ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உலக அநாதை இனமாக ரோகிங்கியா! தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2015 – செப் 1-15 இதழின் கட்டுரை!

உலக அநாதை இனமாக ரோகிங்கியா! தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2015 – செப் 1-15 இதழின் கட்டுரை!
தாய்லாந்தை ஒட்டிய மலேசிய நாட்டு மலையடிவாரத்தில் கடந்த வாரம் தோண்டத் தோண்ட பிணங்கள் கிடைத்த செய்தி உலகத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

அந்தமான் கடலைத் தாண்டி அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்ற 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த 3500 பேர், 10 நாட்களாக நடுக்கடலில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்கிடையில் பந்தாடப்பட்டது மனசாட்சியுள்ள மனிதர்களை உலுக்கியது.

மேற்கண்ட இரண்டு கொடும் நிகழ்வுகளிலும் சிக்கிய மக்கள், ரோகிங்கியா (Rohingya) இனத்தவர் ஆவர்.

மியான்மர் (பர்மா) நாட்டின் மேற்குக்கோடியில் ராக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோகிங்கியாக்கள் தொடர் இன அழிப்புக்கு ஆளான மக்கள் என்பது அண்மையில்தான் உலகின் கவனத்திற்கு வந்துள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ராக்கைன் பகுதியைத் தங்களது வரலாற்றுத் தாயகமாகக் கொண்ட முசுலிம்களும், பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இன்றைக்குள்ள வங்காள தேசப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய வங்காள முசுலிம்களும் கலந்து உருவான மக்களே, ரோகிங்கியா இனத்தவர் ஆவர். டாக்காவில் பேசப்படும் வங்காள மொழி சாயலோடு உள்ள தனித்த ஒரு மொழியை பேசி வரும் மக்கள் இவர்கள்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பர்மிய புத்த மதத்தவர்களுக்கும் ரோகிங்கியர்களுக்கும் தொடர் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக பர்மா இருந்தபோது, இரண்டாவது உலகப் போர் காலத்தில் சப்பான், பர்மா பகுதியைக் கைப்பற்ற போர் நடத்தியது. சப்பானுக்கு பர்மிய புத்த மதத்தவர்கள் துணை ஆனார்கள். பிரிட்டன் பேரரசு ரோகிங்கியர்களைத் தனிப் படையாக்கி அவர்களிடம் ஆயுதம் கொடுத்து சப்பான் ஆதரவு பெற்ற பர்மியர்களுடன் மோதவிட்டது.

1942-இல் இது மிகப்பெரும் கலவரமாக வெடித்து, இருதரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்பட்டு, அதிலும் கூடுதலாக ரோகிங்கியர்கள் உயிர்ச்சேதம் அடைந்தனர்.

1948-இல் பர்மா விடுதலை பெற்றதிலிருந்து சிறிது காலமே இருந்த சனநாயக ஆட்சியிலாகட்டும், அதன் பிறகு நீண்ட காலம் நீடித்த இராணுவ சர்வாதிகார ஆட்சியிலாகட்டும், பர்மிய தேசியம் என்பது தெரவாடா புத்த மதவாதத்தோடு, இணைந்தே வளர்ந்தது. அதனால், தொடக்கத்திலிருந்தே சைவ இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் எதிராகவே பர்மிய தேசியம் கட்டமைக்கப் பட்டது.

இதன் காரணமாக, 1960களில் பர்மாவிலிருந்து தொகை தொகையாக தமிழர்கள் விரட்டப்பட்டு அகதிகளாக தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்தனர். தமிழர்களுக்கு எதிராக பர்மிய மக்களை அணி திரட் டுவதில் புத்த மத வெறி முக்கியப் பங்காற்றியது.

அனைத்து சனநாயக உரிமை களையும் பறித்து கொடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்திய, இராணுவ ஆட்சியாளர்களுக்கு தெரவாடா புத்தமத வாதம் பெரும் துணையாக அமைந்தது.

வங்காள தேசம் 1971-இல் உருவாகி சில ஆண்டுகளிலேயே அந்நாட்டை மிகப்பெரும் பஞ்சமும் வேலையின்மையும் பிடித்தாட்டியது. இந்தியாவின் மேற்கு வங்காளத்திற்குள்ளும், பர்மாவின் ரோக்கைன் மாகாணத்திற்குள்ளும் வங்காள தேச மக்கள் அலை அலையாக அகதிகளாக வருவது அதிகரித்தது. இவ்வங்காள முசுலிம்கள் ரோகிங்கிய முசுலிம்களோடு கலந்தனர்.

இதுவே, புத்தமதவாத இராணுவ ஆட்சியாளர்களுக்குப் புதிய வாய்ப்பைத் தந்தது. ரோகிங்கியர்கள் அனைவருமே வங்காள தேசத்தவர். அவர்கள் பர்மிய தேசத்திற்கு அயலார் என ஒட்டு மொத்த ரோகிங்கியர்களையும், அயலாராக சித்தரிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, 1978-இல் புத்தமதக் காடையர்களும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய கொடும் தாக்குதலில் இரண்டு இலட்சம் ரோகிங்கியர்கள் மற்றும் வங்காள தேசத்தவர்கள் வங்காள தேசத்திற்கு அடித்து விரட்டப்பட்டனர்.

பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பர்மிய தேசிய வண்ணத்தோடு ஓர் குடியுரிமைச் சட்டத்தை, 1982-இல் உருவாக்கினர். இச்சட்டம், ரோகிங்கியர்களை ஒட்டுமொத்தமாக குடியுரிமையற்றவர்களாக மாற்றியது. அதற்கு, நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே ரோக்கைனில் தலைமுறை தலைமுறையாகத் தாங்கள் வாழ்ந்து வருவதாக ஆவணச்சான்று காட்ட முடியாத ரோகிங்கியர் யாரும் பர்மா குடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

பர்மாவும் மியான்மர் என, பர்மிய மொழிப் பெயர் பெற்றது. தலைநகர் ரங்கூன், யங்கூன் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இக்குடியுரிமைச் சட்டத்தால் காலங்காலமாக அங்கு வாழ்ந்த ரோகிங்கியர்கள் திடீரென நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். அவர்களிடமிருந்த நிலங்களை இராணுவ ஆட்சியாளர்கள் பிடுங்கிக் கொண்டு, அவற்றை புத்தமத பர்மியர்களுக்கு வழங்கினர். பர்மியர்களைக் குடியமர்த்தினர். ரோகிங்கியர்களின் ராக்கைன் கலப்பினத் தாயகமாக மாற்றப்பட்டது.

குடியுரிமை அற்றவர்களாக, நிலஉரிமை பறிக்கப்பட்டவர்களாக மாறிய ரோகிங்கியர்கள் அனைத்து வாழ்வுரிமையையும் இழந்தனர். அவர்களுக்கு அரசு வேலை கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட பெரிய தொழிலகங்களும் வேலை வழங்குவதில்லை. அவர்கள் இராணுவ முகாம்களில் கூலியற்ற கட்டாய உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசின் முன் அனுமதி பெறாத திருமணங்களே தடை செய்யப்பட்டன. அனுமதி பெறாமல் கணவன் - மனைவியாக வாழ்ந்தால் ஏழாண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்கள். திருமணம் செய்து கொள்ளும் ரோகிங்கியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற மாட்டோம் என உறுதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான், அவர்கள் திருமணம் செய்து கொள்ளவே அனுமதிக்கப்படுவார்கள்.

ரோக்கைன் மாகாணத்திற்குள்ளேயே இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர முடியும்.

ரோகிங்கியர்களில் சிலர் சவுதி அரேபியாவுக்கு புலம் பெயர்ந்த போது, தொடக்கத்தில் அனுமதியளித்த சவுதி அரேபியா 1990 களுக்குப் பிறகு, இசுலாமியத் தீவிரவாதம் தலைதூக்கியதற்குப் பிறகு, ரோகிங்கியர்களை அனுமதிக்க மறுத்தது. ரோகிங்கியர்களின் சட்டவிரோதப் புகலிடமாக வங்காள தேசமும், அடுத்த நிலையில் மலேசியாவும் அமைந்தன.

ரோகிங்கியர்களுக்கு எதிரான வன்முறை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் என்றாலும், 2012க்குப் பிறகு இது தீவிரம் பெற்றது. 2012 சூனில், பர்மிய புத்த மதப் பெண் ஒருத்தியை ரோகிங்கிய முசுலிம் இளைஞர் பாலியல் வல்லுறவு கொண்டு கொன்று விட்டதாக வெளிவந்த செய்தி, ரோகிங்கியர்களுக்கு எதிரான மிகப்பெரும் கலவரமாக முடிந்தது.

