இரண்டில் ஒன்றா? இன்னொரு மாற்றா? - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இரண்டில் ஒன்றா?
இன்னொரு மாற்றா?
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவிடம் சென்று அவர் சமாதியைத் தொழுகின்றனர்; மொட்டையடித்துக் கொள்கின்றனர். அதேவேளை, அமைச்சர்கள் செயலலிதா வாழ்ந்த இல்லம் சென்று சசிகலாவின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்துகின்றனர்.
இவ்விரு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை அல்ல. ஓர் உளவியலின்
இரண்டு வடிவங்கள்!
“மக்கள் தீர்ப்பே மகேசன்
தீர்ப்பு” என்று அண்ணா சொன்னார்.
இது தவறான வரையறுப்பு அல்ல.
ஆனால் இந்த அளவுகோல் தவறாகப்
பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உண்டு.
பிறரைப் பார்த்து அவர்களைப்
போல் போலியாக நடந்து கொள்ளும்
பழக்கம் ஒரு தொற்று நோய்
(Infection
of Imitation) என்றார்
அம்பேத்கர். ஒருவர் செய்யும் நடைமுறை
அல்லது ஒருவரது பழக்கவழக்கம் பிரபலமாகிவிட்டால்,
காரணங்களை ஆராயாமல் அதைப் பின்பற்றும் பழக்கம்
ஒரு தொற்று நோய் போல்
வேகமாகப் பரவும் என்பது இதன்
பொருள்.
அதிகாரம் உள்ளவரின் அடிபணிந்து ஆதாயம் அடைவது அல்லது
தற்காத்துக் கொள்வது என்பது, காலகாலமாக
மனிதர்களில் ஒரு சாராரிடம் உள்ள
பழக்கம்தான்! மனித பலவீனங்கள்தான்! அதுவும்
அமைச்சர்களாக உள்ளவர்கள், மாவட்டங்களில் குட்டி சமீன்தார்போல் விளங்கும்
கட்சிப் பிரமுகர்கள், செயலலிதா காலில் விழுந்து வணங்குவது
- அவர் செல்லும் எலிகாப்டரைப் பார்த்து பணிந்து தொழுவது போன்ற
பழக்கங்களைப் பார்த்த மற்றவர்களில் கணிசமானோரிடம்
அந்த அண்டிப்பிழைக்கும் உளவியல் தொற்றிக் கொள்கிறது.
உடனடி ஆதாயம் பெறாத
மக்கள்கூட அடிபணிந்து தொழும் பழக்கத்தை ஒரு
“பண்பாடாகக்” கடைபிடிக்கத் தொடங்குவர். அதிகாரம் படைத்தவர், “குனிந்து செல்” என்று கட்டளை
இட்டால் அண்டிப்பிழைப்போர் மண்டியிட்டுச் செல்வார்கள்!
ஒரு கற்பனையாக எண்ணிப்
பாருங்கள், அதிகா ரத்தில் இருக்கும்
போதே இட்லர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால்,
செர்மனியில் இலட்சோபஇலட்சம் மக்கள் கண்ணீரூம் கம்பலையுமாக
அழுது புலம்பவும், அயல்நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்தவுமாக,
அவரின் இறப்பு பெருமைப் படுத்தப்பட்டிருக்கலாம்.
போரில் தோற்று, இரசியப் படையிடம்
பிடிபடாமல் தப்பிக்கப் பதுங்கியிருந்த இடத்தில் இட்லர் தற்கொலை செய்து
கொண்டதால் அது இழிச்சாவாகப் போய்விட்டது.
வரலாற்றில் ஆதிக்கவாதிகளும் அணிபணிவோரும் மட்டுமே இல்லை. அவர்களின்
“புகழ்” தற்காலிகமானது. பகத்சிங், காந்தியடிகள் போன்றவர்களின் புகழ் வரலாற்றில் நிலைத்த
புகழ்; எல்லை கடந்த புகழ்!
