ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்

மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களுக்கு வீரவணக்கம்!
தமிழர் மறுமலர்ச்சிப் பாவலர்களில் சமகாலத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னோடிப் பாவலராக விளங்கி, நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள பாவலர் இன்குலாப் நேற்று (01.12.2016) முற்பகல் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

சென்னை ஊரப்பாக்கம் மீனாட்சிபுரத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யாவின் உடலுக்கு, நண்பர்களும் தமிழின உணர்வாளர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இன்று (02.12.2016) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பாவலர் இன்குலாப் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். புலவர் இரத்தினவேலவர், தோழர் உதயன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் வி. கோவேந்தன், செ. அருளேந்தல் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

பின்னர் இல்லத்தின் வாயிலில், பாவலர் இன்குலாப் அவர்களின் மாணவப் பருவ நண்பரும், எழுத்தாளருமான திரு. பா. செயப்பரகாசம் தலைமையில், இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பாவலர் இன்குலாப் அவர்கள் இயற்றிய “மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..” பாடலை, பாடகர் சீர்த்தி அவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.
தோழர் பெ. மணியரசன், ஓவியர் வீரசந்தனம், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், பேராசிரியர்கள் கோச்சடை, சிவக்குமார் உள்ளிட்டோர் இரங்கலுரையாற்றி, பாவலர் இன்குலாப் அவர்களுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், பாவலர் இன்குலாப் அவர்களுக்கு இன்று (02.12.2016) மாலை வீரவணக்கக் கூட்டம் நடைபெறுகின்றது.

நேற்று (01.12.2016) மாலை, தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில், அனைத்துக் கட்சியினர் சார்பில், பாவலர் இன்குலாப் அவர்களின் படத்திற்கு மலர் தூவி, மெழுகு திரி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பேராசிரியர் வி. பாரி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, புலவர் கோ. நாகேந்திரன் (த.க.இ.பே. நடுவண் குழு), தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், வழக்கறிஞர் அ. நல்லதுரை (நாம் தமிழர் கட்சி), அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் மதிவாணன், ஏ.ஐ.டி.யூ.சி. தோழர் சேவையா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
நாளை (03.12.2016) காலை 10 மணியளவில், மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படுகிறது.
மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களுக்கு வீரவணக்கம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.