ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் - மு.வேதரத்தினம், பட்டுக்கோட்டை.

இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் - மு.வேதரத்தினம், பட்டுக்கோட்டை.
தேசிய இனங்களுக்குத் தன்னாட்சி உரிமை, மக்களுக்கு சனநாயக உரிமை, அரசியலில் நேர்மை - தூய்மை ஆகிய கோட்பாடுகளை வாழ்நாள் முழுதும் வலியுறுத்துவதாக - தன்னளவில் நேர்மையுடனும் தூய்மையுடனும் வாழ்ந்த அரசியல் தலைவராக விளங்கிய இரா. செழியன் அவர்கள், 06.06.2017 அன்று வேலூரில் காலமானார்.

தமது முதுமைக்காலத்தில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழக வளாகத்தில், அதன் தலைவர் திரு. ஜி. விசுவநாதன் அவர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். நாவலர் இரா. நெடுஞ்செழியன் தம்பியான இரா. செழியனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சீனிவாசன்.

இவர் தந்தையார் இராசகோபால், பட்டுக் கோட்டை நீதிமன்றத்தில் பணியாற்றியதால், பள்ளிக் கல்வியை பட்டுக்கோட்டையில் முடித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1943_-46இல் எம்.ஏ. (கணிதம் - பி.எஸ்.சி., ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். அங்கு படிக்கும்போது திராவிட மாணவர் மன்றத்தின் செயலாளராக செயல்பட்டார்.

தி.மு.க.வில் 1962இல் பெரம்பலூர் தொகுதியிலும் 1967, 1971 ஆண்டுகளில் குடந்தைத் தொகுதியிலும் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சனதா தளம் சார்பில் அ.இஅ.தி.மு.க. ஆதரவுடன் 1978இல் தமிழ்நாடு சட்டப்பேரவை வழியாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இரா. செழியனின் முத்திரை பதித்த நாடாளுமன்றப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை:

1. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைச் சாற்றலை (பிரகடனத்தை) எதிர்த்து, மக்களவையில் போர்க்குணத்துடன் அறிவார்ந்த விவாதங்களை முன் வைத்தார். அதேபோல் நெருக்கடி நிலையை எதிர்த்து ஆங்கில ஏடுகளில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதினார்; மக்களிடையே உரையாற்றினார்.

2. 1971இல் மீண்டும் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை மறுபகிர்வு செய்வது குறித்துப் பரிந்துரை வழங்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. இராசமன்னார் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்தார். அக்குழுவின் உறுப்பினராக இரா. செழியன் அமர்த்தப்பட்டார். இன்னொரு உறுப்பினர் முரசொலி மாறன். பயனுள்ள பல பரிந்துரைகளை இராசமன்னார் குழு வழங்கியது. அக்குழுவை அமர்த்தி _- அதன் பரிந்துரையை சட்டப்பேரவைத் தீர்மானமாக்கி நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்த கலைஞர் கருணாநிதி, சிறிது காலம் கழித்து அப்படி ஒரு குழு அமைத்ததையே மறந்துவிட்டார். அதுபற்றி பேசுவதே இல்லை. இன்றையத் தி.மு.க.வினருக்கு அக்குழு பற்றி தெரியுமா என்பது வினாக் குறியே!

3. மொரார்சி தேசாய் தலைமை அமைச்சராக இருந்தபோது, 1978இல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது குறித்தப் பரிந்துரை வழங்குமாறு அசோக் மேத்தா, இரா. செழியன் ஆகியோரைக் கொண்டு குழு அமைத்தார். அக்குழு 1979இல் அளித்த பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டுதான் 1983-இல் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி “உள்ளாட்சி அரசு” (பஞ்சாயத் ராஜ்) சட்டம் இயற்றினார்.

கச்சத்தீவைத் தக்க வைக்கும் முயற்சி

தலைமை அமைச்சர் இந்திரா காந்தி 1974இல் தமிழ்நாட்டின் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தார். அச்செயலை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆழமான - ஆவேசமான விவாதங்களை எழுப்பினார் இரா. செழியன்.

கலைஞர் கருணாநிதியின் குடும்ப அரசியலின் வெப்பம் தாங்காமல் தி.மு.க.வைவிட்டு வெளியேறி சனதா தளத்தில் இரா. செழியன் சேர்ந்தது - அவரது அரசியல் வாழ்வின் பெரும் பின்னடைவாக அமைந்தது. நெருக்கடி நிலை காலத்தில், அதை எதிர்த்த முகாமின் தலைவராக விளங்கிய செயப்பிரகாசருடன் விழுமியங்கள் அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கமும் இரா. செழியன் சனதா தளத்தின் பக்கம் சேர காரணமாக அமைந்தது.

இரா. செழியன் அவர்களின் அறிவுக் கூர்மை, நேர்மை, தூய்மை, தமிழினப் பற்று போன்றவை தமிழின இளைஞர்களுக்கு வழிகாட்டியாகும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.