இவர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாற்றுக் கருத்துகள் உண்டு; ஆனால் அவற்றையும்
விஞ்சி வாழக் கூடியவர்கள் இவர்கள்!
செயலலிதா அவர்களின் சாவை எடுத்துக் கொள்
வோம். அவருடைய நோய் குறித்தும்
- மருத்துவம் குறித்தும், சாவு குறித்தும் அன்றாடம்
வதந்திகளோ செய்திகளோ வந்து கொண்டே இருக்கின்றனவே
ஏன்? செயலலிதா அவர்களின் சாவுக்கு இலட்சோப இலட்சம் மக்கள்
துயரம் வெளிப்படுத்துவதை நாம் துச்சமாகக் கருதவில்லை.
அம்மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேவேளை தமிழ்நாட்டில் மக்களின்
செல்வாக்குள்ள ஒரு பெருந்தலைவர் என்ற
முறையில் செயலலிதா அரசியல் குறித்துத் திறனாய்வு
செய்வது தேவை!
மன்னருக்கும் மக்களுக்கும் பொதுவானது நோயும் சாவும்! இதில்
மறைப்பதற்கென்ன இருக்கிறது? “பிறர் முன் செய்வதற்கு
வெட்கப்படும் அல்லது அச்சப்படும் எந்தச்
செயலையும் தனியாகவும் செய்யாதே” என்றார்
காந்தியடிகள்!
செயலலிதாவின் அரசியல் நிர்வாகம் - வீட்டு
நிர்வாகம் - வருமானம் அனைத்தும் மர்மமாகவே இருந்தது ஏன்?
“மக்களுக்காக நான், மக்களால் நான்!
என் வாழ்க்கை ஒரு தவ வாழ்க்கை”
என்ற செயலலிதாவின் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட
வாழ்க்கையும் திறந்த புத்தகமாகத்தானே இருந்திருக்க
வேண்டும்! மக்களிட மிருந்து மறைப்பதற்கான
செயல்கள் இருக்கும் போது தான் ஒரு
தலைவருக்கு மர்ம வாழ்க்கை தேவைப்படும்!
சசிகலாவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவத்துறை யினரையும் தவிர்த்து, ஆளுநராகயிருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், யாருமே நேரில் பார்க்கக்
கூடாத அப்படிப்பட்ட நோய் என்ன வந்தது
செயலலிதாவுக்கு? குணமாகி வருகிறார்; வழக்கமான
உணவு சாப்பிடுகிறார், அறிக்கைகள் கொடுக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில்
75 நாட்கள் மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாத
வகையில் அவரை அடைத்து வைத்தது
ஏன்?
செயலலிதா உடலில் முழங்காலுக்குக் கீழ்
இருகால்களும் துண்டிக்கப் பட்டிருந்தன என்கிறார்கள் சிலர்! மருத்துவம் குறித்தும்
ஏதேதோ பேசப் படுகின்றன. மக்கள்
தலைவர் ஒருவரின் நோய் - அதற்கான மருத்துவம்
ஆகியவற்றை இவ்வளவு கமுக்கமாக வைக்கப்பட
வேண்டிய தேவை இல்லை. இந்தக்
“கமுக்கம்” தான் வதந்திகளின் தாய்!
முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே நோய்வாய்ப்பட்டு, மாதக்கணக்கில் மருத்துவமனையில் இருந்தவர்கள் அண்ணாவும், எம்.ஜி.ஆரும்.
அப்போது அவர்கள் கமுக்கமாக அடைத்து
வைக்கப்படவில்லை.
தலைவர்
வழிபாடும்
தலைவர்
பகையும்
அரசியலில் தலைவர் வழிபாடு இந்தியா
முழுவதும் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்
தலைவர் வழிபாட் டிற்கு சமமான
அளவில் எதிர்முகாமின் தலைவர் மீதான பகைக்
காழ்ப்பும் இருக்கிறது.
