ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வரலாறு அறிவோம்! ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைமலை சீனிவாசன். கட்டுரை : கதிர் நிலவன்

வரலாறு அறிவோம்! ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைமலை சீனிவாசன். கட்டுரை : கதிர் நிலவன்
1916இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சிக்கு முன்னரே அரசியல் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தி போராடியவை தாழ்த்தப்பட்ட இயக்கங் களாகும். குறிப்பாக பார்ப்பனக் கோட்டையாய் திகழ்ந்த பேராயக் கட்சியை கடுமையாக சாடின.

தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் அதிகாரம், சாதியொழிப்பு ஆகிய இரண்டு தளங்களிலும் போரா டியது. இதில் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. இராஜா ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த முப்பெரும் தலைவர்களில் முதன்மை நாயகராக இரட்டைமலை சீனிவாசன் அவர்களைக் கூறலாம்.

இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாளம் என்னும் கிராமத்தில்-07.07.1859இல் இரட்டைமலை _- ஆதியம்மை இணை யருக்கு மகனாகப் பிறந்தார். பலரும் தன் தந்தையார் பெயரின் முதல் எழுத்தை முன்னெழுத்தாக எழுதுவது மரபு. இவரோ அவரின் முழுப்பெயரையே தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டதால் இரட் டைமலை சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார்.

சீனிவாசனார் குடும்பம் தீண்டாமைக் கொடுமை காரணமாக தாம் வாழ்ந்த பகுதியிலிருந்து தஞ்சா வூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கு நிலவிய நிலவுடை மையரின் கொடுந்தாக்குதலுக்கு அஞ்சி, சீனிவாசனார் குடும்பத்தினர் கோயம்புத்தூருக்கு தப்பி வந்தனர்.

சீனிவாசனார் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் சாதியப் பாகுபாடுகள் தலை தூக்கி நிற்பதை உணர்ந்த சீனிவாசனார் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு காலையில் மணி அடித்த பிறகு செல்வதையும், மாலையில் மணி அடிப்பதற்கு முன்பு வீடு திரும்புவதையும் வழக்க மாக்கிக் கொண்டார். ஏனெனில், தமது சாதியை சக மாணவருக்கும் தெரியும் நிலை ஏற்படின், கல்வி கற்பதை தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அந்தப் பள்ளியில் பயின்ற 400 மாணவர் களில் 390 பேர் பிராமணச் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1882இல் கல்வியை முடித்த சீனிவாசனார் நீலகிரியில் உள்ள ஆங்கிலேய நிறுவனத்தில் கணக்கராக பணியில் சேர்ந்தார். அங்கு அவர் சுதந்திரக் காற்றை சுவாசித்த போதிலும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைநிலை குறித்து கவலைப்பட்டார்.

1884இல் அடையாறு தியாஸாபிக்கல் சொசைட்டி ஆண்டு விழா நடைபெற்றது. அதன் நிறுவனரான கர்னல் ஆல்காட் அப்போது அரசியல் இயக்கத்தின் தேவை குறித்து வலியுறுத்திப் பேசினார். அதன் உறுப்பி னராக இருந்த சீனிவாசனுக்கு அப்பேச்சில் உடன் பாடில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத அரசியல் இயக்கம் எதுவும் தேவை யில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

சீனிவாசனார் கருதியதுபோல், 1885இல் உருவான பேராயக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க வில்லை. இந்நிலையில் தான் 1890ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, அதிகாரம் பெறும் பொருட்டு "பறையர் மகாசன சபை" பெயரில் அமைப்பை உருவாக்கினார்.

இவரின் பறையர் அமைப்பை சாதியமைப்பாக பலர் இழிவுபடுத்தி சித்தரித்த போது சுப்பிரமணிய பாரதியார், "பறையர்களை மிருகங்கள் போல் நடத்துவது குற்றமேயொழிய, பறையர் என்று சொல்வது குற்ற மில்லை" என்று தனது 'பஞ்சமர்' என்ற கட்டுரையில் எழுதினார்..

1892இல் சென்னையில் சீனிவாசனாரின் முயற்சியில் இராயப்பேட்டை வெஸ்லி மிஷின் பள்ளியில் ஒரு பெரும் மாநாடு கூட்டப்பெற்றது. இதில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமுதாயம் குறித்து பேசப்பட்டது. இதுவே தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் அரசியல் முழக்கமாக கருதப்படுகிறது.

