப்பு, அவரவர் உழைப்புக்கேற்ற பலன்” என்ற மனித சமத்துவ நீதி சமூக சட்டமாகியது! அதன் பெயர் நிகரமை (சோசலிசம்)!
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்”
என்று இரசியப்புரட்சியின் பயன்பாட்டை 1917-லேயே பாடினார் பாரதியார். “ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று பாடி தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்தார் பாரதியார்.
வறுமை இல்லை; ஆதிக்க மனிதர்கள் இல்லை; வேலையில்லை என்று யாருமில்லை; விலைவாசி உயர்வில்லை; கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குக் கடைசி நிலை வரை கட்டணமில்லை; மலிவான பயணக் கட்டணம் - இப்படி எத்தனையோ சாதனைகள் சோவியத் ஒன்றியத்தில்!
இரசியப் புரட்சிக்கு முன்னும் புரட்சிக்குப் பின்னும் அங்கு கிளர்ந்தெழுந்த மக்கள் கலைகளும் இலக்கியங்களும் முன்னத்தி ஏர் ஓட்டும் படைப் பாளிகளை உலகிற்கே அடையாளம் காட்டின!
மண்ணளாவிய சாதனைகள் மட்டுமின்றி விண்ணளாவிய சாதனையாக 1957-இல் முதல் முதலாக ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோள் ஏவியது சோவியத் ஒன்றியம்!
உலகை நடுங்க வைத்த இட்லரின் ஆக்கிரமிப்புப் படைகளை நடுங்க வைத்து ஓட ஓட விரட்டியது சோவியத் படை!
கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிகள்; சீனப்புரட்சி வெற்றி, கியூபப் புரட்சி வெற்றி, வியட்நாம் வெற்றி என இரசியப் புரட்சியின் வெற்றி விரி வடைந்தது. உலக நிகரமை முகாம் உருவானது.
சோவியத் ஒன்றியம் - சீனா இடையே 1960களில் ஏற்பட்ட பிளவு, சோவியத் முகாம் _- சீன முகாம் என்று பிரிவினையை ஏற்படுத்தியது.
பொதுவுடைமை முகாம் சரிவிற்கு முதல் வித்திட்டது சோவியத் - சீனப் பிளவு! இரு நாடுகளும் -இரு பொதுவுடைமைக் கட்சிகளும் கடும் பகைமையுடன் எல்லா முனையிலும் மோதிக் கொண்டன.
பட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று மற்ற நாட்டினர்க்குப் பாடம் நடத்திய இவ்விருநாட்டுத் தலைமைகளும் தங்கள் நாட்டு நலன் - தேசிய நலன் - அரசியல் தலைமை என்ற அடிப்படையில் பிளவு பட்டன. இம்முரண்பாட்டில் நடைமுறைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் சில இருந்தன. ஆனால், இது தத்துவப் போர் போல் மிகைப்படுத்திக் காட்டப்பட்டது.
பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைச் சொந்த தேசிய நலனுக்கு உட்படுத்தியே சோவியத் ஒன்றிய - சீனப் பொதுவுடைமைக் கட்சிகளும், அரசுகளும் செயல்பட்டன. உலகம் சுற்றுவதைவிட இந்தியாவின் பட்டறிவை வைத்தே நாம் இதுபற்றி அறிய முடியும்.
சோவியத் ஒன்றியத்தை இந்திய அரசு பன்னாட்டு அரங்கிலும் உள் நாட்டரங்கிலும் ஆதரிக்க வேண்டும் என்பது அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் அரச உத்தி! இதற்காக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று சோவியத் கட்சி திட்டம் தந்தது. இந்தியத்தேசியக் காங்கிரசுக் கட்சி முற்போக்காளர்களையும் தேசிய முதலாளிய ஆற்றல்களையும் அதிகமாகக் கொண்ட கட்சி என்று வர்க்க முற்போக்கு முத்திரை குத்தியது சோவியத் கம்யூனிஸ்ட்டுக் கட்சி!
நெருக்கடி நிலைச் செயல்பாட்டுக் காலத்தில் (1975 - 1977),
சோவியத் ஒன்றியத்தின் தன்னலச் சர்வதேசியம் பளிச்சென்று தெரிந்தது.
பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைத் தடை செய்து நெருக்கடி நிலையை அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கொண்டு வந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நெருக்கடி நிலை பற்றி நடந்த வழக்கில், அன்றைய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிரேன் டே, “உயிர் வாழும் உரிமையும் (அரசமைப்புச் சட்ட உறுப்பு 21) நெருக்கடி நிலை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.
இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கில் தலைவர்களும் தொண்டர்களும் இடதுசாரிகள், வலது சாரிகள் என அனைத்து வகையினரும் இரவோடிரவாகத் தளைப்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நெருக்கடி நிலைச் சாற்றலை (பிரகடனத்தை) மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்தது; அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாகப் பணியாற்றினர்; ஆனால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நெருக்கடி நிலையை வரவேற்று, அதை முற்போக்கு நடவடிக்கை என்று வர்ணித்தது. தொழிலாளர் போனசு உரிமை பறிக்கப்பட்டதைக் கூட ஏற்றுக் கொண்டது அக்கட்சி!
ஏனெனில் சோவியத் பொதுவுடைமைக் கட்சி இந்தியத்தேசியக் காங்கிரசை - இந்திரா காந்தி தலைமையை ஆதரிக்கும்படி இந்தியப் பொதுவு டைமைக் கட்சிக்கு வழிகாட்டியது. சோவியத் கட்சியின் இந்தியக் கிளையாகவே சி.பி.ஐ. செயல்பட்டு வந்தது.
நெருக்கடி நிலைச் சாற்றல் செயலில் இருந்தபோது சோவியத் ஆட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான பிரஷ்னேவ் தில்லி வந்திருந்தார். அவரைச் சந்தித்த சோசலிசக் கட்சித் தலைவர் மதுலிமாயி, “நீங்கள் இந்திய நெருக்கடி நிலைச் சாற்றலை ஆதரிப்பது சரியில்லையே” என்றார். அதற்கு பிரஷ்னேவ், “இந்திய தேசியக் காங்கிரசு என்பது ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்திச் செயல்பட்ட இடதுசாரிக் கட்சியான சமூக சனநாயகக் கட்சி போன்றது. இந்தியாவில் எதிர்க்கட்சியே தேவையில்லை. நெருக்கடி நிலை - பிற்போக்கு ஆற்றல்களை எதிர்த்துப் பிறப்பிக்கப்பட்ட முற்போக்கு நடவடிக்கை” என்றார்.
பிரஷ்னேவைச் சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுலிமாயி மேற்கண்ட செய்தியைச் சொன்னார். அது அப்போது ஏடுகளில் வந்தது. சோவியத் ஒன்றியத்தின் சவலைப் பிள்ளையாகத்தான் கடைசி வரை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி இருந்தது.
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் - அதன் ஆட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் எப்படி இருந்தது?
இந்தியத் தலைமை அமைச்சர் பண்டித நேருவை 1950களில் பாராட்டிக் கொண்டிருந்தது சீனக்கட்சி. 1955 ஏப்ரல்
18 - 24 நாட்களில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இந்தோனேசியாவில் பாண்டுங் நகரத்தில் மாநாடு நடத்தி - ஐம்பெரும் நட்புறவுக் கொள்கை (பஞ்ச சீலம்) வகுத்தன.
1960 ஏப்ரலில் சீனத் தலைமை அமைச்சர் சூஎன்லாய் இந்தியா வந்தார். பண்டிதரும் சூஎன்லாயும் ஒரே ஊர்தியில் பவனி வந்தனர். அப்போது “இந்தியரும் சீனரும் உடன்பிறப்பு – உடன்பிறப்பு” (இந்தி - சீனி பாயி பாயி) என்று இருவரும் முழக்கம் கொடுத்தனர்.
ஆனால் 1962 அக்டோபரில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் போர் மூண்டபின் -அதை அடுத்த ஆண்டுகளில் இந்தியத்தேசியக் காங்கிரசுத் தலைமை - இந்திய ஆளும் வர்க்கம ஆகியவை பற்றிப் புதிய வர்க்க நிர்ணயிப்பை மாவோ தலைமையிலான சீனக் கட்சி வெளியிட்டது.
காங்கிரசுக் கட்சி தரகு முதலாளியக் கட்சி - இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கம், இந்திய மக்கள் புரட்சியின் முன் மாலைப் பொழுதில் இருக்கிறார்கள், இந்தியப் புரட்சியை இந்தியப் பொதுவுடைமையாளர்கள் தொடங்க வேண்டும் என்றது.
ஆனால் பாக்கித்தான் ஆளும் வர்க்கத்தைத் தரகு முதலாளி வர்க்கம் என்று சீனக்கட்சி வரையறுக்க வில்லை. இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கும்போது, இந்தியாவிலிருந்து பிரிந்த - ஒப்பீட்டளவில் சிறிய பாக்கித்தானின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்காதா?
1962லிருந்து இன்று வரை பாக்கித்தான் சீனாவின் நட்பு நாடு என்று சொல்வதைவிட உடன்பிறப்பு நாடாகவே இருந்து வருகிறது. ஏன்? இந்தியாவை எதிர்க்கப் பாக்கித்தான்தான் பயன்படும்!