எம்.ஜி.ஆருக்குத்
திரைப்பட வழியிலும் அரசியல் வழியிலும் ஆதரவாளர்கள்
நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களை
இயக்கும் கூடுதல் தூண்டுணர்ச்சியாக இருந்தவை
எம்.ஜி.ஆரின் இலட்சியங்களைவிட
எம்.ஜி.ஆரின் “எதிரியான”
கருணாநிதி
மீதிருந்த பகை உணர்ச்சியாகும். இந்த
வகையில் எம்.ஜி.ஆரின்
எதிர்வகை வலிமை ஆற்றலாகக் கருணாநிதி
இருந்தார். அதேபோல் கலைஞர் கருணாநிதியின்
எதிர்வகை வலிமை ஆற்றலாக எம்.ஜி.ஆர். இருந்தார்.
பின்னர் செயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்
இடையில் இதே எதிர்வகை ஆற்றல்கள்
பயன்பட்டன.
இவ்விரு கழகங்களிலும் உறுப்பினராக
இல்லாதவர்களும், இவ்விரு தலைவர்களின் அரசியலை
அப்படியே ஏற்றுக் கொள்ளாதவர்களும் செயலலிதாவின்
அல்லது கருணாநிதியின் தேர்தல் வெற்றிக்குத் துணை
நின்றனர்.
கொள்கை மற்றும் செயல்பாடுகளில்
செயலலிதா வுக்கும் கருணாநிதிக்கும் இடையே அடிப்படையான வேறுபாடுகள்
என்ன கண்டார்கள் இவர்கள்?
கருணாநிதியின் குடும்ப அரசியல் - குடும்பப்
பொருள் வேட்டை ஆகியவற்றை ஒரு
குறிப்பிட்ட எல்லையோடு நிறுத்தியவர் செயலலிதா என்று கூறுகின்றனர் செயலலிதா
ஆதரவாளர்கள்.
செயலலிதாவால் உருவாக்கப்பட்ட சசிகலாவின் குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்கம் - கருணாநிதி
குடும்ப அரசியல் ஆதிக்கத்தைவிடக் குறைவானது அன்று!
சசிகலா குடும்ப ஆதிக்கம் தமிழ்நாடெங்கும்
ஆக்டோபசாகப் படர்ந்துள்ளது. கருணாநிதி குடும்பம் அரசியலைப் பயன்படுத்தி நடத்திய பொருள் வேட்டைக்குக்
குறைந்ததல்ல செயலலிதாவும் சசிகலா குடும்பமும் நடத்தியுள்ள
பொருள் வேட்டை!
அ.இ.அ.தி.மு.க.
- தி.மு.க. தலைமைகளிடையே
பொருள் வேட்டை மற்றும் குடும்ப
ஆதிக்கம் ஆகியவற்றில் சாரத்தில் என்ன வேறுபாடு கண்டார்கள்
நடுநிலையாளர்கள்?
அடுத்து, தமிழ்நாட்டு உரிமைக் காப்பு, தமிழ்
மொழி காப்பு என்று எடுத்துக்
கொண்டால் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் இடையே என்ன வேறுபாடு?
இவ்விருவரும் என்ன சாதித்தார்கள்? செயலலிதாவும்
கருணாநிதியும் முன்வைத்த தனித்தன்மையுள்ள பொருளியல் கொள்கை என்ன?
இவர்கள் ஆட்சிக் காலத்தில்
கச்சத்தீவை இழந்தோம். தமிழர்களின் தென்கடல் சிங்களக் கடற்படை ஆக்கிரமிப்பில் உள்ளது.
மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
காவிரி, பாலாறு, தென்பெண்ணை
ஆற்றுநீர் உரிமைகளை இழந்தோம். முல்லைப் பெரியாறு அணையின் முழு உரிமைத்
தமிழ்நாட்டு வசம் இல்லை.
இந்தித் திணிப்பு, சமற்கிருதத்
திணிப்பு மேலும் மேலும் அதிகமாகி
வருகிறது. ஆங்கில வழிக் கல்வி
தமிழை அழிக்கிறது.
