ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? பெ. மணியரசன் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.02.2017) நடந்த நிகழ்வுகள், அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும், தன்னலவாத – அராஜகக் கட்சிகள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சர் தேர்வு என்பது சனநாயக முறைப்படி இல்லாமல், சசிகலா ஆள்கடத்தல் கும்பலின் அராஜகத்தின் வெற்றியாக முடிந்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறிய, முதன்மை எதிர்க்கட்சி இரகசிய வாக்கெடுப்பு கோரிய போது, அ.இ.அ.தி.மு.க. உண்மையான சனநாயக அமைப்பாக இருந்திருந்தால், இரகசிய வாக்கெடுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலையை எண்ணும் முறையில் வெற்றி பெறுவது என்ன சனநாயகம்? தலைகளைக் கடத்திப் பல நாள் பதுக்கி வைத்திருந்து, சட்டப்பேரவைக்கு மந்தையாய் ஓட்டி வந்து – தன்னை வாங்கியவர்களின் கண்காணிப்பின் கீழ் கை தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது அ.தி.மு.க. பாணி சனநாயகம்!

தி.மு.க. பாணி சனநாயகம் எப்படி இருந்தது? சட்டப்பேரவைக்குள் தகராறு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வந்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய எதிர்ப்பை சனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்கு மாறாக, நாற்காலிகளைத் தூக்கி எறிவது, குப்பைக் கூடைகளைத் தூக்கி எறிவது, பேரவைத் தலைவரைப் பிடித்து இழுத்துத் தள்ளுவது, அவருடைய நாற்காலியில் தி.மு.க. உறுப்பினர்கள் போய் குந்திக் கொள்வது என்ற அராஜகங்களை தி.மு.க. அரங்கேற்றியது!

தி.மு.க. நடத்திய இந்த கலாட்டா எந்த வகையிலும், சனநாயக வழிமுறையாக இருக்காது. ஆனால், இந்த கலாட்டாவை ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படாத சொல்லாக இதுவரை “அறம்” இருந்தது. அதையும் கொச்சைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பதவிப் போட்டியில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதில் ஒரு விழுக்காடுகூட காட்டவில்லை! அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை.

தமிழ்நாட்டு இன – மொழி – பண்பாட்டு உரிமைகளுக்கு கருத்துருவாக்கம் செய்ய, களப்போராட்டம் நடத்த முன் வந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் சரியான தமிழ்த்தேசிய மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற படிப்பினையைத்தான் தமிழர்களுக்கு, நேற்றைய சட்டப்பேரவை அராஜகங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.