ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பவானியில் தடுப்பணை கட்டுவதைக் கேரளம் கைவிடாவிட்டால் கோவை - திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களிலுள்ள மலையாளிகளை கேரள அரசு அழைத்துக் கொள்ள வேண்டும்!

பவானியில் தடுப்பணை கட்டுவதைக் கேரளம் கைவிடாவிட்டால் கோவை - திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களிலுள்ள மலையாளிகளை கேரள அரசு அழைத்துக் கொள்ள வேண்டும்! குடந்தையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஏழாவதுக் கூட்டம், குடந்தையில் இன்று (29.01.2017), காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், கோ. மாரிமுத்து, க. முருகன், க. அருணபாரதி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, பொதுக்குழு தோழர்கள் திருச்சி கவித்துவன், மதுரை கதிர்நிலவன், திருச்செந்தூர் தமிழ்மணி, திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, புதுக்கோட்டை சி. ஆரோக்கியசாமி, ஈரோடு வெ. இளங்கோவன், சென்னை பழ.நல். ஆறுமுகம், சிதம்பரம் எல்லாளன் உள்பட தமிழகமெங்கிலுமிருந்து வந்த தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொடியை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஏற்றி வைத்தார். ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை நிறுத்திட வலியுறுத்தி தீக்குளித்துத் தழல் ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் (29.1.2009) இன்று என்பதால், முத்துக்குமார் படத்திற்கு அனைவரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1 :
சல்லிக்கட்டுத் தடை நீக்க தைப்புரட்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்!

மரபுவழிப்பட்ட தமிழர் பண்பாட்டு வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் விதித்தத் தடையை நீக்கும் வகையில் புதிய சட்டமியற்றிட இந்திய அரசையும் தமிழ்நாட்டு அரசையும் வலியுறுத்தி, சென்னை கடற்கரையிலும் தமிழ்நாடெங்கும் நகரங்களிலிருந்து கிராமங்கள் வரையிலும் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்து, தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து ஏழு நாட்கள் கோரிக்கை முழக்கம் எழுப்பி, அதன் வழியாக தடை நீங்கி சல்லிக்கட்டு நடத்துவதற்குரிய அவசரச்சட்டம் கிடைக்கச் செய்த, மாணவ மாணவியர் – ஆண், பெண் இளைஞர்கள் – பெரியவர்கள் அனைவரையும் தமிழின வரலாற்று நாயகர்கள் என வாழ்த்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு பாராட்டுகிறது.

காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க மறுப்பது, தமிழர் உரிமைகளுக்கு எதிரான அதன் நிரந்தர பாகுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் “காளை” நீடிக்கும் வரை, சல்லிக்கட்டு உரிமைக்கு மேலே தொங்கும் ஒரு கத்தியாகவே உணர வேண்டியுள்ளது.

ஏழாம் நாள் (23.1.2017), தமிழ்நாடு காவல்துறை வன்மத்தோடு தடியடி நடத்தி, பலரைக் காயப்படுத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசியும் சென்னை கடற்கரையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை வன்முறையைப் பயன்படுத்தியும் கலைத்ததைத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை நடுக்குப்பத்தில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களாகிய மீனவர்களின் மீன் சந்தையை பாஸ்பரஸ் தூவி, காக்கிச் சீருடையுடன் காவல்துறையினர் தீ மூட்டி எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்கள். அங்கு நின்ற மகிழுந்துகள், தானிகள் முதலியவற்றையும் காவல்துறையினர் கொளுத்தி அழித்து விட்டார்கள். கண்ணில் கண்டவர்களையெல்லாம் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

இதைப்போல் மற்ற இடங்களிலும், மீனவர்களையும் அறப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் தாக்கி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்தும் படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு, தமிழர்களின் அரசு என்ற பொறுப்பை உணர்ந்து, சட்ட நெறியைக் கடைபிடிக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதை உணர்ந்து, மேற்படி நிகழ்வுகளில் மக்கள் மீது வன்முறையை ஏவிய காவல்துறை அதிகாரிகளையும், களத்தில் வன்முறைகளை நிகழ்த்திய காவல்துறையினரையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன், முழு உண்மை அறிய, பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினரின் அத்துமீறல்களை அறிந்து நடவடிக்கை எடுக்க, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

அதேபோல், காவல்துறையினரின் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கும், இதரச் சொத்துகளை இழந்தவர்களுக்கும், படுகாயமுற்றவர்களுக்கும் உடனடியாக தமிழ்நாடு அரசு துயர் துடைப்பு உதவித்தொகை வழங்குமாறு இப்பொதுக்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தமிழர் பண்பாட்டுரிமையைப் பாதுகாக்க, அறப்போரில் பங்கு கொண்ட, இளைஞர்களைப் பழிவாங்குவதற்காக தமிழ்நாடு அரசு, காவல்துறையை ஏவி, வரைமுறையின்றி பலரைக் கைது செய்து வருகிறது. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள் – இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று சித்தரித்து, தமிழர்களின் உரிமைப் போரைக் கொச்சைப்படுத்தும் வகையில், சூழ்ச்சி நிறைந்த பரப்புரைப் போரை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. தமிழ் மக்களிடையே பீதியைக் கிளப்பி - அமைதியற்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது.

இந்திய அரசின் ஏவலுக்கு ஏற்ப மேற்கண்டவாறு, தமிழின விரோதச் செயல்களில் தமிழ்நாடு அரசு ஈடுபடக்கூடாதென்று, இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. மேற்கண்ட பழிவாங்கல் மற்றும் பீதி பரப்பல் செயல்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்தால், அதனால் தமிழ் மக்களிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. அரசு அந்நியப்பட்டுப் போகும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் - 2 :
பவானியில் தடுப்பணை கட்டுவதைக் கேரளம் கைவிடாவிட்டால் கோவை - திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களிலுள்ள மலையாளிகளை கேரள அரசு அழைத்துக் கொள்ள வேண்டும்!

பவானி ஆற்றில் தமிழ்நாட்டு எல்லைக்கு அருகே ஆறு இடங்களில், கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் வேலையைத் தொடங்கி நடத்தி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியத் தலைமையமைச்சர் திரு. நரேந்திரமோடிக்குக் கடிதம் எழுதி, தடுப்பணைத் திட்டத்தைக் கைவிட ஆணையிடுமாறு வேண்டுகோள் விட்டிருந்தும், இதுவரை இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அரசின் இப்போக்கு, காவிரி உரிமையில் சட்டத்தை மதிக்காமல், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் அட்டூழியம் புரியும் கர்நாடக அரசை ஆதரிப்பதுபோலவே, மலையாளிகளுக்கு பக்க பலமாக நரேந்திர மோடி அரசு இருக்கிறதோ என்ற ஐயத்தை எட்டுக்கோடி தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, பவானி ஆறு, தமிழ்நாட்டுக் காவிரிக்குத் தண்ணீர் வழங்கும் துணை ஆறு (Tributary) ஆகும். எனவே, தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல், பவானியில் எந்த புதிய நீர்த்தேக்கமும் தடுப்பணையும் கட்டக்கூடாது என்று காவிரித் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அதிகாரம் இந்திய அரசிடம் இருக்கிறது.

ஏற்கெனவே, பாலாற்றில் ஆந்திரம் பல தடுப்பணைகள் கட்டி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராமல் செய்து விட்டது. கடைசி சொட்டு நீரும் கசியாதவாறு வாணியம்பாடி – புல்லூர் அருகே, தடுப்பணை என்ற பெயரில், 25 அடி உயரமுள்ள நீர்த்தேக்கத்தை ஆந்திர அரசு கட்டியுள்ளது. அவ்வணை கட்டப்படாமல் தடுத்திடுமாறு தமிழ்நாடு அரசு தொடக்கத்திலேயே இந்திய அரசைக் கேட்டுக் கொண்ட போதும், இந்திய அரசு நடுநிலையோடு தலையிட்டு அதை நிறுத்தவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை செயல்படுத்தாமல் தடுத்தது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு அணையில், சிற்றணையை செப்பனிட்ட பிறகு, தமிழ்நாடு 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின்படி சிற்றணையை செப்பனிட தமிழ்நாடு அரசு, சிமெண்ட் –செங்கல் –கம்பி போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, கேரள அரசு அப்பொருட்களை ஏற்றிச் செல்ல விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதையும் இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு முறையிட்டபோதும், அது தலையிட்டு சட்டப்படி சிக்கலைத் தீர்க்கவில்லை.

ஆவணச் சான்றுகளுடன் தமிழ்நாட்டுக்குரியதாக உள்ள கச்சத்தீவை, இந்திய அரசு சிங்கள அரசுக்குக் கொடுத்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் அது குறித்து தமிழ்நாடு அரசு நடத்தி வரும் வழக்கில், “கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை” என்று இந்திய அரசு பதில் மனு (Affidavit) தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே தமிழக மீனவர்கள் அறுநூறு பேர் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இப்பொழுது, மீனவர்களின் படகுகளை நூற்றுக்கணக்கில் சிங்கள அரசுக் கடத்திக் கொண்டுபோய் விட்டது. அவற்றை இந்திய அரசு மீட்டுத் தரவில்லை. அன்றாடம் மீன்படிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை, சிங்களப் படை அடித்தும், கல்லெறிந்தும், துப்பாக்கியால் சுட்டும், மற்ற வகைகளில் அவமானப்படுத்தியும் விரட்டுகிறது அல்லது கடத்திக் கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைக்கிறது.

இதை ஒருதடவைகூட தட்டிக் கேட்டு சிங்கள அரசை, இந்திய அரசு கண்டித்தது கிடையாது. மாறாக, சிங்கள அரசுடன் காங்கிரசு ஆட்சியைப் போலவே, பா.ச.க. நடுவண் ஆட்சியும் மிக மிக நெருக்கமாகக் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களை இனப்பாகுபாட்டுடன் அணுகுவதுடன், தமிழர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற அணுமுறையைத்தன் தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் கடைபிடிக்கிறார்கள். இதனை கடந்த பல ஆண்டுகளாக எட்டுக் கோடி தமிழர்கள் தங்கள் பட்டறிவால் கண்டு கொண்டுள்ளார்கள்.