தமிழ்நாட்டில் அயல் இனத்தார் அன்றாடம்
வந்து குவிகின்றனர். தமிழர்களின் தாயகமாக உள்ள தமிழ்
நாட்டைக் கலப்பினத் தாயகமாக மாற்ற இந்திய
அரசு திட்டமிடுகிறது; செயல்படுகிறது. இவ்விரு கழகங்களும் இதை
எதிர்க்கவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களை வரம்பின்றிக் கூட்டி வந்து, தமிழ்நாட்டின்
சுற்றுச்சூழல், நீர்வளம் அனைத்தையும் அழிக்கக் செய்கிறார்கள்.
இவற்றிலெல்லாம் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு
இருந்தது?
போர் நிறுத்தத்திற்குக் கூட
உண்மையாக உருப்படியாக இந்திய அரசுக்கு அழுத்தம்
கொடுக்காமல் - ஒப்புக்குக் குரல் கொடுத்து ஒன்றரை
இலட்சம் ஈழத்தமிழர்களைப் பலியிட்டதில் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் என்ன வேறுபாடு இருந்தது?
கருணாநிதி அபாயத்தைத் தடுக்க செயலலிதாவை ஆதரிப்பது,
செயலலிதா அபாயத்தை தவிர்க்கக் கருணாநிதியை ஆதரிப்பது என்பதில் என்ன உண்மை வெளிவருகிறது?
இவ்வாறு சொல்பவர்களின் மூளைச்
சோம்பலும் செயலுக்கு அஞ்சும் உளவியலும்தான் வெளிப்படு
கின்றன. செயலுக்கு வருவதைவிடத் தீர்ப்பு வழங்குவது இவர்களுக்குக் சுகமாக இருக்கிறது.
ஒரு குத்து சண்டைப்
போட்டியில் பயில்வான்கள் இருவரில் ஒருவரை ஆதரிக்கும் உளவியல்தான்,
செயலலிதா - கருணாநிதி இருவரில் ஒருவரை ஆதரிக்கும் அரசியல்!
சிலர் நடுநிலைபோல் தோற்றம்
காட்டிக் கொண்டு, திட்டமிட்டு ஒரு
தரப்பு ஆதரவாளராக இருப்பர்.
இப்போட்டியில் இதுவரை செயலலிதாவை ஆதரித்து
வந்தவர்கள், இப்போது சசிகலாவை ஆதரிப்
பார்கள்.
சசிகலாவுக்குப் “பார்ப்பனரல்லாதவர்” என்ற சிறப்புத் தகுதி
கொடுக்கவும் சிலர் முன்வருகின்றனர். இதுவரைப்
பார்ப்பன வகுப்பில் பிறந்த செயலலிதாவை - “ஆமாம்
நான் பாப்பாத்திதான்” என்று சட்டப் பேரவையில்
அறிவித்துக் கொண்ட செயலலிதாவை ஆதரித்து
வந்தவர்களே இப்போது பார்ப்பனரல்லா தவர்
சசிகலா என்று கூறித் தங்களின்
சந்தர்ப்ப வாதத்திற்கு சமூகநீதிச் சாயம் பூசிக் கொள்கிறார்கள்.
பா.ச.க.வின் நடுவண் அமைச்சர்
வெங்கய்யா நாயுடு, “பா.ச.க.வுக்கும் செயலலிதாவுக்கும் இடையே சித்தாந்த ஒருமைப்பாடு
உண்டு” என்று கூறிவருகிறார். ஆர்.எஸ்.எஸ். மதியுரைஞர்களில் ஒருவரான சோ. இராமசாமி
செயலலிதாவுக்கும் மதியுரைஞராக இருந்தார். இப்போது இந்து என்.
இராம் சசிகலாவைச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் நடத்தியுள்ளார். பா.ச.க.
சித்தாந்தம் என்பது இந்துத்துவாதான்!
