ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் - என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள்.

இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி மொழி; மற்ற மொழிகள் இந்தி மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய் இருக்கலாம்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியின் கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும் நடுவண் அரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன.

இந்தி மேலாதிக்கத்தைப் பரப்புவதற்கான பரிந்துரைகள், நடுவண் அரசுக்கு வழங்க நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு உள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு - தி.மு.. ஆட்சி நடந்தபோது, தமிழ் இனத்தில் பிறந்தவிட்டஎட்டப்பர். சிதம்பரம் தலைமையில் இயங்கியஅலுவல் மொழிக்கான நிலைக்குழு” (Committee of Parliament on Official Language) தனது 9ஆவது அறிக்கையை 2011இல் இந்திய அரசுக்கு அளித்தது. . சிதம்பரம் குழுவின் அந்த அறிக்கையில் கூறப்பட்டவற்றைத்தான் சட்டமாக்கியுள்ளது பா... ஆட்சி!

குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும்”.

இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்..) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும்”.

. சிதம்பரம் குழுவின் இவ்விரு பரிந்துரைகளையும் ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா... அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. . சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விரு பரிந்துரைகளும் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார்.

பிரணாப் முகர்சி கையெழுத்திட்ட அதே நாளில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடுவண் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “கூட்டு இந்தி அறிவுரைக் குழு (Joint Hindi Advisory Committee)” கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பா...வைச் சோந்த அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் பங்கேற்றுள்ளார். அக்கூட்டத்தில் பேசிய வெங்கய்யா நாயுடு, இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தங்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாய் மொழி வாயிலாக நமது உணர்வுகளைப் பிறருடன் எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். இதை இந்தியிலும் நிறைவேற்ற முடியும்என்று கூறியுள்ளார்.

மேலே உள்ளவற்றைத் தொகுத்துப் பாருங்கள்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப்பாடம்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களும் இந்தி தெரிந்தால் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவியில் உள்ளோர், நாடாளுமன்றத்திலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளிலும் இந்தியில்தான் பேச வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தங்கள் தாய் மொழியைப் போல இந்தியையும் அன்றாட உரையாடலில் பயன்படுத்த வேண்டும்.

இதன் பொருள் என்ன? நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தமிழில் பேசக் கூடாது; ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியைக் கற்றுக் கொண்டு இந்தியில்தான் பேச வேண்டும் என்பதாகும்.

ஏனெனில், தமிழ்நாட்டு உறுப்பினர்கள் இப்போது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் அல்லது வாதம் செய்தால், அதற்கான விடை நடுவண் அமைச்சர்களால், பெரும்பாலும் இந்தியில்தான் கூறப்படும். காரணம், இந்தி தெரிந்த அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச வேண்டும். மக்களவை, மாநிலங்களவைத் தலைவர்களும் பெரிதும் இந்தி தெரிந்தவர்கள்தாம்! எனவே, அவர்களும் இந்தியில்தான் அவையில் பேசுவார்கள்.

இந்நிலையில் இந்தி தெரியாமல் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே முடியாது. இருந்தால், “பேசா மடந்தைஎன்பது போல் இருக்கலாம்!

நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுக்கு இந்தி பேசத் தெரிந்தால், தமிழ்நாட்டுப் பொது நிகழ்ச்சிகளில் அவரும் இந்தியில்தான் பேச வேண்டும். எச். இராசாக்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்!

நீச பாஷையானதமிழில், “சூத்திரர்களின்தாய் மொழியான தமிழில் பேசித் தொலைக்க வேண்டிய துன்பம் அவர்களுக்கு இருக்காது!

அத்துடன் தங்களுக்குள் உரையாடிக் கொள்ளும் போதும் - அதாவது தாய் - தந்தையருடன் பிள்ளைகள் பேசும்போதும், வீட்டில், வீதியில் தங்கள் இன மக்களுடன் உரையாடும் போதும் தமிழர்கள் தமிழைத் தவிர்த்து இந்தியில் பேசிப் பழக வேண்டும். அசாம், கவுகாத்தியில் இந்திக் கூட்டு அறிவுரைக் குழுக் கூட்டத்தில், தாய்மொழியைத் தவிர்த்து இந்தியிலேயே உரையாடுங்கள் என்று அறிவுரை கூறிய வெங்கய்யா நாயுடுவின் தாய் மொழி தெலுங்கு; அந்தக் கூட்டம் நடந்த இடம் தனிநாடு கோரும் இனமக்கள் வாழும் அசாம்! அதில் கலந்து கொண்டவர் அசாமி பேசும் முதலமைச்சர்.

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேச வேண்டும் என்ற சட்டத்தில் கையொப்பமிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியின் தாய் மொழி வங்காளி. இதற்கான பரிந்துரை வழங்கிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் . சிதம்பரத்தின் தாய் மொழி தமிழ்!

இந்தி பேசாத இனங்களில் பிறந்த தலைவர்கள், “இந்தியின் அருமை பெருமை அறிந்து”, “இந்தி பேசாத மக்களின் முன்னேற்றம் கருதிஇந்தியை ஏற்குமாறு கூறினார்கள் என்று நம்ப வைப்பது உளவியல் உத்தி! இதுதான் ஆரிய மூளை!

பதவி, பணம் ஆகியவற்றிற்கு விலை போகும் இன இரண்டகர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். தமிழ் இனத்தில் - . சிதம்பரம்!

தேசிய நெடுஞ்சாலை என்று சொல்லப்படும் தமிழ்நாட்டுச் சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கி இந்தியில் மட்டுமே அண்மையில் வழிக் குறிப்புகள் எழுதினார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343 - இந்தியாவின் ஒற்றை அலுவல் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்குகிறது. (The official language of the Union shall be Hindi in Devanagari script). இடைக்கால ஏற்பாடாக, தற்காலிகமாக ஆங்கிலம் துணை அலுவல் மொழியாகத் தொடரலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

எனவே அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மோடி அரசால் இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.. ஸ்டாலின் கூறியிருப்பது சரியன்று!

இந்தியாவின் பன்மொழி மற்றும் பல தேசிய இனங்களின் இருப்பை மறுப்பதற்கு - அவற்றின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை இந்தி அடையாளத்தை - நிலைநாட்டுவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அகலமாகக் கதவு திறந்து வைத்துள்ளது. இந்தியா என்ற பெயரைக்கூட ஆரியப் புராணங்களின் அடிப்படையில், “பாரதம்என்று அழைக்கிறது அரசமைப்புச் சட்டம்!

உலகமயம் பற்றி ஓயாமல் பீற்றிவரும் மோடி அரசு, ஆரிய மயத்தை இந்தியாவில் தீவிரமாகப் பரப்புகிற உண்மையைத் தமிழர்கள் இனம் காண வேண்டும்.

தமிழ்த்தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, அடையாளம், தாயக உரிமை அனைத்தையும் அழித்து, பாரதமயம் என்ற பெயரில் ஆரியமயத்தை - பார்ப்பனிய மயத்தை நிலைநாட்டுவதுதான் காங்கிரசு, பா... கட்சிகளின் அடிப்படைக் கொள்கை! இந்தியத் தேசியத்தின் ஓடும் பிள்ளைகளாகச் செயல்படும் இடதுசாரிகள் இந்தித் திணிப்பை - ஆரியமய ஆக்கிரமிப்பை லெனின் மொழிக் கொள்கைப்படி இதுவரை எதிர்க்கவில்லை. இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

உலகமயம் - என்ற பன்னாட்டுச் சந்தை வேட்டை கோலோச்சும் இக்காலத்தில்தான் ஐரோப்பா கண்டம் உள்ளிட்ட உலகப் பரப்பில் தேசிய இன - மொழி உரிமைப் போராட்டங்கள் புதிய வடிவில் தீவிரப்பட்டுள்ளன. குர்திஸ் மக்கள் தங்கள் தாய் மொழியில் பேசத் தடை விதித்த ஈராக்கில் இப்போது தன்னாட்சி பெற்ற குர்து அரசு உருவாகியுள்ளது.

திராவிடம் பேசிக் கொண்டு, பாரதமாதா பசனை பாடிக் கொண்டு, இந்தித் திணிப்பை எதிர்ப்பது இரண்டுங்கெட்டான் செயல்! தமிழ்த்தேசிய இலட்சியத்தை முன்னிறுத்தி இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! ஆரிய ஆக்கிரமிப்பை விரட்டி அடிப்போம்! நமது ஆக்கத் திட்டத்தை முன்வைத்து, ஆகாத திட்டத்தை எதிர்ப்பதே பயன்தரும் போராட்டம்!

(கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர்).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.