ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம். கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம்.  தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
“நான் தேர்ந்தெடுக்கப்பட்டது பிட்ஸ்பர்க் மக்களின் சார்பாக செயல்படுவதற்கே அன்றி, பாரீசை பிரதிநிதித்துவப்படுத்த அல்ல!” என்ற ஆரவார முழக்கங்களோடு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பாரீசு பருவநிலை ஒப்பந்தத் திலிருந்து அமெரிக்கா விலகுவதை கடந்த சூன் 1 (2017) அன்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

புவி வெப்பமாதலை தடுப்பதற்காக உலகின் 190 நாடுகள் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் பேசி, கடந்த திசம்பர் 2015இல் ஏற்படுத்திய “பாரீசு பருவநிலை ஒப்பந்தம்” பல குறைபாடுகள் உடையதுதான் என்றாலும், புவி வெப்பமாதலை தடுப்பதற்கான முயற்சிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கமாகும்.

தொழில் வளர்ச்சி, இரசாயன வேளாண்மை, போக்குவரத்து, மிகை நுகர்வு வாழ்முறை ஆகியவை அதிக அளவு கரியமில வளியையும் மீத்தேனையும் வெளியிட்டு, புவியில் உருவாகும் வெப்பம் வெளியில் செல்லவிடாமல் தடுத்து, புவிவெப்பமாதலைத் தீவிரப்படுத்துகின்றது. இதனால், தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த அறிவியல் உண்மையை தொழில் குழுமங்களும், அவற்றின் சார்பான அரசியல் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதற்கே பத்தாண்டுகளுக்கு மேல் சென்றது.

இதுகுறித்து சப்பானின் கியோட்டோவில் தொடங்கி பலவகை உடன்பாடுகளுக்கு முயன்ற போதிலும், தொழில் வளர்ச்சியில் முன் வரிசையில் உள்ள நாடுகள்தான், புவியை சூடேற்றும் இந்த வாயுக்களை வெளியிடாமல் தடுப்பதிலும் முதன்மைப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற ஞாயத்தை தொடக்கத்திலிருந்தே அமெரிக்க வல்லரசு ஏற்க மறுத்து வந்தது.

அசைக்க முடியாத அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை முன்வைத்து, சூழலியல் அறிவாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே பாரீசு பருவநிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் வரலாற்று வளர்ச்சியை, இதிலுள்ள வல்லாதிக்க அரசியலை தொடர்ந்து நாம் விளக்கி வருகிறோம்.

ஒவ்வொரு நாடும் தாங்களே முன்வந்து மேற்சொன்ன புவி சூடேற்றும் வாயுக்களின் அளவை குறைத்துக் கொள்ள திட்டங்கள் வழங்கி, அவையே பொது ஒப்பந்தமாக பாரீசில் ஏற்கப்பட்டது. ஆயினும், நாடுகள் ஒத்துக் கொண்ட அடிப்படையில் இந்த வாயுக்கள் உமிழ்வதை கட்டுப்படுத்தியிருக்கிறார்களா என்பதை கண்காணிக்கவும் திறனாய்வு செய்து திருத்தவும் ஐ.நா. பருவநிலை ஒப்பந்தக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதுதான் இதில் குறிப்பிடத் தகுந்த வெற்றி!

இதனடிப்படையில் அமெரிக்க அரசு கடந்த 2005ஆம் ஆண்டு நிலையை ஒப்பிட, கரி உமிழ்தலை 2025ஆம் ஆண்டுக்குள் 28 விழுக்காடு வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. இது காற்றை மாசுபடுத்து வதில் முதன்மைப் பங்கு வகிக்கும் அமெரிக்க நாட்டிற்கு மிகக் குறைவான அளவாக இருந்தபோதிலும்,
இதுவொரு தொடக்கம் என்ற வகையில் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

இதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்டு பிற உறுப்பு நாடுகள் அனைத்தும் தாங்கள் எந்த அளவுக்கு கரி உமிழ்தலை கட்டுப்படுத்துவோம் என்ற அளவை அறிவித்து, அதற்கான செயல் திட்டங்களையும் வெளியிட்டன.

ஒபாமா ஆட்சி அளித்த அந்த குறைந்தபட்ச உறுதிமொழியிலிருந்தும் ஒட்டு மொத்தமாகப் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக டிரம்ப் அறிவித்திருப்பதுதான் மிகவும் ஆபத்தான அறிவிப்பாகும்!
“முதலில் அமெரிக்கா” என்ற தனது முழக்கத்தின் அடிப்படையில்தான் இதை அறிவிப்பதாக டிரம்ப் கூறிக் கொண்டார். அதாவது பாரீசு ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால், அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும், அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால்தான் இவ்வாறு அறிவிப்பதாக டிரம்ப் கூறுகிறார்.