இந்துத்துவா என்பது ஆரிய இனவாதம்
- பார்ப்பனிய வருண சாதி முறைகள்
- வேதகால வைதீக மதவெறி என்பவற்றை
உள்ளடக்கமாகக் கொண் டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
வீரமணி அவர்கள், “யார் வர வேண்டும்
என்பதைவிட, யார் வரக் கூடாது
என்பதுதான் இப்போது முக்கியம்” என்று
அவ்வப்போது கூறுவார்.
இதன் நிலைத்த பொருள்
யாதெனின் “நிலவுகின்ற சமூக அமைப்பை மாற்றி
அமைக்க வேண்டும் என் பதைப் பிறகு
பார்த்துக் கொள்ளலாம்; நிலவுகின்ற சமூக அமைப்பிற்குள் யார்
பரவாயில்லை என்று தேர்வு செய்வதே
இன்றையத் தேவை” என்பதாகும். இது,
நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு நிரந்தரமாக
(Tailing
behind the Status quo) வால்
பிடிப்பதாகும்.
சாரத்தில் சம அளவில் தமிழ்ச்
சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் இரு
கழகங்களில் ஒன்றை ஆதரிப்பதன் மூலம்
இரண்டு தீமைகளையும் நிரந்தரமாக வாழ வைப்பதாகவே முடியும்.
குறைந்த அபாயமுள்ள தீமையைத் தேர்ந்தெடுக்கும் உத்தியின் விளைவு இதுவாகத் தானிருக்கும்.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,
அரிசி, ஆடு - மாடு, மிதிவண்டி,
மின்விசிறி, மிக்சி என எதை
எதையோ இலவசமாக மக்களுக்கு வழங்கியுள்ளார்களே,
அந்தச் செயல்கள் மக்கள் நல நோக்கங்கொண்டவை
இல்லையா என்று சிலர் கேட்கக்
கூடும். டாஸ்மாக்கை திறந்து மக்களை நாசமாக்கியவரும்
அதே தலைவிதானே! டாஸ்மாக் வருவாயின் சிறு பகுதிதான் இந்த
“இலவசங்கள்”!
நாடகத்தில் நடிப்போர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கேற்ப ஒப்பனை, நடையுடை, பாவனை
செய்வார்கள். இதன் பொருள் என்ன?
போடப்பட்டிருக்கும் வேடத்தை மக்கள் நம்ப
வேண்டுமெனில் தன் அசல் உருவத்தை
மறைத்தாக வேண்டும். அசல் நடையை மறைத்தாக
வேண்டும். அதற்காகவே ஒப்பனைகளும் மெய்ப்பாடுகளும்!
மக்கள் வழங்கிய அதிகாரத்தைச்
சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்கிற தன்னலத்தையும், தனது
ஊழல்களையும் மறைத்துக் கொள்வ தற்கான ஒப்பனைகளே,
இலவசத் திட்டங்கள்; நலத்திட்டங்கள் போன்றவை! காலனிய வேட்டைக்கு வந்த
வெள்ளையர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமலா
ஆட்சி நடத்தினார்கள்?
இந்த அரசியல் ஒப்பனைகளைப்
பாராட்டுவோர் ஆழ்ந்த சமூகப் பார்வை
கொண்டவர்களாக இருக்க முடியாது; இலட்சியவாதிகளாக
இருக்கவும் முடியாது!
தங்களுக்கு வாக்களிப்பதற்காக அ.தி.மு.க.வும் தி.மு.க.வும்
வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுத் தொகை தேர்தலுக்குத் தேர்தல்
அதிகரித்தே வருகிறது. தனது கையூட்டு ஊழலை
சகித்துக் கொள்ளும் மனநிலை மக்களுக்கு வர
வேண்டுமானால், மக்களையும் ஊழல்வாதிகளாக மாற்ற வேண்டும் என்று
இக்கழகங்களின் தலைமை செயல்படுகின்றது.
இந்தியாவிலேயே அரசியல் போலித்தனங்கள் மிகுந்த
மாநிலம் தமிழ்நாடுதான்! அருவருக்கத்தக்க தனி நபர் பகை
அரசியலின் - பழிவாங்கும் அரசியலின் தலைமைப் பீடங்கள் கருணாநிதியும்
செயலலிதாவும் தான்!
தமிழ்நாட்டிற்கு, தமிழினத்திற்கு எத்துணை பெரிய பேரிழிப்பு
ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய நெருக்கடி
ஏற்பட்டாலும் இங்கே அனைத்துக் கட்சிக்
கூட்டம் நடத்த முடியாது. சட்டப்பேரவையில்கூட
ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் அரங்கேற்றும்
தனிநபர் ஆதாய அரசியலும் பகை
அரசியலும் - தமிழர்களை அரசியல் காப்பற்ற இனமாக
- அனாதையாக்கிவிட்டது. இந்திய அரசானாலும் அண்டை
மாநிலங்களானாலும் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளைப் பறிப்பதற்குத் தயங்குவதே இல்லை!
ஆனால் இந்தத் தமிழ்நாட்டில்தான்
தலைவர்க்கும் தலைவிக்கும் தமிழினத் தலைவர் - புரட்சித் தலைவி என்று பூதந்தூக்கிப்
பட்டங்கள்!
தி.மு.க.
- அ.இ.அ.தி.மு.க. அரசியல்
தலைவர்கள் கையூட்டு ஊழலில் திளைத்து இந்திய
அரசின் குற்ற விசாரணைப் பிடிக்குள்
இருக்கிறார்கள். எனவே இவர்களால் இந்திய
அரசை எதிர்த்துச் சட்டப் போராட்டத்தையும் நடத்த
முடியாது. சனநாயகப் போராட்டத்தையும் நடத்த முடியாது. மாநில
உரிமையைப் பறிக்கும் நடுவணரசின் சரக்கு சேவை வரியை
(GST) எதிர்த்த செயலலிதா, 03.08.2016 அன்று அச்சட்டம் நாடாளுமன்றத்தில்
வாக்கெடுப்புக்கு வந்தபோது, தன் கட்சியினரை அதை
எதிர்த்து வாக்களிக்கச் சொல்லாமல் வெளிநடப்புச் செய்ய வைத்தார். அதன்மூலம்
அச்சட்டமூலத்திற்கு எளிதில் பெரும்பான்மை கிடைக்கும்
வழியை உண்டாக்கித் தந்தார். இதை நன்றியுடன் நினைவு
கூர்ந்தார் நடுவண் அமைச்சர் வெங்கய்யா
நாயுடு (8.12.2016).
செயலலிதா மறைவாலும், கருணாநிதியின் தள்ளாத முதுமையாலும் தமிழ்நாட்டு
அரசியலில் புதிய வாய்ப்புகள் தங்களுக்கு
உருவாகி வருவதாக பா.ச.க. - காங்கிரசு உள்ளிட்ட
சில கட்சிகள் கருதுகின்றன. குறிப்பாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி
பா.ச.க. காலூன்ற
முயல்கிறது. இதற்குத் தனது நடுவண் ஆட்சி
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது பா.ச.க.!
இந்த நிலையில் தேர்தல்
கட்சிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் சொந்தமாக சிந்திக்கும் இளைஞர்கள், கருத்தாளர்கள் பணி முகாமையானது!
நாம் விரும்பும் இலட்சிய
வளர்ச்சி - அதற்கான அமைப்பு வளர்ச்சி
என்பது இக்கட்டத்தில், வெகு மக்கள் சார்ந்ததாக
இருக்காது. தேர்தல் கட்சிகளைப் பின்னுக்குத்
தள்ளும் அளவிற்கு இப்போது வெகுமக்கள் அமைப்பாக
இலட்சிய இயக்கம் வளராது.
சிந்தனையாளர்கள், கருத்துருவாக்கும் வாய்ப்புப் பெற்றோர், ஞாய உணர்ச்சிப் பொங்கி
வழியும் இளைஞர்கள் இவர்களிடையே தி.மு.க.
- அ.தி.மு.க.
