“காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை கர்நாடகம் கோருகிறது போர்க்கால அவசரத்துடன் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்!” காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!
“காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை கர்நாடகம் கோருகிறது போர்க்கால அவசரத்துடன் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்!” காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!
உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் நடந்து வரும் காவிரி வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், இந்தியாவிலுள்ள ஆற்று நீர் சட்டங்களுக்கு எதிரான செய்திகளையும் கூறி வருகிறார்கள். அத்துடன் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான தண்ணீர் பகிர்வை உச்ச நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்த்து வைக்க வேண்டுமென்றும் கேட்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய வழக்கறிஞர்களுக்கு முழுமையான விவரங்களையும், தரவுகளையும், வாத உத்திகளையும் வழங்குவதற்கு வல்லுநர் குழுவை அழைத்துக் கொண்டு, முதலமைச்சரோ அல்லது பொதுப்பணித்துறை அமைச்சரோ தில்லி சென்று, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுடன் விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், கட்டைப் பஞ்சாயத்து முறையில் காவிரி வழக்கில் தீர்ப்பெழுத வலியுறுத்தும் கர்நாடக அரசின் திசை திருப்பலுக்கு உச்ச நீதிமன்றம் இணங்கக் கூடாதென்று வலியுறுத்தியும், தஞ்சை மாவட்டம் பூதலூரில், இன்று (27.07.2017) காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், உழவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சி பூதலூர் ஒன்றியத் தலைவர் திரு. சி.எஸ். திருமாறன், த.வி.ச. மாவட்டச் செயலாளர் திரு. க. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, கடம்பங்குடி திரு. பிரிதிவிராஜ், அல்லூர் திரு. பழனிராஜன், சித்திரக்குடி திரு. ஆண்டவர், பேராசிரியர் சண்முகவேல் விடுதலைத் தமிழ்ப்புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் :
“உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கில், வழக்கறிஞர் பாலி நாரிமன் கர்நாடகத்துக்காக வாதிட்டு வடுகிறார். அனைத்திந்திய அளவில் செல்வாக்கு பெற்றவர் அவர். ஆனால், காவிரி வழக்கில் சட்டநெறி சார்ந்த அறத்துக்குப் புறம்பாகவும், வழக்கறிஞர் தொழிலுக்குரிய மதிப்பைக் கெடுக்கும் வகையிலும் உண்மையல்லாத செய்திகளை அவர் கூறி வருகிறார்.
1924இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமசுதானத்திற்கும் இடையே போடப்பட்ட காவிரி ஒப்பந்தம், 1974இல் தானாகவே இரத்தாகிவிட்டது என்று ஒரு பொய்யான செய்தியை தெரிந்தே அவர் சொல்லி வருகிறார். ஒப்பந்தத்தின் பிரிவு 10இன், உட்பிரிவு 11இல், ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிற அனுபவங்களைக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களையும், சேர்க்கைகளையும் செய்து கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தம் தானே காலவதியாகிவிடும் என்று எங்கேயும் கூறப்படவில்லை.
அடுத்து, கர்நாடக – தமிழ்நாடு எல்லையான பில்லிகுண்டுலுவிலிருந்து 60 ஆ.மி.க. (TMC) மழை நீர் கிடைக்கிறது என்றும், இப்பொழுது கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள 192 ஆ.மி.க.வில் - இந்த 60 ஆ.மி.க.வை கழித்துக் கொண்டு, 132 ஆ.மி.க. தான் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் தர வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று பாலி நாரிமன் கூறினார்.
அடுத்த நாளில், கர்நாடக அரசின் சார்பில் பேசிய இன்னொரு வழக்கறிஞர் மோகன், 30 ஆ.மி.க. தினசரி கிடைக்கிறது, எனவே அதையும் கழித்துக் கொண்டு 102 ஆ.மி.க.தான் கர்நாடகம் தர வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பேசினார். அதாவது, உச்ச நீதிமன்றம் ஒரு கட்டப்பஞ்சாயத்து வகையில் 192 ஆ.மி.க. தண்ணீரை குறைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் உத்தி!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகியோர் அவ்வப்போது வல்லுநர் குழுவுடன் தில்லி சென்று, கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர்களிடம் விவாதிக்கிறார்கள். அவர்களின் வாதத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான தரவுகளையும், உத்திகளையும் வழங்குகிறார்கள்.
ஆனால் தமிழ்நாடு அரசு, அதுபோல் ஒரு தடவைகூட தமிழ்நாடு முதலமைச்சரோ அல்லது பொதுப்பணித்துறை அமைச்சரோ வல்லுநர் குழுவுடன் சென்று தமிழ்நாட்டுக்காக வாதிடும் வழக்கறிஞர்களுடன் விவாதித்ததில்லை. வலு சேர்த்ததில்லை.
இப்பொழுது நடைபெறும் காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்துவிட்டால் அதை மாற்றி அமைக்க முடியாது என்றும், அதில் மறு ஆய்வு இல்லை என்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகிய மூவரும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.
காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துவிட்டது, நடைமுறைப் பாசன உரிமையின்படி (Riparian Right) தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தீர்ப்பாயம் ஒதுக்காமல், மிகமிகக் குறைவாக 192 ஆ.மி.க. என தீர்ப்பளித்துவிட்டது.
1934லிருந்து 1984வரை ஐம்பதாண்டுகளில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 362.5 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது என்பதையும், காவிரி நீரால் தமிழ்நாட்டில் 28 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்துள்ளது என்ற உண்மையையும் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் ஏற்கவில்லை.
எனவே, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தண்ணீர் ஒதுக்கிடும் கோரிக்கையுடன்தான் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் திருத்தங்கள் கோரி வழக்குப் போட்டது. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால், 192 ஆ.மி.க. தண்ணீரும் நிலைக்காது, கட்டப்பஞ்சாயத்து போல் குறைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலை, காவிரி டெல்டா மாவட்ட மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை எட்டு நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வாதிட்டுள்ளார்கள். இனி வரும் செவ்வாய் 02.08.2017 முதல், தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வாதிட வேண்டும்.
இந்நிலையில், போர்க்கால அவசரத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் தன்மையை அறிந்து உடனடியாக இதை சரி செய்ய தலையிட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாசன மற்றும் சட்ட வல்லுநர்களை அழைத்துக் கொண்டு தில்லி சென்று, தமிழ்நாட்டுக்காக வாதிடும் வழக்கறிஞர்களுடன் விவாதித்து, நம் வாதத்தை வலுப்படுத்துவதுடன், பாலி நாரிமன் கோரும் கட்டப்பஞ்சாயத்து அணுகுமுறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வந்துவிடாமல் தடுத்திட முயல வேண்டும்.
192 ஆ.மி.க.வுக்கு மேல் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் தர கர்நாடக அரசுக்கு ஆணையிடும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திடும் வகையிலும் ஆணை பெற்று - தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திரளான உணர்வாளர்களும் உழவர்களும் பங்கேற்றனர்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
www.Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
Leave a Comment