ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“ இசையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று ஒருமைப்படுத்தியவர் கர்நாடக இசைக் கலைஞர் திரு. பாலமுரளி கிருஷ்ணா ” கவிபாசுகர் இரங்கல்!

“ இசையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று ஒருமைப்படுத்தியவர் கர்நாடக இசைக் கலைஞர் திரு. பாலமுரளி கிருஷ்ணா ” தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாசுகர் இரங்கல்!

கர்நாடக இசைக் கலைஞர் திரு எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் 22.11.2016 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளித்தது. அவரது இறப்பு இசை உலகிற்கு பேரிழப்பு. அவரின் அயராத இசைப்பணி போற்றத்தக்கது; பெருமைக்குரியது.

கர்நாடக இசை உலகில் புகழ்பெற்று திகழ்ந்த இசைக்கலைஞர் எம். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் 1930-ஆம் ஆண்டு, ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் சங்கரகுப்தம் (இன்றைக்கு ஆந்திரப் பகுதி) என்ற ஊரில் பிறந்தவர். தமது 6-ஆவது வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவர் பாடாத முன்னணி இசை அரங்கங்களே உலகில் கிடையாது என்று கூறலாம்.

கர்நாடக இசையில் ஐந்து சுரங்களுக்குக் கீழ் இராகம் கிடையாது; பாடமுடியாது என்று ஒரு இசை ஒழுங்குச்சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து 4 சுரங்களிலும் பாடமுடியும் என்று “மகதி” என்றொரு புதிய இராகத்தைப் படைத்தார் பாலமுரளி கிருஷ்ணா. அந்த மகதி என்ற இராகத்தில்தான் எம்.எஸ். விசுவநாதன் அவர்கள், 1975 இல் வெளியான கே. பாலச்சந்தரின் “அபூர்வ ராகம்” படத்தில் வெளிந்த “அதிசய ராகம் அபூர்வராகம்.. அழகிய ராகம் அபூர்வ ராகம்” என்ற திரைப்பாடலை உருவாக்கினார். அந்த பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.

1982- 85 காலகட்டங்களில் சென்னை இசைக் கல்லூரியில் இசை மாணவர்கள் யாரும் திரை இசைப்பாடல் பாடக்கூடாது, கேட்கக் கூடாது என்று ஒர் அச்சம் நிலவியது. அதை முறியடித்து, இசையில் பேதம் பார்க்க கூடாது, இதுவேறு அதுவேறு என்று பிரிக்கக் கூடாது, இசையின் அமைப்பு முறைகள் வேறாக இருக்கலாம் ஆனால் இசை என்பது ஒன்றுதான், திரை இசையும் இசைதான் என்று போற்றினார். இசை ஏற்றத்தாழ்வை நீக்கியவர் பாலமுரளிகிருஷ்ணா.

பழமையான கர்நாடக இசைக் கலை மரபைச் சார்ந்தவர் என்றாலும், அதில் பேசப்படும் கதைகளிலும் பயிலப்படும் இராகங்களிலும் பழமையின் வரம்பு கடந்தவர். வாய்ப்பாட்டுக் கலையில் மட்டுமின்றி, வீணை, மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட பல இசைக்கருவிகளோடும் மேடையேறிவர் அவர். இசையில் இளமையும் இசைக் கலைகளில் இளையோரும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தொடர் கொள்கையாகவே கடைபிடித்தவர்.

இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு தனித்துவமான குரல்; கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் ஒரு புதிய உத்தியைக் கையாண்டவர். வட இந்தியாவில் கர்நாடக இசையைப் பெரும் அளவில் மதிக்கமாட்டார்கள். அப்போது மாபெரும் இசைக்கலைஞர்களாய் திகழ்ந்த பர்வின் சுல்தானா, பிந்தன் தோசி உள்ளிட்ட முன்னணி இசைக் கலைஞர்களோடு இணைந்து இசையரங்கு நடத்தி கர்நாடக இசையின் தன்மையை உயர்த்திக் காட்டினார். அந்தப் பெருமையும் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்களையே சாரும்.

தியாகராசரின் பாடல் தொகுப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்பே இசைத்தட்டில் வெளியிட்டார் (எல்.பி. ரெக்கார்டர்). வெளிநாடுகளிலிருந்து வேற்று மொழி இசைக் கலைஞர்கள் கர்நாடக இசையைக் கற்றகொள்ள வேண்டும் என்று விரும்புகிறபோது இவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வார்கள். அவர்களுக்கு கர்நாடக இசையை எப்படி கற்றுக் கொடுக்கவேண்டும், எவ்வாறு கற்பித்தால் அதன் நுணுக்கம் அவர்களைச் சென்றடையும் என்பதை அறிந்து, இசையின் பண்பு மாறாமல் கற்றுத்தரக் கூடியவர்.

இவர் திரையில் பாடிய 1964இல் வெளிவந்த “கலைக்கோவில்” திரைப்படத்தில் “தங்க ரதம் வந்தது வீதியிலே..”, 1965இல் வெளிவந்த “திருவிளையாடல்” திரைப்படத்தில் “ஒரு நாள் போதுமா..” உள்ளிட்ட பாடல்கள் இவரது தனித்தக் குரலில் மனத்தை மயக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக செவிக்கிணற்றில் தேன் ஊற்றும் 1977இல் இசைஞானி இளையராஜா இசையில் “கவிக்குயில்” படத்தில் பாடிய, “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல்தான்.

இசையின் தன்மையை, இசையின் அமைப்பை, இசையின் நுட்பத்தை இசையின் பெருமையை, ஓர் புதிய வழிகாட்டும் இசை ஆசிரியராகத் திகழ்ந்து இசையை உயர்த்திய பெருமையில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு பெரும்பங்குண்டு.

இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இயற்கை எய்தினாலும், அவரது இசை நம்மை இயக்குகிறது. அவர் காற்றின் பரப்பில் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், திரை இசை கலைஞர்களுக்கும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்னணம்,
கவிபாசுகர்
நடுவண் குழு உறுப்பினர்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

பேச: 9841604017, 7667077075
ஊடகம்: www.kannotam.com
முகநூல்: https://www.facebook.com/tha.ka.e.pe/posts/558693327663253


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.