ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . .  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

இந்தியப் பேராதிக்கத்தின் அரசியல் தலைமையாகக் காங்கிரசு கட்சியைக் கருதினார் அண்ணா. காங்கிரசின் அரசியல், பொருளியல், மொழிக் கொள்கைகளையும் அதன் இனக் கொள்கைகளையும் எதிர்த்து வளர்ந்த கட்சிதான் தி.மு.க. இந்தித் திணிப்பு காங்கிரசுக் கொள்கை. 1965 மொழிப்போரில் 300 பேர்க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசுடன் 1969-ஆம் ஆண்டே கூட்டணி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. 1971 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிட்டது.

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை மறைமுகமாக இந்திராகாந்தி ஆதரித்தார் என்பதன் தொடர்ச்சியாக இந்திராவின் நெருக்கடிநிலைப் பிரகடனத்தை எதிர்த்தார் கலைஞர் கருணாநிதி. 1980 சனவரியில் மக்களவைப் பொதுத்தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆருக்கும் இந்திராகாந்திக்கும் ஏற்பட்ட கசப்புணர்ச்சியை பயன்படுத்தி இந்திரா காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது.
கூட்டுத்தலைமையா? குடும்பத் தலைமையா?

அண்ணாவை விமர்சனமற்ற பெருந்தலைவராக தி.மு.க. அணிகள் ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால் அண்ணா, தி.மு.க. கூட்டுத்தலைமை கொண்டது என்று கூறி வந்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி தி.மு.க.வின் தலைமையாகத்தம் குடும்பத்தைக் கொண்டு வந்தார். செயலலிதாவின் அ.தி.மு.க.வில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லாதது போலவே இன்று தி.மு.க.விலும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஒரு வேளை அவ்வாறு யாராவது இருந்தால் அவர் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்.

சமூக நீதியா?

சமூகநீதி என்பது வர்ண-சாதி ஆதிக்கத்தை நீக்குவதுடன் சாதிப் பிளவுகளையும் சாதி ஒடுக்கு முறைகளையும் களைவதாகும். ஆனால் எந்த மண்டலத்தில் எந்த சாதி அடர்த்தியாக இருக்கிறதோ அந்த சாதியிலிருந்து மட்டுமே தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களாக, தேர்தல் வேட்பாளர்களாக வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போக்கு அ.தி.மு.க.விலும் தொடர்ந்தது. இச்செயல் தந்திரங்கள், ’நம் சாதியைப் பயன்படுத்தி நாம் அரசியல் பதவிகள் அடைந்தால் என்ன’’ என்ற ஆசையை... அடர்த்தியான சாதிகளில் உள்ள பிரமுகர்களுக்குத் தூண்டியது.

இன்றைக்கு சாதி அமைப்புகள் புத்துயிர் பெற்று, தமிழ்ச் சமூகத்தைச் சாதிப் பகை முகாம்களாகப் பிளவுபடுத்தியுள்ளன. பள்ளி மாணவரிலிருந்து கல்லூரி மாணவர் வரை நட்பு கூட சாதி பார்த்துதான் ஏற்படுகிறது. சாதிக்கலப்பு காதல் ஏற்பட்டால் கொலை செய்யப்படுகிறார்கள். இக்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இப்பொழுது மாணவர்களிடையே, இளைஞர்களிடையே ஏற்பட்டுவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்ச்சி தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு வெளியே ஏற்பட்டதாகும். இவ்வுணர்ச்சி தமிழ்த் தேசியம் சார்ந்தது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் முதல்முதலாக இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டது எப்போது? தி.மு.க.வின் டி.ஆர்.பாலு நடுவண் அரசில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது!

தமிழ்நாட்டில் இந்தியை பாடமொழியாகக் கொண்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவையெல்லாம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்கப்பட்டவை. இப்போது நடுவண் பாடத் திட்ட (CBSE) பள்ளிகள் தாராளமாக தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்றன. இவற்றில் இந்தி கட்டாயப் பாடமொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மட்டுமின்றி சமஸ்கிருதத் திணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு செயல்பாட்டில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் தமிழ் அலுவல் மொழியாக இல்லை. உயர்நீதி மன்ற மொழியாகத் தமிழைக் கொண்டுவர இந்திய அர சமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் அதற்காக விடாப்பிடியான முயற்சி எதையும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எடுக்கவில்லை.

செயலலிதா மூன்றாண்டுகளுக்கு முன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கினார். பன்னி ரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவு கொண்டு வருவது அத்திட்டம். பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை வெளியேற்றும் செயலலிதாவின் இத்திட்டத்தை தி.மு.க. எதிர்க்கவில்லை.

தொழிலாளர்கள் - உழவர்கள்

பல்வேறு விதிவிலக்குகளுடன் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு கொண்டு வந்தார் கலைஞர். வரவேற்கத்தக்கது; ஆனால் இதற்காகப் போராடி ஈகங்கள் பல செய்த கம்யூனிஸ்ட்டுகளும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும். ஆனால் 1970களில் சிம்சன், டி.ஐ. சைக்கிள்ஸ், நெய்வேலி அனல்மின் நிலையம் முதலியவற்றில் தங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகள் மீது காவல்துறையை ஏவி, கடும் தாக்குதலை நடத்தியது கலைஞர் கருணாநிதி ஆட்சி. துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் பலியானார்கள். உழவர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தில் 1971-72 - இல் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றது கலைஞர் ஆட்சி; 1978-79களில் உழவர் போராட்டத்தில் பலரை சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர். ஆட்சி.

