ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரைக் கன்னடர்களே களவாடிக் கொண்டனர்: தமிழ்நாடு அரசு தடுக்கத் தவறியது ஏன்? பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரைக் கன்னடர்களே களவாடிக் கொண்டனர்: தமிழ்நாடு அரசு தடுக்கத் தவறியது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

கர்நாடக அரசு கடந்த 30.06.2017 அன்று கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு 4,000 கன அடி தண்ணீர் திறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி திறந்துவிட்டதாக கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், 07.07.2017 வரை புதிய நீர் வரத்து மேட்டூர் அணைக்கு வரவே இல்லை! வெறும் 37 கன அடி மட்டும் தான் வந்து கொண்டிருந்தது.

08.07.2017 அன்று நண்பகல் அளவில், மேட்டூருக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்ததாகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கே.ஆர்.சாகர், கபினி ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட்டால், வழக்கமாக மூன்று நாட்களில் மேட்டூர் அணைக்கு அந்நீர் வந்து சேரும். இந்தத் தடவை ஏழு நாள் கழித்து, அதுவும் 1,000 கன அடி அளவில்தான் குறைவாகத் தண்ணீர் வந்த மர்மம் என்ன?

காவிரி ஆறு காய்ந்து கிடப்பதால், அதன் மடு மற்றும் மணல் வெளி தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்ள இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டது என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மைக் காரணம் அல்ல என்றும் தமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரை வழிநெடுக கர்நாடக மாநிலத்தவர் ஆற்றுக்குள் வாய்க்கால் வெட்டி, கனரக மோட்டார் எந்திரங்களை வைத்து, தண்ணீரை எடுத்து தங்களுடைய வேளாண்மைக்கும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டதால்தான், காவிரி நீர் மேட்டூர் அணை வருவதற்கு இவ்வளவு தாமதமானது என்பதை ஊடகங்கள் சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த உண்மையைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கண்டறியவில்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்த மூன்று நாட்களில், மேட்டூருக்கு வந்த சேர வேண்டிய காவிரி நீர் வரவில்லையே என்ற கவலை தமிழ்நாடு அரசுக்கு இருந்ததா என்று தெரியவில்லை.

அக்கவலை இருந்திருந்தால், பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்பி காவிரியில் தண்ணீர் ஓடி வர வழக்கத்திற்கு மாறான தாமதம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்திருக்க முடியும். கர்நாடக அரசிடம் அந்த சட்டவிரோதச் செயல்களை எடுத்துச் சொல்லி தடுக்க முனைந்திருக்கலாம்.

கர்நாடக அரசு சட்டத்திற்குப் பணிந்தோ, மனித நேய அடிப்படையிலோ தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. வரும் 11.07.2017 முதல், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு காவிரி நீர் வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய ஆணைப்படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டால், “இதோ திறந்துவிட்டோம்” என்று கணக்குக் காட்டுவதற்காகத்தான், நல்ல மனிதரைப் போல் நாடகமாடிட கர்நாடக முதலமைச்சர் சிறிது தண்ணீர் திறந்துவிட்டார். அந்தத் தண்ணீரையும் கர்நாடக எல்லையிலுள்ள கன்னட உழவர்களும் மற்றவர்களும் திருடிக் கொள்வது கர்நாடக அரசுக்குத் தெரிந்தாலும், அதைத் தடுக்காது!

மிகமிகக் கொடிய முறையில் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு அரசு அல்லவா, 24 மணி நேர விழிப்புணர்வுடன் இருந்து, திறந்துவிடப்பட்ட காவிரி நீரை மேட்டூர் அணைக்குக் கொண்டு சேர்க்க அக்கறை காட்டியிருக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்களின் நலன்களில் – உரிமைகளில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு விழிப்புணர்வோடு இருக்கிறது, மனக்கவலையோடு இருக்கிறது என்பதற்கான அளவு கோல்தான், காவிரி நீரை கர்நாடகத்தவர் களவாடிக் கொள்ளும்போது, அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த தமிழ்நாடு அரசின் நிலைபாடு!

தமிழ்நாடு அரசின் இப்படிப்பட்ட அக்கறையற்ற, அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர் வாழ்வுரிமையைப் பறிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, அதைச் செயல்படுத்த மறுத்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய அழுத்தத்துடன் கொண்டு சென்று நீதி கேட்க வேண்டும். அடுத்து, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்ட தண்ணீரை களவாடிக் கொள்வதற்கு வாய்ப்பளித்த கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

வரும் 2017 சூலை 11 அன்று, உச்ச நீதிமன்றத்தில் தொடங்கும் காவிரி சிறப்பு அமர்வின் தொடர் விசாரணையில் முழு அக்கறை செலுத்தி, தகுந்த சட்ட வல்லுநர்களை அமர்த்தி, அவர்களுக்குக் காவிரி தொடர்பான முழுமையான செய்திகளையும் உத்திகளையும் வழங்குவதற்குத் தகுதியுள்ள மூத்தப் பொறியாளர்களையும் சட்ட வல்லுநர்களையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துத் தர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே காவிரி வழக்கலிருந்த கவனக்குறைவுகள் இந்தத் தடவை போக்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.