“கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே! தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
“கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
மோடி ஆட்சியின் ஆசியோடு இப்போது மீண்டும் “கங்கை - காவிரி இணைப்பு” பற்றிய பரப்புரைத் தொடங்கிவிட்டது. இந்த முறை இதனை மேற் கொண்டிருக்கிறவர் ஈஷா மையத்தின் ஜக்கி வாசுதேவ் ஆவார்!
தவறிய அழைப்பு கொடுத்து “ஆறுகளைக் காப்போம் - பாரதம் காப்போம்” என்ற தனது பரப்புரையில் மக்களை இணைத்துக் கொள்ளும் உத்தியில் ஜக்கி இறங்கியிருக்கிறார். அதற்கு, அவர் பயன்படுத்திய கைப்பேசி எண், அவர் யாருடைய தூண்டுதலில் இப்பரப்புரையை மேற்கொள்கிறார் என்பதைத் தெரிவித்துவிட்டது!
பாரதிய சனதாக் கட்சி உறுப்பினர் சேர்ப்பிற்காகப் பயன்படுத்திய அதே கைப்பேசி எண்ணைத்தான் இப்போது தனது பரப்புரைக்கு ஜக்கியும் பயன்படுத்தி யிருக்கிறார். பல்வேறு பெருங்குழும நிறுவனங்களின் நிதி உதவியோடு - ஓ.என்.ஜி.சி. அரவணைப்போடு இந்த பரப்புரையை ஜக்கி மேற்கொண்டார்.
பா.ச.க.வுக்கு நெருக்கமான இரசினிகாந்த், முதலமைச்சர் எடப்பாடிப் பழனிச்சாமி ஆகியோர் இப்பரப்புரையில் ஜக்கியோடு அணிவகுத்து நின்றார்கள்.
காவிரிக் கரை நெடுக இரு கரைகளிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் அகலத்திற்கும் மரம் நட்டால் மழை பெறலாம் என்ற திட்டத்தையும், கங்கை - காவிரி இணைப்பையும் தனது பரப்புரையில் ஜக்கி முதன்மைப்படுத்தினார்.
கங்கை இணைப்பு நடந்து, தமிழ்நாட்டு தண்ணீர்ப் பஞ்சம் தீர்த்துவிடும் என்று நம்பிய ஜக்கியின் அன்பர்கள் பலர் அப்பாவித்தனமாக இதில் பங்கு கொள்கின்றனர்.
காவிரிச் சிக்கல் மிக நெருக்கடியான சூழலில் நிற்கும்போது, அதில் தமிழ்நாட்டு மக்கள் கவனத்தைக் குவித்துவிடாதபடி “கங்கையை நினை - காவிரியை மற” என்பதைச் சொல்லாமல் சொல்லும் சதித் திட்டமே, “கங்கை - காவிரி இணைப்புப் பரப்புரை” ஆகும்!
பிரம்மபுத்திராவிலும் - கங்கையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, காவிரியில் வறட்சி நிலவும் முரண்பட்ட நிலையைப் பார்க்கிற பலர், மேற்சொன்ன வடநாட்டு ஆறுகளிலிருந்து “உபரி நீரை” தெற்கே கொண்டு வந்து, பற்றாக்குறையை போக்கிக் கொள்ளலாமே என்று அப்பாவித்தனமாகக் கருதிக் கொண்டு பலரும் இத்திட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை உற்று நோக்கினால், இத்திட்டத்தால் காவிரியில் தண்ணீர் கிடைக்காது, புதுப்புது சிக்கல்களின் வழியாக ஆரிய இந்தியாவிடம் தமிழ்நாடு மீளமுடியாமல் மாட்டிக் கொள்ளும் என்ற உண்மைப் புரியும்! ஆறு, வாய்க்கால், குளம், குட்டை அனைத்தும் பெருங்குழுமங்களின் கைக்குச் சென்று பாசனத்திற்கும், குடிக்கவும் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை அனைத்து மக்களுக்கும் வரும் என்பதும் புரியும்!
சிந்து - பிரம்மபுத்திரா - கங்கை உள்ளிட்ட வடநாட்டு ஆறுகளை, மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய தென்னாட்டு ஆறுகளோடு இணைக்கும் மாபெரும் திட்டமே “கங்கை - காவிரி இணைப்புத்” திட்டமாகும்.
முப்பது பெரிய ஆறுகளையும், எண்ணிலடங்காத சிற்றாறுகளையும் இணைத்து பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இணைப்புக் கால்வாய்கள் வெட்டி, குறைந்தது 35 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறைவேறும் திட்டமாகும் இது!
இதற்கு ஆகும் திட்டச் செலவு தற்போதைய மதிப்பீட்டில், 11 இலட்சம் கோடி ரூபாயாகும்!
வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே இத்திட்டம் பேசப்பட்டாலும், 2002 குடியரசு நாளில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இது குறித்து பேசியதற்குப் பிறகு, இது மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆயினும், இது குறித்து அடுத்த நடவடிக்கை எதுவும் இல்லாத நிலைமை இருந்தது.
இதனால், தொடுக்கப்பட்ட ஒரு பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012 பிப்ரவரியில், தான் அளித்த தீர்ப்பின் வழியாக “கங்கை - காவிரி இணைப்பு”த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கான செயல்திட்டக் குழு இந்திய நீர் வளத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது.
ஆயினும் இத்திட்டம் நிறைவேற வேண்டுமானால், வடமாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சீனா, பாக்கித்தான், நேப்பாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளும் சம்மதிக்க வேண்டும்.
இத்தீர்ப்பு வந்தவுடனேயே அன்றைய பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், “இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கங்கையிலிருந்து தண்ணீர் வராது, இரத்தம்தான் வரும்!” என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “தென்னக ஆறுகள் இணைப்பு’’ பற்றிப் பேசப்பட்டது. இதுகுறித்து இந்திய அரசு அமைத்த ஆய்வுக்குழு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை 2015 சூனில் சந்தித்தபோது, “மகாநதி - கோதாவரி இணைப்புக்கு ஒடிசா ஒருபோதும் சம்மதிக்காது’’ என்று அடித்துக் கூறிவிட்டார்.
ஏற்கெனவே இணைந்திருக்கும் காவிரி ஆற்றில் சட்டவிரோத அணை கட்டிக் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளையே காற்றில் பறக்க விடும் கர்நாடகத்தின் அடாவடிச் செயல்கள் தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று!
நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பின்னும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க மறுத்து வரும் கேரள அரசு, அந்த சிற்றணையை சீர் செய்ய தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் ஒரு சட்டி சிமெண்ட்டையும் எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து வருகிறது.
காவிரி ஒப்பந்தத்தில் தெளிவுபடக் குறிக்கப்பட்டிருந் தாலும், பாலாற்றில் புதிய புதிய அணைகளைக் கட்டி சொட்டு நீரும் தமிழ்நாட்டிற்கு வராமல் ஆந்திரா அடாவடி செய்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆறுகள் இணைப்புக்காக தமிழ்நாட்டில்தான் கையெழுத்து இயக்கம் நடத்த முடியுமே தவிர, ஒடிசாவில் அவர்களுடைய கட்சிப் பொறுப்பாளர்கள் ஒருவர் கூட இதில் கையொப்பமிட மாட்டார்கள்!
இதுதான் இந்தியாவின் நிலை!
இதற்கு சிலர், வேறொரு மாற்று வழி சொல் கிறார்கள். ஆறுகளை மாநில அதிகாரப் பட்டிய லிலிருந்து எடுத்து, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்படுத்தி “ஆறுகளை அரசுடைமையாக்குவது” (நதிகளை தேசியமயமாக்குவது) என்ற திட்டத்தை கூறுகிறார்கள்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு சிக்கல்களில் சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்பையும் செயல்படுத்த வேண்டிய சட்டக் கடமையிலிருக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டின் மீது இனப்பகை கொண்டு வஞ்சகம் செய்து வருவதை நாள்தோறும் சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக ஆறுகளே இந்திய அரசின் கைக்குப் போய்விட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரும் கிடைக்காது என்பது உறுதி!
ஆறுகள் இணைப்பு ஒருவேளை நிறைவேறினால், எண்ணிலடங்காத நீர் பகிர்வு வழக்குகள்தான் குவிந்து கொண்டிருக்கும்.