தனது மேலாதிக்கத்திற்குக்
கீழ்ப்படியாத செக்கோஸ்லோவாக்கியா
- கம்யூனிஸ்ட் ஆட்சியின் தலைவர் அலெக்சாண்டர் துப்செக்கை நீக்கிவிட்டு அங்கு தனக்குக் கையடக்கமான ஆட்சியை சோவியத் படை அமர்த்தியது. இதுவும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் பெயரால்தான் நடந்தது. இதற்காக அந்நாட்டில் சோவியத் கூட்டணிப் படைகள் நடத்திய குருதி
வேட்டைக் கொடுமையானது.
தென்னமெரிக்க நாடான சிலியில் தேர்தல் மூலம் மார்க்சியத் தலைவர் அலெண்டே குடியரசுத் தலைவர் ஆனார். அவர் வட அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள் பலவற்றை அரசுடைமையாக்கினார்.
வட அமெரிக்கச் சார்பாளராக இருக்க மறுத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ. சிலியின் படைத்தளபதி பினோசே என்பவருடன் கூட்டுச் சதி செய்து, அலெண்டேயை சுட்டுக் கொன்று ஆட்சியை பினோசெயிடம் ஒப்படைத்தது (1973).
பினோசே மார்க்சியவாதிகளையும்,
முன்னாள் அமைச்சர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும், மனித உரிமை அமைப்பினரையும், மக்களையும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றான். பின்னாளில் அதற்காகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டான். அந்தப் பினோசே ஆட்சிக்கு ஏற்பிசைவு வழங்கி ஆதரித்து வந்தது சீன ஆட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்! அப்போதும் மாசேதுங் அவர்கள்தான் சீனக்கட்சியின் தலைவர்!
சோவியத் கட்சியும், சீனக்கட்சியும் தன்தன் நாட்டு நலனுக்கேற்ப பெரியண்ணன் வேலை செய்து மற்ற நாட்டு உரிமைகளை, நலன்களைப் பலியிடத் தயங்கவில்லை. எனவே சோவியத் ஒன்றியம் சீனாவும் கடும் பகை நாடுகளாயின! சோவியத் ஒன்றியமும் சமூக ஏகாதிபத்திய நாடு என்றது சீனக்கட்சி!- அத்தோடு நிற்கவில்லை. உலக மக்களின் முதல் எதிரி சமூக ஏகாதிபத்திய சோவியத் நாடுதான் என்றது சீனா! அமெரிக்க முதலாளிய
ஏகாதிபத்தியம் இரண்டாவது உலக எதிரி என்றது. மற்ற நாடுகள் மூன்றாவது வகை நாடுகள் என்றது. இதுவே 1970களில் -மாவோவின் சீனா வைத்த மூன்றுலகக் கோட்பாடு என்று விரிந்தது. இந்த மூன்றுலகக் கோட்பாடு எவ்வளவு பிழையானது என்பது சோவியத் வீழ்ச்சியின் போது மெய்ப்பிக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட்டு ஆட்சி 1991-இல் முடிவுக்கு வந்தது. சீனத்தில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் முதலாளியக் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
என்ற பொதுவுடைமைக் கட்சியின் ஒற்றை மேலாண்மை ஆட்சி அங்கு முதலாளியம் திரும்புவதைத்
தடுக்க முடியவில்லை. சிவப்பு வண்ணத்தை வைத்துக் கொண்டே முதலாளியத்திற்கும் சீரழிந்தனர்.
சீனர்களில் பெரும்பெரும் முதலாளிகள் உருவாகியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களே முதலாளிகளாக உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனத்தில் மிகவும் இலாபத்தோடு இயங்குகின்றன.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உயரியக் கொள்கைதான் - அதை இப்போது செயல்படுத்த முடியாது என்பதைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரவர் தேசியத்திலும் சமத்துவக் கொள்கைகள் - அந்தந்த தேசத்திற்குரிய வழியில் உருவாகி, அரசுக் கொள்கையாகச் செயல்பட்டுப் பக்குவப்படும்போது, சமூக அறத்தின் பாற்பட்டு சர்வதேசியம் உருவாக வாய்ப்பு ஏற்படும்! அதற்கு நெடுங்காலம் தேவைப்படக் கூடும்.
அடுத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்! நாடாளுமன்ற சனநாயகத்தையே பார்த்தறியாத இரசிய மக்களிடமும், சீன மக்களிடமும் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது.
