ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

விளைநிலங்களில் புதிதாக 110 ஓ.என்.ஜி.சி. கிணறுகள்: மண்ணுரிமை காக்க மற்றுமொரு சுதந்திரப்போராட்டம் தேவை! பெ. மணியரசன் அறிக்கை!

விளைநிலங்களில் புதிதாக 110 ஓ.என்.ஜி.சி. கிணறுகள்: மண்ணுரிமை காக்க மற்றுமொரு சுதந்திரப்போராட்டம் தேவை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
நாகை மாவட்டம் – மாதானம் தொடங்கி, இராமநாதபுரம் - பெரியப்பட்டணம் வரை, இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.), மேலும் புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் (ஒவ்வொன்றும் 3,000 மீட்டரிலிருந்து 4,000 மீட்டர் வரை ஆழம்) தோண்டி, அவற்றிலிருந்து பெட்ரோலியம், ஷேல் மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் பொருட்களை எடுக்க நடுவண் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் கோரி, ஓ.என்.ஜி.சி. 14.05.2017 அன்று அனுப்பிய கடிதம் இப்பொழுது வெளியாகியுள்ளது. 

சீர்காழி அருகே மாதானத்தில் எண்ணெய் மற்றும் ஷேல் மீத்தேன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றின் மாபெரும் சேமிப்புக் கிடங்கை 290 கோடி ரூபாய் செலவில் நிறுவ உள்ளதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. அதாவது, மாதானத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப் போகிறார்கள் என்று தெரிகிறது. 

இந்த 110 ஆழ்குழாய்க் கிணறுகளுக்காக எடுக்கப்படும் மொத்த நிலங்களில் 97.07% விழுக்காடு நிலம் - சாகுபடி நிலங்களாகவும் (20.09%), தண்ணீரின்றி தரிசாகக் கிடக்கும் சாகுபடி நிலங்களாகவும் (21.32%), ஏரிகள் - குளங்கள் - வாய்க்கால்களாகவும் (15.72%), தோப்புகள் மற்றும் தோட்டங்களாகவும் (16.32%), கட்டடங்களாகவும்(4.31%), புறம்போக்கு நிலங்களாகவும் (19.31%) இருக்கின்றன என்று ஓ.என்.ஜி.சி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. 

காலங்காலமாக மக்கள் சாகுபடி செய்து வந்த வேளாண் நிலங்களும், வீடுகளும், நீர்நிலைகளும் உள்ள இடங்களில்தான் அவற்றை அழித்து, பெட்ரோலியம், ஷேல் மீத்தேன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி. எடுக்கப்போகிறது. 

தமிழ்நாட்டின் காவிரிப்படுகை உள்ளிட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரிப்படுகை மீத்தேன் உள்ளிட்ட அனைத்து ஐட்ரோகார்பன் வளங்களையும் எடுக்க இந்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள “ஐட்ரோகார்பன் விஷன் – 2025” திட்டத்தை முன்வைத்து, தங்கள் திட்டத்தை விளக்கும் ஓ.என்.ஜி.சி.யின் திட்ட அறிக்கை, தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் எடுக்கப் போவதாக சொல்லாமல் சொல்கின்றது. 

மீத்தேன் எடுக்கப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம், மேற்படி அறிக்கையில் பிரிவு 2இன் (e) பகுதியில், ஆழ்குழாய்க் கிணறுகளிலிருந்து வெளிவரும் பொருள்களில் பாறை(ஷேல்) இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, பாறைகள் வரை தோண்டப்போகும் ஓ.என்.ஜி.சி. அதிலிருக்கும் ஷேல் எண்ணெய்யையும் ஷேல் மீத்தேனையும் பிரித்தெடுக்க வாய்ப்புண்டு. 

ஏற்கெனவே கடந்த காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி, 2013இல் தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. அதை உறுதிப்படுத்தி பா.ச.க. அரசின் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2015இல் நாடாளுமன்ற மக்களவையில் அறிக்கை தந்தார். 2016ஆம் ஆண்டு, பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு அளித்த ஓ.என்.ஜி.சி. தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்கும் திட்டம் தனக்குள்ளது என்று கூறியுள்ளது. 

இந்திய அரசின் பெட்ரோலியத் துறையின் கீழ் செயல்படும் ஐட்ரோகார்பன் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், நிலங்களைப் பாழாக்கும் நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) முறைப்படியே தமிழ்நாட்டின் காவிரிப்படுகையின் 9 பிளாக்குளில் 2030ஆம் ஆண்டு வரை ஷேல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும் என்று தெரிவிக்கிறது. 

இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாக தோண்டவுள்ள 110 ஆழ்குழாய் கிணறுகளின் பின்னணி புரியும். 

மீத்தேன் எடுக்க அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசு ஏற்கெனவெ ஓர் அரசாணை பிறப்பித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவளி ஏற்கெனவே எடுத்து வரும் இடங்களில், சீர்காழி, திருநகரி, நரிமணம், கோவில்களப்பால், வெள்ளக்குடி, கமலாபுரம், அடியக்கமங்கலம், கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரிப்படுகையின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் பாழ்பட்டு, நிலத்தின் மேல் மண் வேளாண்மைக்குத் தகுதியற்றதாக மாறி, சாகுபடியுமின்றி சொந்த கிராமக் குடிநீருமின்றி அந்த மக்கள் துன்புறுகிறார்கள். பலருக்குப் பல வகையான நோய்களும் விபத்துகளும் வந்துள்ளன. 

இந்த அனுபவத்தில்தான், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவளி ஆகியவற்றை மக்கள் வாழும் பகுதிகளில் எடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்க்கிறார்கள். பொது மக்கள் மட்டுமின்றி, அறிவியல் அறிஞர்களும் இந்த பாதிப்புகள் ஏற்படும் என்று தெளிவுபடக் கூறுகிறார்கள். 

இந்த நிலையில், பெட்ரோலியம் - எரிவளி ஆகியவற்றை விளை நிலங்களிலும், மற்ற நிலங்களிலும் எடுப்பதை முற்றாகக் கைவிட வேண்டும். அந்த ஆழ்குழாய்க் கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அங்கங்கே மக்கள் போராடி வருகிறார்கள். 

நீண்டநாட்ளாக நெடுவாசலில் மக்கள் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அண்மையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் இறக்குவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். சீர்காழிப் பகுதியில் மீனவர்கள் போராடிக் கொண்டுள்ளார்கள். அரசியல் சார்பற்ற இயக்கங்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இப்போராட்டங்களில் முன்னிற்கிறார்கள். 

இந்த நிலையில், புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் தமிழ்நாட்டில் இறக்குவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது! ஆனால், இன்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்களைச் சந்தித்து, 110 கிணறுகள் இறக்குவதற்கு முழுப் பாதுகாப்பு வேண்டுமென்றும், அதை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட வேண்டுமென்றும் கோரியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதியில்லாமல், இதுபற்றி ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுடன் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பேசியிருக்க மாட்டார். 

கதிராமங்கலத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு, முற்றுகை ஆக்கிரமிப்பு நடத்தி ஓ.என்.ஜி.சி. குழாய் இறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்த போதே, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாங்கள் எச்சரித்தோம். கதிராமங்கலத்தில் நடத்தும் காவல்துறை முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது, மற்ற இடங்களில் ஓ.என்.ஜி.சி.யும் தமிழ்நாடு அரசும் செயல்படுத்துவதற்கான வெள்ளோட்டமாகும் என்று கூறினோம். அந்தக் கூற்றை உறுதி செய்யும் வகையில்தான் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறைத் தலைவரை சந்தித்து அடக்குமுறைப் பாதுகாப்பு கோரியுள்ளார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, அண்மைக்கால வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் அன்றிருந்த ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்காக நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் காவல்துறையினரின் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, உழவர்களைத் தாக்கியது. பலரை சுட்டுக் கொன்றது. அதன் விளைவாக, அந்த ஆட்சி மக்களால் அகற்றப்பட்டது! தமிழ்நாட்டிலும் நந்திகிராம், சிங்கூர் அரச வன்முறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அரங்கேற்றக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். 

வெள்ளைக்காரக் கிழக்கிந்தியக் கம்பெனி இராபர்ட் கிளைவ்வின் பீரங்கிப் படையை வைத்து அன்று, மண்ணின் மக்களின் நிலங்களைக் கைப்பற்றி வெள்ளைக்கார கம்பெனிகளுக்கு இடம் பிடித்தார்கள். அதேபோல் இன்று மோடி அரசு காவல்துறையின் துப்பாக்கியை முதன்மைப்படுத்தி, உழவர்களின் நிலங்களையும் கிராமங்களையும் கைப்பற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்க முனைகிறது. 

தமிழ்நாட்டு மக்களுக்கு மற்றுமொரு விடுதலைப் போராட்டம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மண்ணைக் காக்க வாழ்வுரிமையைத் தக்க வைக்க மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்பட்டால், அதில் பங்கேற்க உழவர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தமிழ் மக்களும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அனைத்து இயக்கங்களும் ஒன்று திரள வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.