ஏற்கெனவே, கழிப்பறைகளைக் கூட பராமரிக்க முடியாத அரசுகள் தனியாரிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலிப்பதைப் பார்க்கிறோம். “தேசிய நெடுஞ்சாலை” பராமரிப்புப் பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 10 - 20 கிலோ மீட்டருக்கு ஒரு கட்டணச் சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து ஊர்திகளும் கொள்ளையாகக் கட்டணம் கட்டி, பயணம் நடத்த வேண்டிய அன்றாடத் தொல்லை இருப்பதைப் பார்க்கிறோம்.
இந்தியத் தொடர்வண்டித்துறை தொடர்வண்டி நிலையங்களை 99 ஆண்டு குத்தகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விட முடிவு செய்துள்ளதையும், இருப்புப் பாதைகளை தனியாரிடம் விட்டுவிட திட்டமிட்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இதே வரிசையில், கங்கை - காவிரி இணைப்புத் திட்டமும் வெளிநாட்டு மற்றும் இந்திய தனியார் பெருங்குழுமங்களுக்கு விடப்படும். ஏனென்றால், 11 இலட்சம் கோடி ரூபாய் என்று, இன்று திட்டமிடப் பட்டிருப்பது 35 ஆண்டுகளில் குறைந்தது இரண்டு மடங்காக செலவு பிடிக்கும். எனவே, தனியார் பெருங்குழுமங்களை ஈடுபடுத்தும் அரசு - தனியார் கூட்டாண்மைத் திட்டமாக இது அமையும் என்பது தெளிவு!
அதன்பிறகு குழாய்த் தண்ணீருக்கும், வாய்க்காலுக் கும் மீட்டர் பொருத்தப்பட்டு, தண்ணீர் விற்பனைப் பொருளாக காசு கொடுத்து தனியாரிடம் வாங்கிக் கொள்ள வேண்டிய அவலம் நேரும்!
ஆறுகளைப் பற்றிய சூழலியல் அறிவு கொஞ்சமும் இல்லாதவர்கள்தான், இத்திட்டத்தை ஆதரிக்க முடியும்.
கங்கை - பிரம்மபுத்திரா போன்ற ஆறுகளில் “உபரி நீர்” கிடைப்பதாகவும், அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளச் சேதத்திற்கு ஆறுகள் இணைப்புத் திட்டம் விடிவைத் தரும் என்றும் கூறித்தான் இத்திட்டமே முன்வைக்கப்படுகிறது.
இந்திய அரசின் நீர்வளத்துறை முன்னாள் தலைமைச் செயலாளர் இராமசாமி (அய்யர்) எச்சரிப்பது போல், “ஆறுகள் என்பவை குழாய்களின் தொகுப்புப் போன்றவை அல்ல! இவற்றை மனம் விரும்பியபடி வெட்டி, வளைத்து, இணைத்து தண்ணீரை எடுத்துச் செல்ல முடியாது”!
குடி தண்ணீர், பாசனம், தொழிற்சாலை, பிற தூய்மையாக்கல் பணிகளுக்கும் வளர்ப்புக் கால் நடைகளுக்கும், தேவையான தண்ணீரை கணக்கிட்டு, அதற்கு மேல் இருப்பவை எல்லாம் உபரித் தண்ணீர் என்றும், அவற்றை பற்றாக்குறைக்குப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இத்திட்டத்தை முன்வைப்பவர் கள் கூறுகிறார்கள்.
“ஆற்று நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது” என்ற பரப்புரையை வலுவாகச் செய்பவர்கள் இவர்கள்தான்!
ஆற்று நீர் கடலில் கலப்பது எந்தக் காலத்திலும் வீண் அல்ல, அது இயற்கைச் சமநிலைக்கு கட்டாயத் தேவை! ஆற்று நீர் தொடர்ந்து குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட வேகத்தில் இயற்கையாக கடலில் கலப்பதால்தான், கடலின் உப்புத்தன்மை அதிகரிக் காமல் இருக்கிறது. அதனால்தான் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
ஆற்று நீர் கடலில் கலக்கவில்லை என்றால், கடல் நீர் நிலப்பகுதிக்குள் நுழைந்து விடும். நிலத்தடி நீர் உப்பாகி விடும். அது குடிநீருக்கும் பயன்படாது, பாசனத்திற்கும் பயன்படாது!
ஆற்று நீர் கடலில் கலப்பதால்தான், கடலின் வெப்பச் சமநிலை பாதுகாக்கப்படுகிறது. அவ்வாறு பாதுகாக்கப்பட்டால்தான், கடற்பரப்புக்கு மேலே வானத்தில் வெப்பச்சலனமோ, காற்றழுத்த மாற்றங் களோ ஏற்பட்டு பருவமழைப் பொழியும். கடலில் பெருமளவு கலக்காமல், ஆறுகள் தடுக்கப்பட்டால் மழை குறைந்து, வறட்சியே மிஞ்சும்! பிறகு எதை வைத்து ஆறுகள் இணைப்பு நடத்துவது?
ஆறு ஓடி வரும் பாதை முழுவதிலும், வளமான மண்ணையும் நுண்ணுயிரிகளையும் அடர்ந்த மரங்களையும் உருவாக்கி, பாதுகாத்துக் கொண்டே வருகிறது. மனித குலத்தின் அறிவியல் வளர்ச்சியும், பண்பாட்டு வளர்ச்சியும் ஆற்றங்கரையையொட்டிதான் அதிகம் நடந்திருக்கிறது. மக்களின் அன்றாடப் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு, சடங்குகளுக்கு ஆறுகள் இன்றியமையாதவை!
இவ்வாறான பன்முகத்தன்மை கொண்ட ஆறுகளை நீர் சுமந்து வரும் குழாய்களைப் போல கருதிக் கொண்டு, திட்டங்கள் தீட்டுவது இயற்கையின் அடிப்படை களையே அறிந்து கொள்ளாத அறியாமையாகும்!
கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட மாபெரும் அணைகள் இடம்பெறுகின்றன.
உலகம் முழுவதும் இன்று பெரிய அணைகள் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தில் ஏரல் ஏரி, சீனாவின் மஞ்சளாறு போன்ற பெரிய திட்டங்களில் அணைகள் கட்டப்பட்டு, வறட்சியும் அழிவுமே மிஞ்சியது என்பதைக் கண்டறிந்த பிறகு, அறிவியல் உலகம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவிலும் பல மேற்குலக நாடுகளிலும் பெரிய அணைகளை செயலிழக்கச் செய்வது என்ற திட்டத்தை காலக்கெடு விதித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலும் இந்தப் படிப்பினை ஏராளம் உண்டு! தேறி அணைத் திட்டத்தால், உத்தராஞ்சல் வெள்ளப் பேரழிவை சந்தித்ததை நாடு கண்டது. அந்த அணை கட்டும்போதே, சூழலியலாளர்கள் மற்றும் அப்பகுதி பழங்குடி மக்கள் எச்சரித்தது உண்மையாகிவிட்டது!
மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், “இந்தியாவிலுள்ள பெரிய அணைகளில் 40 விழுக்காடு அணைகள் எங்கள் மகாராட்டிர மாநிலத்தில் இருக்கின்றன. அப்படி இருந்தும், எங்கள் மாநிலத்தில் 82 விழுக்காடு பகுதிகள் மழை நீரை நம்பியே இருக்கின்றன” என்று கூறுவதை கவனிக்க வேண்டும்.
இருபத்தைந்து - முப்பது ஆண்டுகள் சென்ற பிறகு, ஆறுகளில் அடித்து வரும் வண்டலால் அணைக் கட்டுகளின் கொள்ளளவு மிகவும் குறைந்து விடு கின்றன. அவற்றைத் தூர் வாருவது மிகப்பெரும் சிக்கலாக உருவாகி விடுகிறது.
எடுத்துக்காட்டாக, கங்கை ஆறு அடித்து வரும் வண்டல் மண்ணால் கொல்கத்தா துறைமுகம் மேடுதட்டிப் போகிறது என்பதற்காக இந்தியா முன்வைத்த திட்டம்தான், “பராக்கா அணைத் திட்டம்”.