1893இல் சீனிவாசனார் 'பறையன்' என்றொரு இதழையும் தொடங்கினார். இதுபற்றி தனது 'ஜீவிய சரித்திரம்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "சர்க்கார் ரிக்கார்டுகளை பரிசோதித்துப் பார்த்த போது 1777ஆம் வருஷ முதல் இவ்வினத்தவர் பொருட்டாய் அவர்கள் (பிரிட்டிஷ் அரசு) கவலை எடுத்து வந்ததாக காணப்பட்டது... 1818ஆம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படியாக கலெக்டர்களை ரெவின்யூ போர்டார் கேட்டிருந்தார்கள்... 1893ஆம் வருஷத்தில் கல்வி கற்பித்துக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்... 1893ஆம் வருஷம் 'பறையன்' என்ற பத்திரிக்கையை தூண்டு கோலாக வெளியிட்டேன்"

சீனிவாசனாரின் மேற்கண்ட கூற்றிலிருந்து நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் களுக்கான பிரித்தானிய அரசின் திட்டங்கள் வகுக்கப் பட்டு நடைமுறைக்கு வந்ததை அறியலாம்.

மேலும், 'பறையன்' ஏட்டில், தொடர்ந்து அவர் பேராயக் கட்சியை 'பார்ப்பன காங்கிரஸ்' என்று சாடி எழுதினார். இதற்குக் காரணம் பேராயக்கட்சி தலைமை முழுவதும் பார்ப்பனர்களே நிரம்பி வழிந்தனர்.

சென்னையில் 174 பேர்களில் 84 பேரும், பம்பாயில் 128 பேர்களில் 94 பேரும், பூனாவில் 22 பேரும், வங்காளத்தில் 30 பேர்களில் 8 பேரும் பிராமணர்கள். மொத்தம் 1162 பேர்களில் 940 பேர் பிராமணர்கள் இருந்து வருவதால் அப்பாப்பாரக் காங்கிரஸ் பறையராகிய நம்மவர்க்கு யாது பயனைத் தராது. எனவே, காங்கிரசிற்கு சந்தாவாக ஒரு பைசா கூட தராதீர்கள். காங்கிரசிற்கு உதவி செய்தால் அது பாம்பிற்கு பால் வார்ப்பதாகும்! என்றார்.

ஆங்கிலேய நிர்வாக ஆட்சிப்பணித்துறை தேர்வுகள் இலண்டனில் நடத்துவதற்குப் பதிலாக, இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பேராயக்கட்சி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வரைவை கொண்டு வந்தது. இந்தியாவில் தேர்வு நடத்தப் பட்டால் சாதி இந்துக்கள் பதவிகளில் அமர்ந்து தீண்டப்படாத மக்களை துன்புறுத்துவார்கள் என்பதால் இதற்கு எதிராக 23.12.1893இல் பறையர் மகாசன சபை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், 112 அடி நீளமுள்ள மனுவைத் தயாரித்து 3,412 பேரிடம் கையெழுத்து பெற்று சீனிவாசனார் அனுப்பி வைத்தார். இந்த மனுவில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப் படாதது குறித்தும் கவலை தெரிவித்து குறிப்பிடப் பட்டது.

சீனிவாசனார் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். 1900இல் தாழ்த்தப்பட்டோர் உரிமை பேச இலண்டன் செல்ல புறப்பட்டார். மும்பை சென்றதும் கப்பல் கிடைக்கப் பெறாததால், தென்னாப்பிரிக்கா போகும் நிலை உருவானது. அங்கு அவருக்கு அரசுப்பணி கிடைத்ததோடு, காந்தியாரின் தொடர்பும் ஏற்பட்டது. காந்தியார் தென்னாப்பிரிக்காவில் தமிழர் களுக்காகப் போராடிய போது சீனிவாசனார் அதில் பங்கேற்றார். காந்தியாரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்து தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்தார். அதுமட்டுமல்ல; காந்தியாருக்கு தமிழில் கையெழுத்திடவும் கற்றுக் கொடுத்தார். அதே வேளை யில் 1932 இல் தாழ்த்தப்பட்ட மக்களின் இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாப் போராட்டம் நடத்திய காந்தியாரை கண்டிக்கவும் தவறவில்லை.

1921இல் இந்தியாவிற்கு சீனிவாசனார் திரும்பினார். சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போதைய பிரித்தானிய அரசு சீனிவாசனார் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தது. அவர் 1922 முதல் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் உறுப்பினராக பதவி வகித்தார்.
அப்போது தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். தீண்டாமைக்கு அடிகோலும் பரம்பரை கர்ணம் பதவிகளை ஒழித்தல், தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாங்கும் கைநாட்டு பத்திரப் பதிவுகளை இரத்து செய்தல், விடுமுறை காலங்களில் மதுக்கடைகளை மூடுதல் ஆகியவை இவர் கொண்டு வந்தவை. இவற்றுள் மிக முதன்மையானது பொதுப்பயன்பாட்டு உரிமைகளை தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க வேண்டுதல் தொடர்பாக 25.09.1924ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும்.