புத்தமதக் காடையர்களும், இராணுவத்தினரும் இணைந்து கொண்டு நடத்திய சூன் தாக்குதலில், ஏறத்தாழ 90 ரோகிங்கியர்கள் கொல்லப்பட்டனர். வீதி வீதியாக அவர்களது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குடியிருப்புகள் தரைமட்டமாயின. 1,40,000 பேர் உள்நாட்டு அகதிகளாக முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 20,000 ரோகிங்கியர்கள் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய பகுதிகளுக்கு சட்ட விரோதப் படகுப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளில் சட்ட விரோதமாகப் புலம் பெயர்ந்தனர்.

இவ்வாறு, இந்நாடுகளுக்குச் சென்ற ரோகிங்கிய ஆண்கள் கடத்தல் தொழிலிலும், பெண்கள் பாலியல் தொழிலிலும் சிக்க வைக்கப்பட்டது தொடர் நிகழ்வானது.

அவ்வாறு மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று கடத்தல் மற்றும் பாலியல் தொழில் கும்பல்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே அண்மையில் இச்சிக்கலின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டின.

2010-க்குப் பிறகு அசுவின் விராத்து என்ற வெறி கொண்ட புத்தத் துறவியின் தலைமையில் “969 இயக்கம்” என்ற பெயரில் மதவெறி அமைப்பு ஒன்று தலையெடுத்த பிறகே, கடந்த 4 ஆண்டுகளாக ரோகிங்கிய முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாள்தோறும் நடக்கத் தொடங்கின.

இந்த அசுவின் விராத்து 2013 இறுதியில், இலங்கைக்குச் சென்று பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு வந்த பிறகுதான், முசுலிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த வெறியர்களின் தொடர் தாக்குதல்கள் அங்கு தீவிரம் பெற்றதையும் இணைத்துப் பார்க்கலாம்.

அசுவின் விராத்தோடும், அவனது “969 இயக்கத்”தோடும் ஆர். எஸ்.எஸ். நெருக்கமான தொடர்பு வைத்துள்ளது. 2012 சூன் தொடங்கி, இன்றுவரை நாள் தோறும் ரோகிங்கியர்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரம் பெற்று வருகின்றன.

தாங்கள் கொலை செய்த ரோகிங்கிய ஆண் சடலங்களுக்கு மொட்டையடித்து புத்தத் துறவியின் ஆடையை அணிவித்து, அந்தப் படத்தை முகநூல்களில் பரவ விடுவதன் மூலம் ரோகிங்கியர்கள் மியான்மர் புத்தமதத்த வரை கொன்றொழிப்பது போன்ற பொய்ச் செய்தியை, இத்துறவிகள் மக்களிடம் பரப்பி வருகின்றனர். எனவே, மியான்மரில் உள்ள சாதாரண மக்கள் கூட, வங்காள தேசத்தைச் சேர்ந்த அயலார், தம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கருதுகிறார்கள்.

மியான்மரில் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தொடர்ப் போராட்டம் நடத்தி, சனநாயகத்தை ஓரளவுக்காவது மீட்பதில் வெற்றியடைந்த ஆங் சான் சூகி, ரோகிங்கிய இனப்படுகொலை தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.

வருகிற நவம்பர் மாதம், மியான்மரில் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், தான் இதில் நடுநிலையான கருத்துக் கூறினால் அது தனது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என ஆங் சான் சூகி கருதுகிறார்.

இந்த நிலையில், நாடற்றவர்களாக தொடர் இன அழிப்புக்கு ஆளாகி வரும் ரோகிங்கியர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமையாகும்.

அதே நேரத்தில், அந்நாட்டில் 1978க்குப் பிறகு சட்ட விரோதமாகப் புலம் பெயர்ந்துள்ள வங்காள தேசத்தவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்கான பன்னாட்டு சட்ட வழி முறைப்பட்ட ஏற்பாடுகளையும் உலகநாடுகள் செய்ய வேண்டும்.

ரோகிங்கியர்களுக்கு மியான்மரில் குடியுரிமை வழங்கப்படவும், அவர்களது நிலவுரிமை - வேலை வாய்ப்பு உரிமை உள்ளிட்ட அனைத்துக் குடிமை உரிமைகளும் மீட்கப்படவும், ஐ.நா. மேற்பார்வையில் உலக சமூகம் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்.

கேள்விமுறையற்று இன அழிப்புக்கு ஆளாகி உலக அநாதையாக ரோகிங்கியா இனம் தத்தளிப்பதை மக்கள் உரிமையில் அக்கறையுள்ள யாரும் அனுமதிக்கக் கூடாது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.