ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது? - பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை.

தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது ? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை!
நாம் தெற்கு என்றால், அவர்கள் வடக்கு என்பார்கள்! நாம் அறங்கூறும் திருக்குறள் எமது நூல் என்றால், அவர்கள் உடன்பிறப்புகளோடும் சண்டையிடக் கூர்தீட்டி விடும் பகவத் கீதை எமது நூல் என்பார்கள்! நாம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்றால், அவர்கள் “பிரம்மாவின் தலையிலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் சத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன், காலிலே பிறந்தவன் சூத்திரன்” என்று மனிதர்களைப் பிறப்பால் மேல் கீழாகப் பிரிப்பார்கள்!

ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பும் இப்போதும் இனத்தால் “தமிழர்” நாம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் “ஆரியர்கள்” - இன்றோ “இந்தியர்” என்ற பெயரால் உருமாறி இருப்பவர்கள்! அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு அரசின் நடவடிக்கைகளைப் பயன்படுத்தி ஆரிய ஆதிக்கத்தை இன்றும் நிலைநாட்டிடச் செயல்படுகிறார்கள். இந்தியாவுக்கு ஆரியப் புராணப் பெயரான “பாரத்” என்று பெயர் சூட்டுவதும், அரசுத் திட்டங்களுக்கு சமற்கிருத ஆரியப் புராணப் பெயர்களைச் சூட்டுவதும் அவர்கள் தங்கள் ஆரியத்துவத்தை நிலைநாட்டவே ஆகும்!

தமிழினத்திற்கு எதிரான ஆரியத்துவப் பகை, “இந்துத்துவம்” என்ற பெயராலும் “இந்தியம்” என்ற பெயராலும் தொடர்கின்றது. எனவே, கங்கையைத் தூளிணிமைப்படுத்த 20,000 கோடி ரூபாயில் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டுபவர்கள் காவிரி காணாமல் போவதைக் கண்டு களிக்கிறார்கள்! ஆரியப் புராணக் கதையில் சொல்லப்படும் சரசுவதி ஆற்றைத் தேடி கண்டுபிடிக்க பல நூறு கோடி ரூபாய் செலவிடும் இந்திய அரசு, தமிழ் மண்ணின் கீழடி அகழாளிணிவுக்கு சில இலட்சம் ரூபாளிணி செலவிட மறுக்கிறார்கள்! இங்கு சிக்கல் பணம் அல்ல - இனம்!

நர்மதை ஆற்றுச் சிக்கலிலும், கிருஷ்ணா ஆற்றுச் சிக்கலிலும் செயல்படும் சட்டங்கள் காவிரிச் சிக்கலில் முடங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த ஆற்று நீர் பகிர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைத்திடும் அதே இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது! காவிரித் தீர்ப்பையே கிழித்துப் போட்டு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கத் துடிக்கிறது! இயற்கை அன்னையின் மடியில் காற்றும், காவிரி ஆறும், காவிரிக் கரை மண்μம், அங்கு வாழும் நுண்μயிரிமீகிம் பல்லாயிரம் ஆண்டுகள் ஊடாடி ஊடாடி உருவான அழகிய காவிரிச் சமவெளி - ஆரிய இந்தியத்தின் கண்ணை உருத்துகிறது! ஓடும் ஆற்றின் குறுக்கே கல்லைக் கொண்டு அணை கட்டியதும், ஆயிரம் ஆண்டுகளாளிணி உயர்ந்து நிற்கும் கோபுரம் கட்டியதும், அறிவியல் விந்தையாய் - அழகியல் அற்புதமாய் - சிற்பங்கள், சிலைகள் வடித்ததும், இந்தக் காவிரிச் சமவெளியில் இருப்பதால் ஆரிய இந்தியம் அதை அழிக்கத் துடிக்கிறது!

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், சமவெளியைக் குத்தித் துளைத்துக் குதறி, எண்ணெளிணி - எரிவளி - நிலக்கரி எடுத்து, மண்ணையும் நீரையும் பாழாக்கி பாலைவனமாக்கத் துடிப்பதற்குக் காரணம் - ஓங்கி வளர்ந்த தமிழினத்தின் மீதான ஆரியத்தின் பகையே ஆகும்! கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் அணு உலை கூடாது என்றால், அதை ஏற்கும் ஆரிய இந்தியம், தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணு உலைகளை நிறுவி வருவது பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரத் தேவைக்கு மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாக தலைதூக்க முடியாத வண்ணம் தமிழினத்தை அழிப்பதற்கே ஆகும்!

ஆள் நடமாட்டம் இல்லாத இமயமலையை விட்டுவிட்டு, பேரழிப்பு நியூட்ரினோ ஆளிணிவுக்காக தேவாரம் அம்பரப்பர் மலையை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அறிவியல் ஆர்வம் அல்ல - இனப்பகையே அடிப்படை ஆகும்! மேற்கு வங்காளம் நந்திகிராமத்தில் மக்களால் விரட்டப்பட்ட எரிவேதி (பெட்ரோகெமிக்கல்) மண்டலத் திட்டத்தை கேரளா ஏற்க மறுத்தபோது அங்கு அதைத் திணிக்காத இந்திய அரசு, ஓ.என்.ஜி.சி.க்கும் மீத்தேன் திட்டத்திற்கும் ஊர் ஊராகப் போர் நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் எரிவேதி மண்டலத்தைத் திணிப்பது இனப்பகையின் இன்னொரு வெளிப்பாடு ஆகும்!

தமிழ்நாட்டிலிருந்து 1 இலட்சத்து 30 ஆயிரம் கோடி வரி வருமானம் திரட்டியபோதும், புயலுக்கும் வறட்சிக்கும்கூட கேட்ட நிதியில் வெறும் 3 விழுக்காடு ஒதுக்கியது, பொருளியல் சிக்கனமல்ல! இனப்பகை வக்கிரம் ஆகும்! 2015-2016ஆம் ஆண்டுகளில் பேரிடர்களால் சிறிதளவு பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்துக்கு 2,875 கோடி ரூபாளிணி நிதி - இராசஸ்தானுக்கு 1,378.13 கோடி ரூபாய் நிதி - பேரிடர் பட்டியலிலேயே இல்லாத கர்நாடகத்துக்கு 1,645.53 கோடி ரூபாய் நிதி வழங்கியது இந்திய அரசு! ஆனால், வர்தா புயலாலும் வரலாறு காணாத வறட்சியாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெறும் 2,195.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதைப் பார்த்தால். இந்த இனப்பகை புரியும்!

இந்தியாவின் ஆட்சி எல்லை என்பது, இப்போது பட்டியலிலுள்ள மாநிலங்களின் எல்லை மற்றும் சேர்த்துக் கொள்ளப்படும் பகுதிகள் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்த இந்தியா, சட்டத்திருத்தம் ஏதுமின்றி தமிழ்நாட்டின் கச்சத்தீவை சிங்களத்திற்கு அளித்தது இனப்பகையால்தான்! கேரளத்தின் 2 மலையாள மாலுமிகள் தாக்கப்பட்டபோது வல்லரசான இத்தாலியையே கூண்டிலேற்றிய இந்திய அரசு, அன்றாடம் கச்சத்தீவு கடற்பரப்பில் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டு சித்திரவதை செளிணியப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து கண்டனக்குரல்கூட எழுப்பாதது, இவர்கள் “தமிழர்கள்” என்பதால்தான்!

உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இனமக்கள் தாக்கப்பட்டால், அங்கே அனைத்து நாட்டுப்படையில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் இந்தியா, இலங்கை சிங்கள அரசு நடத்திய தமிழ் இனஅழிப்புப் போரில் நெருக்கமாகப் பங்காற்றி ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததும், அதன் மீது பன்னாட்டு விசாரணையின் நிழல்கூட படாமல் பார்த்துக் கொள்வதும் ஆரிய இந்தியத்தின் இனப்பகை ஆழத்தை தெளிவுபடுத்தும்!

இந்துத்துவம் என்ற பெயராலும், இந்தியம் என்ற பெயராலும் தில்லியில் யார் ஆண்டாலும் தமிழினத்திற்கு எதிரான ஆரியப்பகை மாறுவதே இல்லை! பா.ச.க.வுக்கும் காங்கிரசுக்கும் இதில் வேறுபாடு இல்லை! ஆரிய எசமானர்கள் வீசும் பதவித் துண்டுக்காக - பணப் பங்கிற்காக தாளிணித்தமிழ் மண்ணை விற்கவும், தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுக்கவும் சற்றும் தயங்காத உதிரிகள் கூட்டமே ஆட்சி நடத்திவரும் - ஆட்சி நடத்திய கழகக் கங்காணிக் கும்பல்!

ஆயினும், இந்திய அரசின் சுரண்டல் திட்டங்களுக்கு எதிராக தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் வீறு கொண்டு வருகின்றன. மக்கள் போராட்டம் நடக்காத மாவட்டமில்லை - மக்கள் போராட்டம் நடத்தாத நாளுமில்லை என்ற அளவுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள்.

இந்தப் போராட்டம் இரண்டு வகை உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றது. ஒன்று, ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ள அணியமாக இல்லை, எதிர்த்துப் போராடத் தயங்கவில்லை. இப்போராட்டங்கள் எதுவும் தேர்தல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுபவை அல்ல. அதிகம் போனால், இந்த மக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதரவு தெரிவிப்பது மட்டுமே தேர்தல் கட்சித் தலைவர்களின் அரசியல் பணியாக உள்ளது.

இன்னொரு உண்மை, இந்த மக்கள் போராட்டங்கள் தனித்தனியாக தனித்தனி சிக்கல்கள் போல கருதி நடத்தப்படுவது, அதன் உள்ளார்ந்த பலவீனம் ஆகும்! இதனால், இப்போராட்டங்கள் தனித்தனிக் காரணங்களையும், தனித்தனியாக அரசு நிறுவனங்களையும் எதிர் கொண்ட போராட்டங்களாக நீடிக்கின்றன. இதன் காரணமாகவே சில போராட்டங்கள் தொடர முடியாமல் தொளிணிவடைகின்றன. தமிழ்நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், சுரண்டல்களுக்கும் முதன்மை ஊற்றுக்கண் இந்திய அரசே ஆகும்!

அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர் வளர்ச்சி என்ற பெயரால், எவ்வாறு அந்த மண்ணின் மக்களான செவ்விந்தியர்களை இனவேட்டையாடி, வெள்ளை இன ஆதிக்கத்தை நிலைநாட்டினரோ அதேபோல், இந்தியாவின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரால் தமிழ் இனத்தின் மீது ஆரியத்தின் ஆதிக்க வேட்டை ஞாயப்படுத்தப்படுகிறது!

தமிழ் மண்ணின் அழிவின் மீது வளர்ச்சியடைந்த இந்தியா கட்டி எழுப்பப்படுகிறது! ஆரியத்தின் விரிவாக்கவாதமும் பன்னாட்டுப் பொருளியல் வேட்டையும் இணைந்து உருவானதுதான் இந்தியா என்பதால், இந்த இந்தியத்துக்கு உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், அரியானா, இராசஸ்தான் உள்ளிட்ட ஆரியவர்த்தத்தின் மக்கள் ஆதரவும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் பொருளியல் ஆதரவும் உலக வல்லரசுகளின் அரசியல் அரவணைப்பும் கிடைக்கிறது.

எனவே, ஆரியத்துவ இந்திய அரசு நடவடிக்கைகளால் துன்புறும் வடநாட்டு மக்களில் கணிசமானோர்கூட இந்த வடக்கிந்திய ஏகாதிபத்தியத்தை தங்களது ஆரியப் பேரரசாகக் கருதி இணக்கம்  காண்கிறார்கள். இதன் வழியாக கணிசமான மக்களின் ஆதரவு என்ற வகையில் சனநாயக ஏற்பு கிடைக்கிறது!

எனவே, சனநாயகத்தின் பெயராலேயே ஆரியத்துவ ஆதிக்கம் தமிழினத்தின் மீது நிலைநாட்டப்படுகிறது. இந்த நுμக்கமான அடிப்படை அரசியல் புரிதலோடு, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாம் கூறும் போராட்ட ஒருங்கிணைவு, தனித்தனி அடையாளத்தோடு நடக்கும் போராட்டங்களைக் கைவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் ஒருங்கிணையக் கோருவது அல்ல! தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தனித்தனி அடையாளத்தோடு மக்கள் போராட்டங்கள் நடப்பது, இப்போதைய நிலையில் தேவைதான்!

அதேநேரம், இப்போராட்டங்கள் ஒருங்கிணைந்த தத்துவப் பார்வையின்கீழ் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்! நாம் மேலே சுட்டிக்காட்டியதுபோல், ஆரியத்துவ இந்தியத்தின் தமிழினப்பகை அரசியல்தான், தமிழ்நாட்டின் மீது அடுக்கடுக்கான தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணமாகும்!

இதற்கு எதிராகத் தனித்தனியாகப் போராடி வரும் நாம், தமிழினம் என்ற வகையில் ஒருங்கிணைவதுதான் நம்மை வலுப்படுத்திக் கொள்ள அடித்தளம் அமைக்கும்! இந்த ஒருங்கிணைவு இந்திய அரசின் இன ஒதுக்கலைப் புரிந்து கொண்டு அணிதிரட்டும் ஒரு தெளிவான தத்துவத்தின்கீழ் மட்டுமே நிகழ முடியும்! அந்தத் தத்துவமே தமிழ்த்தேசியம் ஆகும்!

தமிழினத்தின் தொன்மை - தமிழினத்தின் அறிவியல் பார்வை - அறவியல் நோக்கு - வீர மாண்பு ஆகிய மரபின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள புதுமைத் தத்துவமே - தமிழ்த்தேசியம் ஆகும்!

தமிழ்த்தேசிய இனத்தின் அரசுரிமை, வாழ்வுரிமை, சமத்துவ வாழ்வு ஆகியவற்றை நிலைநாட்டும் தமிழ்த்தேசியத்தை ஏந்தித் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராடுவதே நமக்கான வளமான - அமைதியான எதிர்காலத்தை நிலைநாட்டும்! இவ்வாறான முழுநிறைவுத் தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 ஆகத்து  - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.