உள்ளிட்ட தேர்தல் கட்சிகளுக்கு மாற்றாக
சரியான கொள்கையும் செயல்திட்டமும் உருவாக வேண்டும். அவர்கள்
சிறுபான்மையினராக இருப்பது இயல்பே!
ஆனால் அவர்கள் ஒருமித்துக்
கருத்துருவாக்க முயற்சியில் ஈடுபட்டால் சமூகத்தின் அரசியல் திசைவழியை அவர்களால்
தீர்மானிக்க முடியும்!
உதிரித் தன்மையல்லாத கட்டுக்
கோப்பான மாற்றுச் சிந்தனைகளும், அவற்றை முன்னிறுத்தி சனநாயகப்
போராட்டங்களும் தொடர்ந்தால் உறுதியாக அப் போக்கு காலப்போக்கில்
கவனிக்கத்தக்க அளவில் மக்கள் ஆற்றலைப்
பெறும்!
மாற்றுச் சிந்தனை எது? தமிழ்த்தேசியம்தான்!
அதை ஒருங்கிணைந்த கருத்தியலாக வளர்த்து, தமிழ்நாட்டின் கருத்துக்களத்தில் மட்டுமின்றி, போராட்டக்களத் திலும் நிற்கும் தமிழ்த்தேசிய
அமைப்பு _ தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெரிய அமைப்பாக இல்லாவிட்டாலும்
அது தன்னைத் தமிழ் இனத்தின்
பிரதிநிதியாக வரித்துக் கொண்டு தமிழர்களின் கொள்கலனாகச்
சிந்திக்கிறது.
பகை ஆற்றல்களைச் சுருக்கி
நட்பு ஆற்றல்களைப் பெருக்கிச் சிந்திக்கிறது; தீர்வுகளை முன் வைக்கிறது. பணம்
- பதவி - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இயக்கமாக வளர்கிறது.
இலட்சியத்தில் ஒளிவு மறைவில்லை; எடுத்தேன்
கவிழ்த்தேன் வாய்வீச்சு இல்லை!
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு! இது நாளைக்கே நடந்துவிடும்
என்று கருதும் சிறுபிள்ளைத் தனமும்
இல்லை, எப்போதோ நடக்கும்போது நடக்கட்டும்
என்ற சந்தர்ப்பவாதமும் இல்லை!
இறுதி இலட்சியத்தை நோக்கிய
பயணத்தில் இன்றைய மக்கள் உரிமைகளுக்கும்
இன உரிமைகளுக்கும் போராடும்
செயல்திட்டம் கொண்டுள்ளது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தேர்தலில் போட்டியிட்டு, ஊழல்கள் புரிந்து இந்திய
அரசின்கீழ் கங்காணிப் பதவிகள் அடைந்தால்தான் சமூகத்தின்
போக்கை மாற்ற முடியுமென்று சிலர்
கருதுகிறார்கள். மக்கள் ஆற்றல் கணிசமாக
நாம் திரட்டிவிட்டால், நாம் கொடுக்கும் போராட்ட
அழுத்தத்தின் வழியாக நமக்குரிய ஞாயங்களை
ஓரளவு நாம் நிறைவேற்றிக் கொள்ள
முடியும்.
எடுத்துக்காட்டாக, காவிரி உரிமை மீட்பிற்காக
அல்லது மீனவர் உரிமைக்காக தமிழ்த்தேசியப்
பேரியக்கம் பல்லாயிரம் பேர் கொண்ட பேரணியை
சென்னையில் நடத்தும் ஆற்றல் பெற்றால் - அவ்வாறு
மக்கள் ஆதரவு ஏற்பட்டால் அதுவே
தமிழ்நாட்டு அரசியல் போக்கில் மாற்றம்
கொண்டு வரும். தில்லி அரசு
தமிழ்நாட்டின் குரலை அலட்சியப்படுத்த முடியாத
நிலையை உண்டாக்கும்.
இளைஞர்களே, கருத்தாளர்களே, தமிழ்த்தேசிய மாற்று பற்றி விவாதியுங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் உங்கள் இயக்கம்!
Leave a Comment