ஆனால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் டிரம்ப்பின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை.

எந்த பிட்ஸ்பர்க் மக்களின் நலன்களுக்காக பேசுவதாக டிரம்ப் கூக்குரலிட்டாரோ, அதே பிட்ஸ்பர்க்கின் மேயர் அடுத்தவாரமே இதற்கு எதிரான விரிவான அறிக்கை வெளியிட்டார்.

நியூயார்க் டைம்ஸ் இதழின் நடுப்பக்கத்தில் பிட்ஸ்பர்க் மாநகர மேயர் வில்லியம் பெடுட்டூ (William Peduto), பாரீசு பெரு மாநகர மேயர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) ஆகியோர் அளித்த விரிவான கூட்டறிக்கையில், கீழ் வருமாறு தெரிவித்தார்கள்.

“சென்ற வாரம் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் எங்கள் இரு மாநகரங்களையும் எதிர் எதிராக நிறுத்தி, பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதை அறிவித்தார். ஆனால், பிட்ஸ்பர்க் மற்றும் பாரீசு மாநகரத்தின் மேயர்களாகிய நாங்கள் இருவரும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் முன் எப்போதையும்விட ஒன்றுபட்டு நிற்பதை இதன் மூலம் உலகிற்கு அறிவிக்கிறோம்” என்றார்கள்.

பென்சில்வேனியா மாகாணத்தின் தொழில் நகரமான பிட்ஸ்பர்க் - ஒரு காலத்தில், நிலக்கரி சுரங்கங்களாலும் இரும்பு உருக்காலைகளாலும் சூழப்பட்ட சுறுசுறுப்பான நகரமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க வல்லரசின் தேவைகளை கணிசமான அளவிற்கு நிறைவேற்றிய நகரம் பிட்ஸ்பர்க்.

இதனால் 1940களிலேயே எந்நேரமும் கரிப்புகையால் சூழப்பட்ட நகரமாக விளங்கிய பிட்ஸ்பர்க்கின் தெருக்களில், பகலிலேயே தெரு விளக்கு எரிய வேண்டிய நிலை இருந்தது என்பதை மேயர் பெடுட்டூ சோகத்தோடு நினைவுபடுத்துகிறார்.

இன்று உலகமய சுரண்டல் வேட்டைக்குப் பிறகு சீனாவின் இரும்புத் தயாரிப்புகள் போட்டியில் வென்று தங்களை நிலைநாட்டியபிறகு, பிட்ஸ்பர்க் உருக்காலைகளும் நிலக்கரிச் சுரங்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. அது ஒரு வகையில் அந்த மண்ணைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.

மின்சாரத்தில் இயங்கும் ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாகனங்கள் தயாரிப்பை நோக்கியும், கூகுள், ஆப்பிள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஈர்ப்பு மையமாக மாறியும் புதிய வளர்ச்சிப் பாதையில் பீட்ஸ்பர்க் நடைபோட்டது.

தொடக்கத்தில் சுரங்க வேலை வாய்ப்புகளில் இழப்பு ஏற்பட்டாலும், புதிய தொழில்களின் வழியாக ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டன.

“கடந்த சில பத்தாண்டுகளாக கடந்த காலத்தைப் பற்றிய மிகை உணர்விலிருந்து மீண்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நம்பிக்கைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களது எதிர்காலத்தையும் இந்தப் பாதையிலேயே உருவாக்கிக் கொள்வோம். பிட்ஸ்பர்க் மேயர் என்ற அடிப்படையில் அமெரிக்க மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் நான் ஒன்றை உறுதியாக அறிவிக்கிறேன். பாரீசு பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் வழிகாட்டலில் எங்கள் பொருளியலையும் எதிர்காலத்தையும் நிலைநிறுத்துவோம் என்று உறுதி கூறுகிறேன்” என்று பிட்ஸ்பர்க் மேயர் வில்லியம் பெடுட்டூ உறுதிபட அறிவித்தார்.

இவர் மட்டுமல்ல, அமெரிக்க நாட்டின் பெரும்பாலான மாகாண அரசுகளும் ஏறத்தாழ 250 மாநகர மேயர்களும் டிரம்ப்பின் அறிவிப்பை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

புவிவெப்பமாதல் பற்றி அறியாமையாலோ அல்லது அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற முனைப்பினாலோ டிரம்ப் இவ்வாறு அறிவித்ததாக நம்ப முடியாது.