அங்கு அது எடு பட்டது. ஆனால் முதலாளிய நாடாளுமன்ற சனநாயகத்தில் வாழ்ந்து பழகிய மக்கள் ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.
அடுத்து, மிக முகாமையான இன்னொன்று, சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதி காரக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆட்சி செய்த ஒற்றைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் பெருச்சாளிகள் அதிகாரவர்க்க எதேச்சாதிகாரிகள் உருவாயினர். அவர்களை எதிர்த்து மக்கள் போராட உரிமையில்லை. போராடினால் புரட்சித் துரோகிகள், கம்யூனிஸ்ட் துரோகிகள் - மக்கள் பகைவர்கள் - அமெரிக்கக் கையாட்கள் என்று பட்டம் சூட்டிச் சிறையில் அடைப்பார்கள் அல்லது தீர்த்துக் கட்டுவார்கள்.
சீனாவில் இப்பொழுது நடப்பது - அதிகார வர்க்கத்தின் எதேச்சாதிகார ஆட்சிதான்! ஊழல் பெருச்சாளிகளின் புகலிடமாகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. உலகிலேயே உரிமை பறிக்கப்பட்ட
பாட்டாளிகளில் முதல் வரிசையில் இன்றைய சீனப்பாட்டாளிகள் விளங்குகிறார்கள்.
சோவியத் ஒன்றியத்தில் பிற்காலத்தில் வறுமை அதிகரித்து, உணவுப் பங்கீட்டு நிலையங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டது.
எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற ஒற்றை அதிகார மைய - ஒற்றைக் கட்சி ஆட்சியினால், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வெறுப்புக் கொள்ள வாய்ப்பாயிற்று! அச்சூழ்நிலையை வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த உத்தி வகுத்தன.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுவது பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை; ஆனால் அதைக் கைவிட்டதாக அவை அறிவிக்கவில்லை.
மூன்றாவதாக, சோவியத் ஒன்றியம் பல்தேசிய நாடு என்றும் அதில் உள்ள குடியரசுகள் பிரிந்து போக உரிமை உண்டு என்றும், அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. இரசிய மொழி சோவியத் ஒன்றியத்தின் ஒற்றை ஆட்சிமொழி என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
ஆனால், சோவியத் ஒன்றியத்தில் இரசிய தேசிய இனமேலாதிக்கம் செயல்பட்டது. இரசிய மொழி சோவியத் ஒன்றியம் முழுமைக்குமான ஒற்றைப் பொது மொழியாக - ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்டது. கோர்பச்சேவ் ஆட்சிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கருத்துரிமை (கிளாஸ் நாஸ்த்) வழங்கப்பட்டவுடன், அடக்கி வைத்திருந்த தேசிய இன உணர்வுகள், அடையாளங்கள் வெளிப்பட்டு, 14 நாடுகள் இரசியாவிலிருந்து பிரிந்தன. இரசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நீக்கப்பட்டது.
இன்றுவரை சீனம் - திபெத் தேசிய இனத்தையும், உய்கூர் தேசிய இனத்தையும் படைகொண்டு ஒடுக்கியே தன்னுடன் பிணைத்து வைத்துள்ளது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் வலியுறுத்தினார் என்பதெல்லாம் பிற்காலத்தில் சோவியத் ஒன்றியத்திலும் -செயல்படவில்லை. தொடக் கத்தில் இருந்தே சீனத்திலும் செயல்படவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு மேற்கண்டவை மட்டுமின்றி, பொருளியல் காரணங்களும் இருக் கின்றன. சந்தையைக் கணக்கில் எடுத்து, பொருள் விலையைத் தீர்மானித்தல், வரம்பற்ற மானியங்கள் குறித்த மறு ஆய்வு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப்
போட்டியாக மிகையான படைத்துறைச் செலவு, விண்வெளி ஆய்வுச் செலவு, நட்பு நாடுகளுக்கு நிதி உதவி போன்ற பல காரணங்கள் - படிப்பினைகளாக உள்ளன.
அந்தந்த மட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் கொடுக்காமல் மையப்படுத்தப் பட்ட அதிகாரத்தைச் சார்ந்து உற்பத்தி மற்றும் வழங்கல் நடந்தது போன்ற மற்ற காரணங்களும் படிப்பினைகளாக இருக்கின்றன.
சோவியத் ஒன்றியம், சீனம் ஆகிய நாடுகளின் சாதனைகளிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளிலிருந்தும் படிப்பினை பெற வேண்டும்.
அடுத்து மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் செய்ய வேண்டிய மறு ஆய்வுகளையும் இரசியப் புரட்சி நூறாவது ஆண்டு விழாக் காலத்தில் விவாதிப்பது பொருத்தம்!
1. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு -
காலப் பொருத்தத்திற்கு அப்பால் சென்று கொடுத்த முன் நிபந்தனையை மறு ஆய்வு செய்தல்; நிகழ்காலப் பொருத்தத்திற்கேற்ப அதன் செயல் வடிவத்தை வரையறுப்பது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான உலக சமூக மாற்றத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை இறுதி செய்துவிட்ட இறுமாப்பிலிருந்து விடுபடல்!
2. கிளை மொழி (Dialect) பொது மொழியாக (Standard
Language) வளர்ந்தது - தேசிய இன மொழியாக உருவெடுத்தது ஆகியவை சமூக வளர்ச்சியில் ஆற்றிய முற்போக்குப் பாத்திரம் குறித்த வரையறை இதுவரை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இல்லை. இனி அது பற்றி ஆய்வது.
3. அதேபோல் தேசிய இன உருவாக்கம் - தேச அமைப்பு ஆகியவை சமூக வளர்ச்சி வரலாற்றில் ஆற்றும் முற்போக்குப் பாத்திரம் குறித்து இதுவரை மார்க்சிய லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளில் சொல்லப்படவில்லை. இது பற்றி ஆய்வு செய்வது.
இன்று முதலாளிய ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும் உலக வேட்டையாடலுக்கு “உலகமயம்” என்ற கோட்பாட்டை அறிவித்துச் செயல் படுத்தி வருகின்றன.
இவ்வல்லரசுகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர் கொள்ள மிகச் சரியான படை, சொந்தத் தாயகப் பற்றுடன் போராடும் குறிப்பிட்ட தேசிய இன மக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுதல்; பல கட்சிச் செயல்முறையின் கீழும் நிகரமை நிற்கும்படியான சமூகத்தைக் கட்டமைத்தல்; அதற்கு இசைவான பண்பாட்டு
மாறுதல்களை மக்களிடையே உருவாக்குதல், அதனடிப்படையில் ஒரு புதிய மனிதனை – புதிய மனிதியை
உருவாக்குதல், அந்தப் பக்குவத்திற்குக் காத்திருத்தல்!
நிர்வாகத்தில் மேலிருந்து கீழ்வரை செங்குத்தான ஒற்றை அதிகார மையம் என்பதை மாற்றி, ஊராட்சி அளவிலிருந்து, தொழிற்சாலை அளவிலிருந்து உச்சி வரை கிடைக்கோட்டு (Horizontal) முறையில் கூட்டுத் தலைமைகளை உருவாக்குதல்!
5. பொருளியல் கோட்பாடுகளில் சந்தையையும் சந்தைப் போட்டிகளையும் உரியவாறு கணக்கில் கொள்ளுதல்.
மையப்படுத்தப்பட்ட பெருவீத உற்பத்தி முறைக்கு மாற்றாகப் பரவலாக்கப்பட்ட - சிற்றளவு உற்பத்தி முறையும், வழங்கலும் கடைபிடித்தல்.
6. சூழலியல், இயற்கை வேளாண்மை, மரபுவழி மருத்துவம் போன்றவற்றிற்கு சமூக வளர்ச்சியில் உரிய பங்களித்தல்.
7. உலகம் முழுவதற்கும் ஒரே வகையான சமூக வளர்ச்சிப் பாதைகளை முடிவு செய்யாமல் - ஒரே வகையான புரட்சி குறித்த புரிதலை ஏற்படுத்தாமல், அந்தந்த தேசியச் சமூகத்திற்கேற்ற வளர்ச்சிப் பாதை களை - சமூக மாற்ற வடிவங்களை முடிவு செய்து கொள்ளும் தற்சார்பு சமூக அறிவியலை வளர்த்தல்.
சமூகத்திற்கு முன், தத்துவத்தை நிறுத்தாமல், சமூகத்திற்கேற்ப தத்துவத்தில் கோட்பாடுகளையும் இலக்குகளையும் உருவாக்கிக் கொள்ளுதல்!
8. அறம்சார்ந்த பண்புகள், ஒழுக்கம், நுகர்வு வரம்பு, மனித நேய உறவு ஆகியவற்றைப் பெறுவதற்கான உள வியலை ஒவ்வொரு தனிமனிதரிடமும் வளர்த்தல்!
தொண்ணூற்றொன்பது ஆண்டுகளுக்கு முன் மனித குல வரலாற்று வளர்ச்சியில் மாபெரும் பாய்ச்சலை உண்டாக்கிய நவம்பர் புரட்சி நாயகர்கள் அனைவர்க்கும் நன்றியுடன் வீரவணக்கம் செலுத்துவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment