ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்!

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று (22.04.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1 

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக!

இந்தியக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும், முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும், அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. 

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று, நடுவண் அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “மக்கள் தங்களுக்குள் தாய்மொழியில் உரையாடிக் கொள்வதைப் போலவே, இந்தி மொழியிலும் உரையாடிக் கொள்ள வேண்டும்” என அங்கு நடைபெற்ற “கூட்டு இந்தி அறிவுரைக் குழு”க் (Joint Advisory Committee for Hindi), கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே என்பதும் தெரிய வந்துள்ளது. அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இப்பரிந்துரைகள் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், வரும் மே 8 அன்று, சென்னை தியாகராயர் நகரிலுள்ள இந்திப் பிரச்சார சபை முன்பு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட இந்தித் திணிப்பு ஆணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென வேண்டுகிறோம்.

கோரிக்கைகள்

1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி தேவைப்படாத நிலையில், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.

தமிழை கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்

தீர்மானம் : 2

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏழு நாட்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம்!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து – நிலுவையில் வைத்துள்ள, ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு காவிரியைத் தடுத்து அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மார்ச்சு 28 முதல் ஏப்ரல் 15 வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக நடத்திய தொடர் அறப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மே 15 முதல் ஒரு வார கால தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதற்காக விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 3

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை, இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளைக் காரணம் காட்டி, கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1,225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதற்கெதிராக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ்நாட்டின் மருத்துவ மேற்படிப்பில் நடப்பிலுள்ள 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு, இந்திய அரசின் ஒப்புதலைப் பெற அரசியல் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு தேவையில்லை என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு வழங்க வேண்டும்.

தீர்மானம் : 4

கீழடி ஆய்வாளர் அமர்நாத் குழுவினரை அசாமிற்கு இடமாற்றம் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மிகத் தாமதமாக இந்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில், திடீரென்று இந்தியத் தொல்லியல் துறையால் அமர்நாத் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடுவண் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார் அமர்நாத். தீர்ப்பாயமும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடியிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரி இந்தியத் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் 21.04.2017 அன்று, இந்தியப் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நடுவண் தொல்லியல்துறை, சென்னைக்கு பணியிட மாறுதல் கோரியிருந்த அவரது வேண்டுகோளையும் நிராகரித்து அமர்நாத் இராமகிருஷ்ணாவை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பணியிட மாறுதல் செய்ததை உறுதி செய்து கடிதம் வழங்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வுக்குத் தடை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது!
இந்திய அரசு, உடனடியாக திரு. அமர்நாத் அவர்களின் பணியிடமாற்றத்தைத் திரும்பப் பெற்று, அவரையும் அவரது குழுவினரையும் தொடர்ந்து கீழடியிலேயே ஆய்வு செய்ய ஆணையிட வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.