டிரம்ப் தொடர்ச்சியாக புவிவெப்பமாதல் சிக்கல் குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு, தங்களது சுரண்டல் வாய்ப்புக்கு துணை செய்யும் என்று நம்பிய எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் சுரங்க முதலாளிகள் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் டிரம்ப்புக்கு வாரி வழங்கினார்கள்.

செவ்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் டிரம்ப்பின் தேர்தல் செலவுக்கு இருபது இலட்சம் டாலர்கள் (ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய்)
வழங்கின. அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் வெற்றி விழா கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்த செவ்ரான் 5.25 இலட்சம் டாலர் தொகையும், பிரிட்டீஷ் பெட்ரோலியம் 5 இலட்சம் டாலரும், முரே எனர்ஜி என்ற நிலக்கரி நிறுவனம் 3 இலட்சம் டாலரும், கான்ட்டினென்டல் ஷேல் கேஸ் நிறுவனம் 1 இலட்சம் டாலரும் என பெரும் தொழில் குழுமங்கள் ஒரு கோடியே ஏழு இலட்சம் டாலர்கள் நிதி வழங்கின. இவை அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தாலேயே அறிவிக்கப்பட்ட செய்திகளாகும்!

அது மட்டுமின்றி, டிரம்ப் ஆட்சியில் முதன்மை நிர்வாகிகள் ஏழு பேர் எண்ணெய் மற்றும் நிலக்கரி நிறுவனங்களில் மொத்தம் 1 கோடியே 23 இலட்சம் டாலர் முதலீடு செய்திருப்பதாக அந்நாட்டு ஏடுகள் தெரிவிக்கின்றன.

2040க்குள் அறுபது இலட்சம் அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள் என்ற டிரம்ப்பின் கூற்று, மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என அந்நாட்டுத் தொழிலதிபர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வேகமாக வளர்ந்துவரும் காற்றாலை மற்றும் கதிரவன் ஒளி மின்சார நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமின்றி, தொடரும் புவி வெப்பமாதலால் இன்னும் சில ஆண்டுகளில் புவியின் வெப்பம் 1880ஆம் ஆண்டை ஒப்பிட 1 டிகிரி செல்சியஸ் உயரும் ஆபத்து இருக்கிறது. இதனால் துருவப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர் பெருகி, கடல் மட்டம் ஏழு அடிக்கு மேல் உயரும் ஆபத்து இருக்கிறது.

இவ்வாறு கடல் மட்டம் உயர்ந்தால், உலகில் பல தீவுகள் காணாமல் போகும். கடல் அரிப்பின் காரணமாக பல கோடி மக்கள் தங்கள் தாயகத்தையும் வாழ்வுரிமையையும் இழப்பார்கள்.

இது அமெரிக்க நாட்டையும் கடுமையாக பாதிக்கும். கடல் மட்டம் உயர்வதால் ஏறத்தாழ 35 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும். கொசு, ஈ போன்ற நோய்க்கிருமி தாங்கிகள் பெருகி அதனால் காலரா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பெருக்கமும் அதற்கான காப்பீட்டுச் செலவும் அதிகரிக்கும்.

அமெரிக்கா தொடர்ந்து கரியமில வளி, மீத்தேன் ஆகியவற்றை இதே அளவு வேகத்தில் வெளியிட்டால், அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் அமெரிக்காவோடு நிற்பதில்லை. புவிக்கோளம் முழுவதுமுள்ள அனைத்து மக்களையும் உயிரினங்களையும் பாதிக்கும்.

எனவே, டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களுக்கும், பன்னாட்டு மக்களுக்கும் மீள முடியாத பாதிப்பை உருவாக்கக் கூடிய மனிதகுலப் பகை அறிவிப்பாகும்!

ஆயினும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பை அந்நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் ஏற்காமல் தாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் தொடர்வதாக அறிவித்திருப்பது, ஆறுதல் அளிக்கக்கூடியது!

அதேபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா, இந்தியா உள்ளிட்ட பாரீசு ஒப்பந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்கா விலகினாலும் தங்கள் நாடுகள் பாரீசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக மீண்டும் உறுதியளித்திருக்கின்றன. 

ஆயினும், மக்கள் இயக்கங்கள், சூழலியலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து விழிப்புடன் இருந்து கண்காணித்து அழுத்தம் தருவதன் மூலமாகத்தான் பாரீசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டதை நாடுகள் நிறைவேற்றுவதை உறுதி செய்ய முடியும். பாரீசு ஒப்பந்தத்தை மேம்படுத்தி, புவியைக் காப்பதற்கும் அந்த விழிப்புணர்வு அடிப்படையானது!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.