ஆனால், பராக்கா அணை கட்டிய பிறகு, கொல்கத்தா துறைமுகத்தில் கங்கை ஆற்று மண் மலைபோல் குவிந்து, அவற்றை அள்ளுவதற்கு அந்தத் துறைமுகக் கழகம் பலகோடி ரூபாய் செலவழித்து படாதபாடுபடுகிறது. மறுபுறம், அந்த அணையைக் கடந்து அந்த ஆறு பாயும் வங்காளதேசத்தில், தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சி ஏற்பட்டு, இந்தியா வங்காளதேசத்திற்கிடையில் தொடர் பதட்டம் நீடிக்கிறது.
சட்லஜ் - யமுனா கால்வாய்த் திட்டம் எதிர்பார்த்த படி தெற்கு அரியானாவுக்கு தண்ணீர் தரவில்லை. பியாஸ் தண்ணீரில் 50 விழுக்காடு சட்லஜ் ஆறுக்குள் விடப்பட்ட பின்னும், நிலைமை மாறவில்லை! மறுபக்கம், பஞ்சாப் உழவர்களும் உரிய பயன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
கங்கை - காவிரி இணைப்பின் வழியாக பெரு வெள்ளத்தின்போது, கங்கையில் புரண்டோடும் வெள்ள நீரைக் கால்வாய் மூலம் தென்னிந்தியாவுக்குத் திருப்பி விடலாம், அதன் மூலம் வெள்ளக் கட்டுப்பாடும் நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், உண்மை நிலையில் வெள்ளக் காலத்தில் கங்கையில் சாதாரணமாக வினாடிக்கு 2 இலட்சம் கன அடி தண்ணீர் புரண்டோடுகிறது. இந்த இணைப்புத் திட்டத்தில், வெட்டப்படும் கால்வாயில் அதிகம் போனால் வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் விடலாம். இதுபோல், எவ்வளவு கால்வாய் வெட்டி னாலும் கங்கையின் வெள்ள நீர் வடிந்துவிடாது.
உண்மையில், இத்திட்டம் நிறைவேறி முடிக்கும் போது, கங்கை ஆற்றில் இப்போதுபோல் தண்ணீர் வருமா என்பதே ஐயத்திற்கு உரியது!
கங்கை ஆறு ஊறும் இடமான நேப்பாள நாட்டிலுள்ள இமயத்தின் பனிமலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்குள் இந்தப் பனிமலைகள் வற்றிப்போய் மேலே 14 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றுவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, இத்திட்டத்தை முன்வைப்போர் சொல்கிற கணக்குப்படி கூட “உபரி நீர்” எப்போதும் கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியது!
பிரம்மபுத்திரா, சீனாவிலிருந்து உற்பத்தியாகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதென்றால் சீனாவின் இசைவு பெற வேண்டும். சிந்து நதியை இத்திட்டத்தில் இணைப்பதற்கு பாக்கித்தானின் ஏற்பு பெற வேண்டும். இத்திட்டத்தின் இன்னொரு பெரிய ஆறான மகாக்காளி ஆற்றை இணைப்பதற்கு நேப்பாளத்தின் சம்மதம் பெற வேண்டும். டீஸ்டா ஆறை இணைக்க வங்கதேசம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்புதல் பெறுவது முயல் கொம்பே ஆகும்! ஒருவேளை இந்நாடுகளின் ஒப்புதல் பெற்று, இத்திட்டத்தை செயல்படுத்தினாலும் இதன் காரண மாகவே இந்தியா தன்னைச் சுற்றியுள்ள இந்த நாடுகளோடு போர் பதற்றத்தோடு நாட்களைக் கடத்த வேண்டியிருக்கும். இதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருளியலை இராணுவமயமாக்குவது, மக்களைக் கண்காணிப்பது என்பது அதிகப்படும்.
கங்கை - காவிரி இணைப்புக்காக பெரிய அணைகள் கட்டப்பட்டால், அவற்றில் குறைந்தது 21,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கிராமங்களும், ஊர்களும், காடுகளும் மூழ்கும். குறைந்தது, 20 இலட்சம் மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளி யேற்றப்படுவார்கள். அவர்களுக்கான மறு குடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு தொடர் செலவினங்கள் மிகப்பெரிது!
