ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிககள் ஆவர்! பெ. மணியரசன் அறிக்கை!

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிகள் ஆவர்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இரசினிகாந்த் வழக்கம்போல் “அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்று கூறி தம் இரசிகர்களுக்குக் குச்சிமிட்டாய் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அவரின் இரசிகர்கள், இரசினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பெருங்குரல் எழுப்புகிறார்கள். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ச.க.வின் தமிழிசை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாரின் ஆகியோரும் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடவோ அல்லது தனிக்கட்சித் தொடங்கவோ இரசினிகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்; என்னென்ன தகுதிகள் இல்லை என்பதை நான் சொல்கிறேன்.

முதல் தகுதியின்மை அவர் கன்னடக்காரர் என்பது. இரண்டாவது, தகுதியின்மை தனக்கு வாழ்வளித்த தமிழர்களுக்கு நன்றி விசுவாசத்துடன் அவர் நடந்து கொள்ளாதவர் என்பது!

காவிரிச்சிக்கலை சாக்காக வைத்துக் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது, தமிழர்களைத் தாக்கியபோது, தமிழர் வீடுகளை, வணிக நிறுவனங்களை எரித்த போது, சூறையாடிய போது, தமிழ்த்திரைப்படங்கள் ஓடாமல் தடுத்தபோது, நடுநிலையில் நின்று, அந்த அட்டூழியங்களை – வெறியாட்டங்களை இரசினிகாந்த் கண்டிக்கவில்லை.

காவிரி உரிமைக்காக இயக்குநர் பாரதிராசா தலைமையில் தமிழ்த்திரைக் கலைஞர்கள் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அதைச் சீர்குலைக்க சதி செய்தவர்.

அண்மையில் அநீதியாக கன்னடர்கள் தமிழர் சத்தியராசு நடித்த “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் திரையிடத் தடை விதித்தார்கள். ஒன்பதாண்டுகளுக்கு முன் காவிரிச் சிக்கலில் கன்னடர் செய்த அட்டூழியங்களை சத்தியராசு கண்டித்தார் என்பதற்காக – இப்பொழுது தடை விதித்தார்கள். தமிழர் சத்தியராசு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபின்தான், “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் அனுமதித்தனர். அச்சிக்கலில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வு காண இரசினி முன்வராமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்டார்.

காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கி அட்டூழியம் புரியும்போது, அதைத் கண்டித்ததில்லை. சட்டப்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி உரிமையைத் தடுக்காதீர்கள் என்று இரசினிகாந்த் தம் கன்னட உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விட்டதுமில்லை.

இரசினிகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், காவிரி உரிமையைத் தமிழர்கள் நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்! தமிழ்நாடு கர்நாடகத்தின் காலனியாக மாற்றப்படும்!

இரசினிகாந்த் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அவர் கன்னடநாட்டைச் சேர்ந்தவர். கன்னட இனப்பற்றுடன் தமிழ்நாட்டில் வாழ்பவர்! தமிழர் உரிமைகளுக்குத் துரோகம் செய்பவர்.

இரசினிகாந்தைத் தமிழ்நாட்டில் “அரசியல் வணிகம்” செய்ய அழைப்பவர்களும், அவரின் அரசியல் நுழைவை ஆதரிப்பவர்களும் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களே!

தமிழின இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் எச்சரிக்கையாக விழிப்புடன் செயல்பட்டு இரசினிகாந்த் என்ற நச்சுக்கொடி தமிழ்நாட்டு அரசியலில் படராமல் தடுக்க வேண்டும்!


இன்னணம், 
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.