ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தி.மு.க.வே - இது 1965 அல்ல! உன் ஒப்பனைகள் எடுபடாது! தோழர் பெ. மணியரசன்.

தி.மு.க.வே - இது 1965 அல்ல! உன் ஒப்பனைகள் எடுபடாது! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தைப்புரட்சியாக, தமிழர் எழுச்சியாக நடந்த மாபெரும் மக்கள் வெள்ளத்தைத் திரட்ட, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியும் முன்முயற்சி எடுக்கவில்லை; முன் தயாரிப்பும் செய்யவில்லை. தமிழின இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தன்னெழுச்சியாக ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அது!

இந்தத் தன்னெழுச்சிக்கு தூண்டுகோலாக இருந்தோர் அரசியல் கட்சிகளைச் சேராத இன உணர்வுமிக்க இளைஞர்கள், மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் செயல்பட்டோர், தமிழ்த்தேசியர்கள் எனப் பலர் ஆவர்!

ஆனால், இந்த மாணவர் எழுச்சியை – இளைஞர் எழுச்சியைப் பயன்படுத்தி, அவர்களை ஈர்த்துக் கொள்ள தி.மு.க. ஒப்பனை வேலைகள் பல செய்கிறது.

இது 1965 அல்ல!

இந்தித் திணிப்பு அபாயத்தை 1963லிருந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை செய்த கட்சி தி.மு.க. தான்! 1965 மொழிப்போர் உருவாக பின்னணி ஆற்றலாக இருந்தது தி.மு.க.தான்!

ஆனால், 1965 மொழிப்போர் பெரும் தமிழ்த்தேசிய எழுச்சியாக – மாணவர்களும் மக்களும் சேர்ந்து களம் காணும் மொழிப்போராக வளர்ந்தது. காங்கிரசு ஆட்சி துப்பாக்கிச் சூடு நடத்தி, முந்நூறுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தது.

அப்போது, மாணவர் போராட்டத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அறிவித்தது தி.மு.க. தலைமை. போராட்டத்தை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தி.மு.க. தலைவர் அண்ணா வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பின்னர், இந்தியத் தலைமையமைச்சர் இலால்பகதூர் சாத்திரி உறுதிமொழியையொட்டி, ஐம்பதாம் நாள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர் மாணவர்கள்.

மாணவர் முன்னெடுத்த அம்மொழிப் போரின் பலனை முழுமையாக அறுவடை செய்து கொண்டது தி.மு.க. 1967இல் ஆட்சிக்கும் வந்தது. அப்போது, தமிழ்த்தேசிய அமைப்பு எதுவுமில்லை. சமூக வலைத்தளங்கள் இல்லை. தமிழ்மொழிக்காகக் குரல் கொடுக்க, தி.மு.க.வை விட்டால் வேறு பெரிய கட்சியும் இல்லை. அக்கழகம் பதவிக்கு வராத நிலையில், அதன் வீராவேச இன உணர்வு – மொழி உணர்வுப் பேச்சுகளை உண்மை என்று மாணவர்கள் நம்பினர்.

ஆனால், இன்று நீண்டகாலம் மாநில ஆட்சியிலும், நடுவண் ஆட்சியிலும் இருந்து வந்த தி.மு.க. ஓர் இனத்துரோகக் கட்சியென்றும், மொழித்துரோகக் கட்சியென்றும் பல்வேறு நிலைகளில் இளைஞர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

எனவே, இப்போது எழுந்துள்ள “தைப்புரட்சி” எழுச்சியை 1965 மொழிப்போரைப் போல் தி.மு.க.வால் அறுவடை செய்துகொள்ள முடியாது!

மாணவர்களைச் சந்திக்க சென்னை கடற்கரை சென்ற தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை மாணவர்கள் வெளியேற்றிய நிகழ்வே போதும், இன்றைய தி.மு.க.வின் அவலம் பற்றி புரிந்து கொள்ள! இது 1965 அல்ல!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.