இதே போன்ற, தமிழர் விரோத அணுகுமுறையுடன் இந்திய அரசு, பவானி ஆற்றுச் சிக்கலில் கேரள அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டு மாநிலங்களுக்கிடையே வரும் சிக்கலில் இந்திய அரசமைப்புச் சட்டம், தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிமுறைகள்படி தீர்வு காண இந்திய அரசு மறுத்து வருவதால், தமிழினம் தன்னைத் தற்காத்துக் கொள்ள அறவழிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை கேரள அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடவில்லையென்றால், முதல் கட்டமாக, பவானி நீரைக் குடிநீராகவும் பாசன நீராகவும் கொண்டுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மலையாளிகளை கேரள அரசு அழைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டைக் காலி செய்துவிட்டு, கேரளத்திற்குப் போய்விட வேண்டும். இதற்காக அம்மலையாளிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதன் பின்னும் அவர்கள் தமிழ்நாட்டைக் காலி செய்யவில்லையென்றால், தமிழ் உரிமைக் காப்பு அறத்தொண்டர்கள், மலையாளிகளின் வீடுகளுக்குச் சென்று வெளியேறும் வகையில் அறவழியில் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதில் எந்த வன்முறையும் இருக்கக் கூடாது!

இவ்வாறு, மலையாளிகளை வெளியேறக் கோரும் அறவழிப் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் என்றும், அதை அமைப்பு – கட்சி சார்பற்று அனைத்துத் தமிழர்களுக்குமான தற்காப்பு அறப்போராட்டமாக நடத்துவதென்றும் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

மலையாளிகளை வெளியேற்றும் இந்த அறப்போராட்டத்தில், தமிழர்கள் பங்கு கொள்ள வேண்டுமென்று இப்பொதுக்குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 3 :
வறட்சி, உழவர் உயிரிழப்பு இழப்பீட்டுத் தொகை உடன் வழங்குக!

கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரியக் காவிரி நீரை சட்ட விரோதமாகப் பறித்துக் கொண்டதாலும், பருவமழை மிக மோசமாக – 62 விழுக்காடு அளவுக்கு குறைந்துவிட்டதாலும், தமிழ்நாடு முழுக்க கடும் வறட்சி நிலவுகிறது.

இவ்வாண்டு முழுவறட்சி தான் என்பது, கடந்த கார்த்திகை மாதமே தெரிந்துவிட்டாலும், தமிழ்நாடு அரசு கடமை தவறி, செயலற்று இருந்தது. இதனால், நம்பிக்கை இழந்த உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காய்ந்தப் பயிரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் இறந்தார்கள். அவ்வெண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டது.

வறட்சி நிவாரணமாக, இப்பொழுது மிகக் குறைவான இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்காது. காவிரி நீர் தடுக்கப்பட்டதாலும், பருவமழைப் பொய்த்துப் போனதாலும் காய்ந்து போன பயிரைப் பார்த்து உயிர் நீத்த உழவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதற்கான சிறப்பு நிதியை இந்திய அரசிடம், அரசியல் அழுத்தம் கொடுத்து பெறுமாறும் அ.இ.அ.தி.மு.க. அரசை, இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.
1. வேளாண்மை பாதிக்கப்பட்டு, உயிரிழந்த உழவர் குடும்பத்திற்குப் பாகுபாடு காட்டாமல், குடும்பத்திற்கு ரூபாய் 15 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

2. கருகிப் போன பயிர்களுக்கு நெல், வாழை, கம்பு, சோளம் ஆகியவற்றுக்கு - ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25,000, கருகிப் போன தென்னைக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 50,000, கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

3. கடந்த ஆண்டு சாகுபடி செய்து, வறட்சி காரணமாக இவ்வாண்டு சாகுபடி செய்யாமல், தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

4. வறட்சியினால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு லே ஆப் ஊதியம் (Layoff) தருவதுபோல், ஒரு குடும்பத்திற்கு ரூ. 25,000 ஈடுகட்டும் இழப்பீடு வழங்க வேண்டும்.

5. பயிர்க் காப்பீடு செய்த உழவர்கள் அனைவருக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க ஆணையிட வேண்டும்.

6. நில ஏக்கர் வரம்பு வைக்காமல், அனைத்து விவசாயிகளுக்கும், கூட்டுறவு, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வணிக வங்கிகள் ஆகியவற்றில் பெற்ற கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
7. தனியார் நிதி நிறுவனங்களும், தனிநபர்கள் அளித்த கடன்களும் ஓராண்டுக்குக் கடன் வசூல் செய்யாமல் நிறுத்தி வைக்கும் (Moratorium) அரசாணை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

இடம் : குடந்தை

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.