தமிழ்நாட்டு உரிமைகள்

 தி.மு.க. ஆட்சியில்தான் 1974 இல் காவிரி உரிமை பறிக்கப்பட்டது, கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வுரிமைகளை மீட்கும் அக்கறையும் ஆற்றலும் அற்றவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். முல்லைப்பெரியாறு அணை உரிமையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் அதன்படி சிற்றணையை செப்பனிட்டு மொத்தக் கொள்ளளவான 152 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. இக்கழகங்களின் ஆட்சியில் பாலாற்றில் ஆந்திரம் பல தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தடுத்துவிட்டது. இப்போது பவானியில் கேரளம் ஆறு தடுப்பணைகள் கட்டுகிறது.

"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்று முழங்கிய தி.மு.க. கடந்த பல ஆண்டுகளாக மாநில சுயாட்சி பற்றியே பேசுவதில்லையே ஏன்?

ஊழல்

இலஞ்ச ஊழல் என்பது தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சிகளில் நிரந்தரப்படுத்தப்பட்ட நிர்வாக முறையாகவே ஆக்கப்பட்டுள்ளது. கையூட்டாகப் பெறுவது மட்டுமின்றி, அரசு திட்டச் செலவுகளில் விழுக்காட்டு அடிப்படையில் விகிதம் வாங்குதல், உற்பத்தி இடங்களிலும் வழங்கல் இடங்களிலும் பங்கு வாங்குதல் என்ற இலஞ்ச ஊழல் முறை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளின் புதிய கண்டுபிடிப்பு களாகும்.

ஈழ இனப்படுகொலை

கடந்த 2008-2009 ஆண்டுகளில் ஈழத்தில் நம் தமிழின மக்களை இந்திய அரசின் துணையுடன் இலங்கை அரசு கூட்டம் கூட்டமாக இனப்படு கொலை செய்தது. ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்தது இலங்கை அரசு. ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டது தி.மு.க.. ஈழத்தமிழர் இனப்படுகொலையால் தமிழ்நாட்டில் எழுச்சிபெற்ற இனஉணர்வை தேர்தல் ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் கடைசிநேரத்தில் போர் நிறுத்தம் கோரியும் தமிழினத்தை ஆதரித்தும் பேசினார் செயலலிதா. திராவிட இயக்கம் தமிழினக் காப்பு இயக்கம் அல்ல என்பதற்கு இதுவும் சான்று.

அண்ணா பற்றி

அண்ணா மிகக்குறைந்த காலமே முதலமைச்சராக இருந்தார். அவர் ஆடம்பரமற்ற, எளிமையான, அறிவாற்றல் மிக்க தலைவர். பொதுமக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். ஆனால் இலட்சியக் கூர்மையும் இலட்சிய உறுதியும் அற்றவர்.

சென்னை மாகாணத்தைத் "தமிழ்நாடு' என்று பெயர் மாற்றிட அண்ணா முன்மொழிந்த சட்டத் தில் தமிழில் "தமிழ்நாடு' என்றும், ஆங்கிலத்தில் "டமில் நாட்'’(Tamil Nad) என்றும் இருந்தது. டமில் நாட்’’ஆலோசனை வழங்கியர் இராஜாஜி. ம.பொ.சி தலையிட்டு Nad உடன் U சேர்க்க வைத்தார். சரியாகச் செய்திருக்க வேண்டுமெனில் ஆங்கி லத்திலும் Thamizh Nadu என்று தான் இருந்திருக்க வேண்டும். அயல் மொழிக்காரர்கள் உச்சரிக்க எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் இனமக்கள் தங்கள் தாயகத்தின் பெயரை சிதைக்க மாட்டார்கள்.

அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை சட்டத்தில் முதல் பகுதியில் (Part I) "தமிழ் அல்லது வேறொரு மொழியை மொழிப்பாடமாக ஏற்கவேண்டும்' என்று உள்ளது. இரண்டாம் பகுதியில்(Part II) "ஆங்கிலத்தை மட்டுமே மொழிப்பாடமாக எடுக்க முடியும்' என்று உள்ளது. மொழிப்பாடத்தில் இருந்து இந்தியை அண்ணா நீக்கியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழை விருப்பப்பாடமாக ஆக்கியது பிழையானது.

ஒரு தலைவரை வைத்து தாலி கட்டியோ அல்லது மாலை மாற்றிக் கொண்டோ, திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என்ற உரிமையை, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அண்ணா நிறைவேற்றினார். அது மிகவும் பாராட்டுக்குரியது.

இன அடையாளக் குழப்பம்

தமிழர்களை "திராவிடர்' என்று அழைத்தது, இன வரலாற்றியல்படி தமிழினத்தின் தனித்தன்மையை மறுப்பதாகும்.

திராவிட இயக்கம் ஆட்சி நடத்திய ஐம்ப தாண்டுகளில் அது தன்னைத்தானே அம்பலப் படுத்திக் கொண்டது. இனி தமிழின அரசியலும், தமிழ்த்தேசிய இலட்சியமும்தான் தமிழ்நாட்டிற்குத் தேவை.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9840848594
 முகநூல்: www.fb.com/tamizhdesiyam
 ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.