சென்னை மாகாணத்தில் உள்ள பொது ரஸ்தாக்கள், மார்க்கெட்டுகள், கிணறுகள் போன்ற வற்றை தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்த அனுமதிக்கும் படி அழுத்தமான குரலில் சீனிவாசனார் முழங்கினார். ஏனெனில், கடந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் களாக இருந்த பித்தாபுரம் மகா ராஜா, எம்.சி. இராஜா, சௌந்தர பாண்டியனார் ஆகியோர் இதுபற்றி பேசியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. ஆனால் சீனிவாசனாரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அரசா ணையாகவே வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை தன் மனைவி அரங்கநாயகி அம்மாள் கல்லறையிலும் கல்வெட்டாகப் பொறித்தார்.

1930 _ -1931ஆம் ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களோடு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்கிய அவரது குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் பேசினார். ஆனால், அதே அம்பேத்கர் 1935இல் புத்த மதத்தை தழுவுவதே சிறந்த வழி என்று கூறிய போது அதனை வன்மையாக மறுத்தார். "தாழ்த்தப்பட்டோர் இந்துக்களே அல்ல, இந்துவாக பிறந்தால் தானே இந்துவாக இறப்பதற்கு, மதமாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை, தாங்களிருக்கும் மதத்திலிருந்து கொண்டே ஆண்மையான வீரத்துடன் முன்னேற வேண்டும்" என்றார்.

1893ஆம் ஆண்டிலிருந்தே தீண்டாமைக் கொடு மைக்கு மதமாற்றம் தீர்வாகாது என்பதை எழுதி வந்தவர். கர்னல் ஆல்காட் புத்தமதத்தை ஆதரித்த தையும் கடுமையாகக் கண்டித்தவர். கர்னல் ஆல்காட் வழியில் அயோத்திதாசர் புத்த மதத்தைத் தழுவிய போதும், அதை ஏற்க மறுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (சீனிவாசனாரின் தங்கை தன லெட்சுமி அவர்களை அயோத்திதாசர் திருமணம் முடித்திருந்தார்).

சீனிவாசனார் இலண்டன் வட்ட மேசை மாநாட் டிற்குச் சென்ற போது, இரட்டைமலை சீனிவாசனின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "உன்னிடம் வீட்டுச் செலவிற்கு பணம் இருக்காது, அதற்காகக் கவலைப்பட வேண்டாம். தர்மலிங்கம் பிள்ளையைப் பார்த்துக் கேட்டால் பத்து ரூபாய் தருவார். அவரிடம் தருமாறு சொல்லி வந்துள்ளேன். இந்த ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச் செலவை பார்த்துக் கொள். நான் அதற்குள் வந்து விடுவேன்" என்று எழுதினார்.

தனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மனைவி இரெங்கநாயகி இறந்தபோது கண்கலங்கிப் போனார். அவரின் ஈக உணர்வே நான் சமூகத்திற்கு உழைக்க சாத்தியமானது என்று மனைவியின் கல்லறையிலே பொறித்து மனைவி மீது கொண்ட அன்பை வெளிப் படுத்தினார்.

1939இல் திரு.வி.க. தலைமையில் எம்.சி. இராஜா, இராசாசி, பாசுதேவ் ஆகியோர் பங்கேற்று சீனிவாச னாருக்கு பாராட்டு விழா நடத்தினர். அதில் சீனிவாச னார், "ஐம்பது ஆண்டுகள் தொண்டு புரிந்தும் எமக்கு அயர்வைத் தரவில்லை. ஒதுக்கப்பட்ட மக்கள் சிறிது காலத்தில் பூரண உரிமையை பெற்று விடுவர். அவர்களின் கீழான நிலைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும் அன்புக் குணமுமே காரணமாகும்" என்று பேசினார்.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்புவழியிலும், அமைதிவழியிலும் போராடிய 'தாத்தா' என்று எல்லோராலும் அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனார் 18.09.1945இல் காலமானார்.

இரட்டைமலை சீனிவாசன் எழுதிய தன்வரலாற்று நூலான 'ஜீவிய சரித்திரச் சுருக்கம்', அன்பு பொன்னோவியம் எழுதிய 'மக்களுக்கு உழைத்த பெருமக்கள்', ஏ.கே. சாமி எழுதிய 'பழங்குடி மக்களின் தலைவர்கள் வரலாறு', க. திருநாவுக்கரசு எழுதிய 'களத்தில் நின்ற காவலர்கள்', அம்பேத்கர் பிரியன் எழுதிய 'இரட்டைமலை சீனிவாசன் வரலாறு', ஏ.பி.வள்ளிநாயகம் எழுதிய ' மனித உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசனார்', வே. பிரபாகரன் எழுதிய 'இரட்டைமலை சீனிவாசன் வரலாறு' ஆகியவை சீனிவாசனாரின் சிறப்பைக் கூறும் நூல்களாக வெளி வந்துள்ளன. சீனிவாசனாரை மேலும் அறிய முற்படுவோர் இந்நூல்களைப் படித்துப் பயனுறலாம்.

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் சூலை 1-15 இதழில் வெளியான கட்டுரை!

ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்


கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.