இந்திய அரசுக்கும், அது சார்ந்த ஆய்வாளர் களுக்கும் இந்த அடிப்படை உண்மைகள் தெரியாமல் இல்லை.
இதை அவர்கள் முன்வைப்பதற்கு முதன்மையானக் காரணம், காவிரிச் சிக்கலிலிருந்து தமிழர்கள் கவனத்தைத் திருப்புவதற்கும், நாடு முழுவதும் எழுந்துள்ள தண்ணீர் பற்றாக்குறை - தொழிற் சாலைகளின் தண்ணீர் திருட்டு - தண்ணீர் தனியார்மயம் ஆகிய சிக்கல்களிலிருந்து கவனத்தைத் திருப்புவதற்கும் ஆகும்!
இது செயல்படுத்த முடியாத திட்டம் என்பது தெரிந்தே, திசைதிருப்பும் சூழ்ச்சியாக மீண்டும் மீண்டும் இதை முன்வைக்கிறார்கள்.
இத்திட்டத்தை மிகப்பெரும் பரப்புரை மூலமாக, மக்களிடம் நிலைநாட்டி அந்த ஏற்பின் அடிப்படையில் ஆறுகள் அனைத்தையும் இந்திய அரசின் உடை மையாகப் பறித்துக் கொண்டு, ஒட்டுமொத்தமாக நீர் ஆதிக்கத்தை இந்திய அரசின் கைகளுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
குறிப்பாக, தொடர்ந்து தண்ணீர் பகிர்வு சிக்கலில் தள்ளாடிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு இது எளிய குறுக்கு வழியாகப் படும் வகையில் கொண்டு செல்கிறார்கள். இதன் வழியாக உருவாகும் இந்திய அரசின் ஆற்று நீர் ஆதிக்கம், மிகக்கடுமையாகத் தமிழ்நாட்டையே பாதிக்கும். “தண்ணீர் காட்டி” ஆரிய இந்திய அரசின் அடிமையாகத் தமிழ்நாட்டை நசுக்குவதற்கு ஆற்று நீர் அதிகாரம் இந்திய அரசுக்குப் பயன்படும்!
இந்தப் பெரும்திட்டத்தின் பகுதித் திட்டங்கள் என்ற பெயரால், பெரிய அணைக்கட்டுகள் கட்டினால், அது பல பெருங்குழுமங்களுக்கு கொள்ளை இலாப வாய்ப்பை வழங்கும். அரசியல் கட்சிகளின் ஒட்டுண்ணி களுக்கு கையூட்டுப் பணம் கோடி கோடியாகக் கிடைக்கும்!
தண்ணீர் தனியார்மயமாவது எளிதாகும். அனைத்துத் தேவைக்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீர் முதலாளிகள், ஊதிப் பெருப்பார்கள்.
எனவே, எந்த வகையில் நோக்கினாலும் “கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்” தமிழ்நாட்டை அழிக்கும் திட்டமே தவிர, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கும் திட்டமல்ல!
உலகெங்கும் பெரிய பெரிய அணைகள் கட்டும் திட்டத்தை நாடுகள் கைவிட்டுவிட்டு, சிறிய நீர்த் திட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அதுதான் தேவை!
அங்கங்கே 2 ஆ.மி.க. (டி.எம்.சி.) - 3 ஆ.மி.க. அளவில் சிறிய அணைகள், தடுப்பணைகள் கட்டுவது, மழைப் பொழிகிற இடத்திலேயே அதை சேமித்துப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக் குவது, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் இயற்கையோடு இயைந்த வேளாண்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படாத தொழில் வளர்ச்சி, அறிவியல் வழிப்பட்ட கட்டட அமைப்புகள் என்ற ஒருங்கிணைந்த வளங்குன்றா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசின் முகவர்களான ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் திசைதிருப்பல் களுக்கு ஆளாகிவிடாமல், காவிரி உரிமை உள்ளிட்ட ஆற்று நீர் உரிமைகளை மீட்பதற்கும், நீர் நிலைகளைக் காப்பதற்கும், காடுகளைக் காப்பதற்கும் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம் இது!
(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 அக்டோபர் 16-30 இதழில் வெளியானது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment