சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான தோழர் ஆ. குபேரன் அவர்களை இன்று (20.07.2017), தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினர் தளைப்படுத்தியுள்ளனர். அவர் மீது பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள தோழர் ஆ. குபேரன் செய்த குற்றம் என்ன? அவர் ஈடுபட்ட சட்ட விரோதச் செயல் என்ன?
கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.
அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறையினரின் அழைப்பின் பேரில், காவல் நிலையத்திற்குத் தானாகவே சென்ற தோழர் குபேரன் அவர்கள், போராட்டம் நடந்த இடத்திலிருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததாகவும், அவர் தப்பி ஓட முயன்றதாகவும் காவல்துறையினர் தங்கள் முதல் தகவல் அறிக்கையில் பொய்யாகக் குறிப்பிட்டுள்ளனர்.
திருமுருகன் காந்தி, மாணவி வளர்மதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டதையும், பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்டோரை பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்ததையும் கண்டித்து, நேற்று (19.07.2017) சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது, போராட்டத்தைத் தூண்டும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர் மீது குண்டர் சட்டம் பாயுமென்று ஆணவமாக விடையளித்தார் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்!
இன்று ஓரிடத்தில் கூடி குரலெழுப்புமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த செயலையே ஒரு வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டதுபோல் சித்தரித்து, காவல்துறையினர் தோழர் குபேரனை கைது செய்திருக்கிறார்கள். “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” என்ற போக்கில் எடப்பாடியார் அரசு செயல்படுகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 வழங்கும் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துக் கூறும் உரிமையை - ஆயுதமின்றிக் கூடும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த சனநாயகப் பறிப்பு மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தோழர் குபேரன் அவர்களை உடனடியாக விடுவிக்க ஆணையிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment