ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்? - சிறப்புக் கட்டுரை



தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம்
காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்?
சிறப்புக் கட்டுரை

இன்றைய (06.03.2017) தமிழ் இந்து நாளேட்டில், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய, “ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல” என்ற பத்தியைப் படிக்க நேர்ந்தது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாநகராட்சிக்கு மேயராக தமிழரான திரு. ஏழுமலை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் பாராட்டுகிறோம். அவர் தேர்வு செய்யப்பட்டதற்காகப் பெருமை கொள்கிறோம். ஆனால், இது பற்றி தமிழ் இந்துவில் கட்டுரை எழுதியுள்ள ஸ்டாலின் ராஜாங்கம் பின்வருமாறு தமிழ்த்தேசியத்தைச் சாடுகிறார்.

“சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ஒற்றைத் திசையில் தமிழ்த்தேசியவாதத்திற்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை நவீனத்தின் விதேச வாழ்வு மூலம் தலித்துகள் பெருமளவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் ஏழுமலை வருகிறார். (ம.ஜ.க. – பா.ச.க. கூட்டணியை மதிப்பிட வேண்டியது தனியானது)”.

தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முக்கியக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற குறையைத் தமிழ்த்தேசியராகிய நாங்களும் உணர்கிறோம். அக்குறையை நீக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள் வர வேண்டியது மிகமிகத் தேவை.

ஆனால், ஸ்டாலின் ராஜாங்கம் “ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை கர்நாடகத்தில் நவீனத்தின் விதேச வாழ்வு  வழங்கியிருக்கிறது” என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்த்தேசியம் ஆட்சியில் இருந்ததா? இன்றுதான் அது ஆட்சியில் இருக்கிறதா? இல்லை!

இந்தியத்தேசியம் – திராவிடத்தேசியம் இரண்டும்தான் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. அவற்றைத் திறனாய்வு செய்யாமல், ஆட்சியில் இல்லாத தமிழ்த்தேசியத்தை – அதுவும் இப்பொழுதுதான் குருத்து விட்டுக் கிளம்பும் தமிழ்த்தேசியத்தைக் குற்றம்சாட்ட மேற்படி தருணத்தை ஸ்டாலின் ராஜாங்கம் பயன்படுத்திக் கொண்டது ஏன்?

தமிழ் இனத்தின் மீது - தமிழ்த்தேசியத்தின் மீது அப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு ஏற்படக் காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களையும் உடன்பிறப்பாக – உறவு முறையாகக் கொண்டிருக்கிறது தமிழ்த்தேசியம்! தமிழினத்தில் பழங்காலத்தில் இல்லாத சாதி முறையும் – சாதி ஒடுக்குமுறையும் - தீண்டாமைக் குற்றச் செயல்களும் வளர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியம் போராடி வருகிறது. “மக்கள் அனைவரும் சமம் – தமிழர்கள் அனைவரும் சமம்” என்பதே தமிழ்த்தேசிய அறம்!

கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற சனதா தளத்தின் வேட்பாளராக திரு. ஏழுமலை அவர்கள் நின்று வெற்றி பெற்றுள்ளார். 1991 நவம்பர் - டிசம்பரில் கன்னடர்கள் நடத்திய காவிரிக் கலவரத்தில் கர்நாடகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் – ஒடுக்கப்பட்ட வகுப்புத் தமிழர்களே! அதுவும் ஷிமோகாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைக்க அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு உடன்பிறப்புகளே கணிசமானோர்.

அந்த அச்சத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடாததால்தான், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட இனவெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது, ஷிமோகாவில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் – “தாய்த்தமிழ் சங்கத்தின்” சார்பில் பேரணியாகச் சென்று, அம்மாவட்ட ஆட்சியரிடம் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். (தமிழ் இந்து, 15.09.2016). ஷிமேகாவில் தமிழர்களுக்கு – குறிப்பாக ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு கன்னடர்கள் உயர்வு தருவதுபோல், சித்திரம் தீட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். உண்மை என்ன? ஷிமோகாவில் கணிசமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு. ஏழுமலை அவர்களுக்கு அங்கு வாழும் அனைத்து சாதித் தமிழர்களும் இன உணர்ச்சி அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். இதையும் ஸ்டாலின் ராஜாங்கம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தமிழ்த்தேசியத்தின் கச்சாப்பொருளாக மாறுவதாக ஸ்டாலின் ராஜாங்கம் துயரப்படுகிறார். தீர்ப்பாயம் – உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு மறுப்பது, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் பதில் மனு போட்டிருப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

அறநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களர்களால் கடலிலே சுட்டுக்கொல்லப்பட்ட போதும் - அன்றாடம் கடத்தப்படும் போதும் இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு தடுத்து நிறுத்தாதது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

காட்சிப்படுத்தத் தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் குதிரையைச் சேர்க்காமல், காளையை மட்டும் இந்திய அரசு சேர்த்தது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

பாலாற்றிலும், பவானியிலும் சட்டவிரோதமாக அம்மாநில அரசுகள் தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுக்கும்போது, இந்திய அரசு தலையிட்டு நீதி வழங்காமல் இருப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கேரளத்திலிருந்து கர்நாடகம் செல்லும் இந்திய அரசின் (கெயில்) எரிவளிக் குழாய், கேரள மாநிலத்திலும் கர்நாடகத்திலும் சாலையோரங்களில் பதிக்கப்படும்போது, தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களில் பதிக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வரலாறு காணாத வறட்சியால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, தமிழ் உழவர்கள் நஞ்சுண்டும் மாரடைப்பு நேர்ந்தும் 250 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையிலும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு நிதி வழங்காமல் இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வார்தா புயலின் பேரழிவை, வறட்சியின் கொடுமையை நடுவண் அரசு ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டும் இன்றுவரை இந்திய அரசு நிவாரண நிதி தராமல் இருப்பது, இனப்பாகுபாடு இல்லையா? கர்நாடகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே 1,700 கோடி ரூபாய் முதல் கட்ட உதவியாக வறட்சி நிவாரணம் இந்திய அரசு அளித்துவிட்டது. கர்நாடகத்தில் இருப்பது பா.ச.க.விற்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசின் ஆட்சி என்பதும்  கவனிக்கத்தக்கது.

இன்னும் இப்படி எத்தனையோ இனப்பாகுபாடுகளை தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்த சிங்களர்களின் போருக்கு இந்திய அரசு துணை நின்றது.

தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இவ்வளவு இன்னல்களைப் பற்றியெல்லாம், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு காட்டும் இனப்பாகுபாட்டு வஞ்சகத்தைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு அக்கறை இல்லை! தமிழ்நாட்டில் அரங்கேறும் தமிழின வஞ்சகங்களுக்கு எதிராகத் தமிழின உணர்ச்சி வளர்கிறதே என்பதுதான் அவருக்கான கவலையாக இருக்கிறது. அந்தக் கவலை அவரிடம் தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை  உண்டாக்கிவிட்டது.


ஏற்கெனவே தமிழ் இந்து நடுப்பக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வன்மமாகவும், வஞ்சகமாகவும், சுற்றி வளைத்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமஸ் எழுதும் பக்கத்தில், ஸ்டாலின் ராஜாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அவருடைய காழ்ப்புணர்ச்சி விமர்சனமும் வந்திருக்கிறது என்பதையும் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

( கட்டுரையாளர் - க. அருணபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.